நாடாளுமன்ற தேர்தல் 2019 : அதிமுக - பாஜக கூட்டணி உதயம் - பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு

எடப்பாடி - மோதி

பட மூலாதாரம், AFP Contributor

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிகள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாமகவுடன் பாஜகவும் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற சந்திப்பில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

இந்த சந்திப்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் பாஜக தரப்பில் முரளிதர்ராவ், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.

''அதிமுக - பாஜக இடையே மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது''

21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கும் பாஜக ஆதரவை தெரிவிக்கும்'' என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

''இந்த சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறோம். நாற்பதும் நமக்கே'' என பியூஷ் கோயல் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

''ஜெயலலிதாவுடன் ஜூலை 2016-ல் சந்தித்தபோது அது எனக்கு மிகவும் இனிமையானதாக இருந்தது. அந்த நினைவுகள் தற்போது மீண்டும் வந்துபோனது. பாஜக, அதிமுக, பாமக மற்றும் இக்கூட்டணியில் இணையும் அனைத்து கட்சிகளும் வெற்றிக்காக பாடுபடுவோம். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளில் வெல்வோம்'' என்றார் பியூஷ் கோயல்.

முன்னதாக இன்று காலை அதிமுக - பாமக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. ''வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக 7 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. மேலும் ஒரு மாநிலங்களவை இடமும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது'' என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.

''தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும்போது அங்கு அதிமுகவுக்கு பாமக தனது முழு ஆதரவை அளிக்கும் என்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து கொள்கிறோம்'' என்று ஓ.பன்னீர்செல்வம் மேலும் குறிப்பிட்டார்.

பியூஷ்கோயல் - விஜயகாந்த் சந்திப்பு

அதிமுகவுடன் பாஜகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றார் பியூஷ்கோயல்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்கவே அவரை சந்திக்கச் சென்றதாக தெரிவித்தார். உடல்நிலை குறித்து மோதி, அமித்ஷா கேட்டறிய அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.

பாமக, பாஜகவுடன் அதிமுகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக இக்கூட்டணியில் இணையுமா, அக்கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதற்கான விடை பியூஷ்கோயல் வருகையின் முடிவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :