ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சி: ஒத்திகையில் இரு விமானங்கள் மோதி விமானி ஒருவர் பலி

ஒத்திகையில் இரு விமானங்கள் மோதி விமானி ஒருவர் பலி

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/AFP/Getty Images

எலஹாங்கா விமான தளத்திற்கு வெளியே இரண்டு விமானங்கள் மோதி, தரையில் விழுந்ததில், இந்திய விமானப்படையின் சூரியகிரன் ஏரோபாட்டிக்ஸ் அணியின் விமானி ஒருவர் இறந்துள்ளார்.

நாளை புதன்கிழமை தொடங்கவுள்ள ஏரோ இந்தியா 2019ம் ஆண்டு சாகச விமான கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நாளை நடைபெறும் ஏரோ இந்தியா விமான கண்காட்சிக்காக பயிற்சி எடுத்துகொண்டிருந்தபோது, இந்திய விமானப்படையின் கூரியகிரன் ஏரோபாட்டிக்ஸ் அணியின் ஹாக் விமானம் முற்பகல் 11.50 மணியளவில் மோதி விபத்திற்குள்ளாகியது.

அதில் 3 விமானிகள் இருந்தனர். 2 பேர் வெளியேறி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 3வது விமானி கடுமையாக காயமடைந்தார். அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் சொத்துகள் சேதம் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விசாரணை நீதிமன்றம் புலனாய்வு மேற்கொள்ளும் என்று இந்திய விமான படையின் அறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/AFP/Getty Images

இரண்டு விமானிகள் வெளியே எடுக்கப்பட்டதாக தொடக்க தகவல்கள் தெரிவித்தன. ஆனால், ஒரு விமானி இறந்துவிட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்துள்ளார்.

"இந்த இறப்பு உறுதி செய்யப்பட்டாலும், அவரது பெயர் மற்றும் பிற விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்பட்ட வேண்டியுள்ளன" என்று பெயர் சொல்ல விரும்பாத கால்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

நாளை புதன்கிழமை நடைபெறும் தொடக்க விழாவுக்காக ஒத்திகை நடத்திய இந்த விமானங்கள் வான்பரப்பில் மோதி, எலஹாங்கா புதின நகர எல்லைக்குள் அமைந்துள்ள காலியான குடியிருப்பு இடத்தில் விழுந்தது.

"உள்ளூர்வாசி ஒருவருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவொரு குடியிருப்பு இடமாகும். இந்த பகுதியில் உயிரிழப்பு எதுவும் இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டம் " என்று கூடுதல் காவல்துறை ஆணையர் (கிழக்கு) பிபிசியிடம் கூறியுள்ளார்.

இந்த விமான விபத்தை தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைசெய்யும் ஹாரிஷ் நாகராஜ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பார்த்துள்ளார்.

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/AFP/Getty Images

"இவை எல்லாம் மிக விரைவாக நடந்துவிட்டன. இருசக்கர வாகனத்தில் நான் சென்று கொண்டிருந்தேன். பயங்கர சப்தம் கேட்டது. அடுத்த வினாடியில் வெடி சப்தம் கேட்டது. மேலே பார்த்தபோது, இரண்டு பாரசூட்கள் கீழே வருவதை பார்த்தேன். ஒரு பாரசூட் திறக்காமல் இருந்ததையும் பார்த்தேன். அடுத்த நிமிடத்தில் ஒரு விமானி கட்டடத்தில் மோதி கீழே விழுந்தார். அவருக்கு உதவி செய்ய நான் விரைந்து சென்றேன். அவரது பாரசூட்டை விரைவாக கழற்றினேன். அதிக ரத்தம் வெளியேறியது. அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்ந்தவுடன் அவர்களிடம் பாரசூட்டை கொடுத்தேன். எனது சட்டை எல்லாம் ரத்தமாகிவிட்டது என்று பிபிசியிடம் தொலைபேசியில் தெரிவித்தார் ஹாரிஷ் நாகராஜ்.

கர்நாடக விமான படை டிஜிபி எம்.என் ரெட்டி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எலஹாங்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்.இந்திய விமான படையின் விமானி ஒருவர் இறந்துவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. 2 பேர் லேசாக காயமடைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எலஹாங்கா விமானத்தளம் பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இது பெங்களூரு நகருக்கு வெகு தொலைவில் உள்ளது.

பல லட்சக்கணக்கான மக்கள் பெங்களூருவில் குடியேறியதை தொடர்ந்து பழைய விமானத்தளமான ஹிந்துஸ்தான் ஏரோநட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச் ஏ எல்) போல, விரிவான நகரத்தின் ஒரு பகுதியாக இந்த விமானத் தளமும் உருவாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :