"நீ ஸ்லிம்மா இல்ல": புறக்கணித்த கணவனை வென்று காட்டிய பெண்
- அறவாழி இளம்பரிதி
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Cuts and Glory
சங்க காலத்தில் பெண்களின் தலைமயிர் தொடங்கி கால்கள் வரை ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பாடல்களை கவிஞர்கள் தீட்டி வைத்திருந்தார்கள். ஆனால், பெண்களுக்கான நளினம், உடல் என அனைத்தையும் உடைத்தெறிந்திருக்கிறார் சென்னையை சேர்ந்த பெண் பாடி பில்டர் ரூபி பியூட்டி.
கடந்தாண்டு, அசாமில் நடைபெற்ற தேசியளவிலான பாடி பில்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் ரூபி.
சென்னையில் ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில், பயிற்சியாளராகவும், ஸும்பா நடன பயிற்சியாளராகவும் பணியாற்றி வரும் ரூபி, தான் கடந்த வந்த பாதையை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.
தந்தையின்றி வளர்ந்தேன்
"நான் பிறந்தது பொன்னேரியில். அப்பா கிடையாது. அம்மா மட்டுமே. அம்மாவுக்கு குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் அதனால் வேலை செய்துகொண்டிருந்தார். என்னுடைய சிறுவயதில் நான் நிரந்தரமாக ஒரே வீட்டில் வசித்ததில்லை. சித்தி வீடு, பெரியம்மா வீடு என்று மாறி மாறி பந்தாடபட்டேன். மிகவும் கடினமான காலக்கட்டம் அது," என்று இளம் பருவத்தை நினைவுக்கூர்கிறார் ரூபி.
2000ஆம் ஆண்டு சென்னைக்கு தனது தாயுடன் குடிபெயர்ந்ததாக கூறும் ரூபி, வாழ்க்கையில் அடுத்த என்ன என்ற தேடுதலே தன்னை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதாக கூறுகிறார் ரூபி.
மக்களவை தேர்தல் 2019 - தமிழ்நாடு செய்திகள்:
- தேமுதிக தலைவர் விஜயகாந்த், டிடிவி தினகரன் ஆகியோர் வாக்களிப்பு #LIVE
- 99 வயதிலும் வில்லாய் வளையும் நானம்மள் தனது வாக்கை பதிவு செய்தார்
- கழுதையில் சென்ற வாக்கு இயந்திரங்கள்: தேர்தலை புறக்கணித்தார்களா மலை கிராம மக்கள்?
- மக்களவைத் தேர்தல் 2019: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
- தேர்தலுக்கு வைக்கப்படும் 'இங்க்' எங்கு தயாராகிறது?
திருமண வாழ்க்கை கசந்தது ஏன்?
தனது திருமண வாழ்க்கை பற்றி நம்மிடம் பகிர்ந்த கொண்டார் ரூபி. "2011ஆம் ஆண்டு எனக்கு திருமணம் முடிந்தது. சராசரி பெண்ணைப் போலவே திருமணத்துக்குபின் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும், என்னுடைய வாழ்க்கை வெறுமையாகவே செல்வதாக உணர்ந்தேன். அதனால், ஆசிரியர் பயிற்சி பெற்று என் மகன் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணிக்கு சேர்ந்தேன்," என்கிறார் ரூபி பியூட்டி.
தனது மகனுக்கு இரண்டரை வயது இருக்கும்போது தனது மண வாழ்க்கை கசந்ததற்கான காரணத்தை விவரித்தார் ரூபி. "திருமணத்திற்கு பிறகு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தார் கணவர். பிடித்த ஆடையை போட முடியாமல், சுய அலங்காரம் செய்துகொள்வதைகூட அவர் விரும்பவில்லை. அவர் வெறுத்ததையெல்லாம் நானும் வெறுத்தேன். ஆனால், ஒருநாள் அவர் என்னையே வெறுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை."
"இவ்வாறு நாட்கள் கடந்து சென்று கொண்டிருந்தபோது, கணவர் என்னிடம் ஒழுங்காக முகம் கொடுத்து பேசவில்லை. அதனால் என்ன காரணம் என்று அறிய அவரிடமே நேரிடையாக கேட்டேன். அதற்கு அவர், நான் குண்டாக இருப்பதால் என் மீது ஆர்வம் போயிவிட்டதாக கூறினார். அதுதான் என்னையும், என்னுள் இருந்த தன்னம்பிக்கையும் சுக்குநூறாக உடைத்தது. வாழ்க்கையில் அன்பு, பாசம் இதெல்லாம் பொய்யா? எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாழ முடியாதா என்று எனக்கு தோன்றியது. ஏற்கனவே, விரக்தியில் இருந்த எனக்கு கணவரின் வார்த்தைகள் மிகுந்த வேதனையை அளித்தது. நானும் இதுபோல் அவரது உடல் பருமனை கிண்டல் அவர் மீது ஆர்வமில்லை என்று கூறினால் அவர் ஏற்றுக் கொண்டிருப்பாரா?" என்று தழுதழுத்தார் ரூபி.
"4 மாதத்தில் 26 கிலோ குறைத்தேன்"
கணவரின் கேலியால் மனமுடைந்த ரூபி, தீவிர நடை பயிற்சியை மேற்கொண்டாதாக கூறுகிறார். நான்கு மாதங்களில் 78 கிலோ எடையிலிருந்து 52 கிலோவுக்கு குறைத்ததாக கூறும் அவர், தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்ததாகவும், ஜங்க் ஃபுட்ஸ்களை முற்றிலுமாக தவிர்த்ததாகவும் கூறுகிறார் ரூபி.
பட மூலாதாரம், Cuts and Glory
தினசரி உணவில் அரிசியை தவிர்த்து காய்கறியை அதிகம் சேர்த்ததால் தன்னால் 26 கிலோ எடையை குறைக்க முடிந்ததாக கூறுகிறார் ரூபி.
நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர்
"அவர் என்னை கேலி செய்துவிட்டார் என்பதற்காக தான் நான் நடைபயிற்சி செய்து எடையை குறைத்தேன். ஆனால், எடை குறைந்தவுடன் என்னை அரவணைப்பதற்கு பதிலாக அவரது சந்தேக பார்வையை வீச ஆரம்பித்தார். நானும், அவரும் ஒரு ஜிம்மில் சேர்ந்தோம்."
"அங்குதான் பிரச்சனை வெடித்தது. எனக்கு தம்பி வயது இருக்கும் ஒரு ஜிம் பயிற்சியாளருடன் என்னை ஒப்பிட்டு பேசினார். அதுதான் என்னுடைய மண வாழ்க்கையின் இறுதி அத்தியாயமாக அமைந்தது. வீட்டில் பிரச்சனைகளும் அதிகரித்தன. எங்கள் இருவரின் பிரச்சனை என்னுடைய மகனை பாதிக்கக்கூடாது என்று நினைத்தேன். என் மீது என்னுடைய கணவருக்கு அன்பு இல்லாத போது நான் ஏன் அவருடன் போலியாக பழக வேண்டும். அதனால், பரஸ்பர முறையில் கணவரை விட்டு பிரிய முடிவெடுத்தேன்," என்கிறார் ரூபி.
மனைவியை குறை சொல்லாதீர்கள் ப்ளீஸ்
"நிறைய குடும்பங்களில் பெண்கள் ஆண்களால் மட்டம் தட்டப்படுகிறார்கள். என்னறைக்கும், மனைவியை பிறர் முன்னிலையில் கேலி பேச வேண்டாம். யார் முன்பும் மனைவியையும், குழந்தையும் விட்டுக்கொடுக்க கூடாது. நான்கு ஆண்கள் முன்னிலையில் மனைவியை கேலி செய்வது அவர்களுக்கு எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை தரும் என்று உங்களுக்கு தெரியாது. மனைவியை முழுமையாக நம்புங்கள். வெளியே செல்லும்போது, மனைவியை பாருங்கள் மனைவியை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று சந்தேகப்பட்டால் வீட்டில் பிரச்சனைதான் வரும்," என்கிறார் ரூபி பியூட்டி.
மகன் பெருமைப்பட வேண்டும்
"என்னுடைய அம்மா என்னை தனியாகத்தான் சிரமப்பட்ட வளர்த்தார்கள். பிள்ளையை தனியாக வளர்க்கும் தாயின் வேதனை என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய இலக்கு ஒன்று மட்டும்தான் இருந்தது. என்னுடைய மகன் கருத்து தெரியும் வயதில் அவர் என்னை நினைத்து பெருமைப்பட வேண்டும். அதுதான் நான் பெரிதும் விரும்பியது," என்கிறார் ரூபி பூரிப்போடு.
உடற்பயிற்சியை பகுதிநேர பணியாக செய்யலாம் என்று தான் நினைத்ததாக கூறும் ரூபி, தென்னிந்தியாவில் பாடி பில்டிங் இல்லாததை உணர்ந்ததாகவும், சரியான ஆலோசனை வழங்க சரியான பயிற்சியாளர்கள் இல்லாமல் தவித்ததாகவும் குறிப்பிட்டார்.
பாடி பில்டிங்கில் சாதித்தது எப்படி?
நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த ஆலோசனை மூலம் பாடி பில்டங்கை முழு நேரமாக எடுத்ததாக கூறும் ரூபி, தொடக்கத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பெரும் அவமானங்களை சந்தித்ததாகவும் கூறுகிறார்.
பட மூலாதாரம், Cuts and Glory
"ஆண்கள் தங்கள் உடம்பை பாடி பில்டிங்கிற்கு தயார் செய்ய அவர்கள் உட்கொள்ளும் உணவைவிட மூன்று மடங்கு அதிகமான உணவை பெண்கள் உட்கொள்ள வேண்டும். போட்டிக்கு தயாராவதற்கு முன்பு, நான் தினமும் மூன்று கிலோ இறைச்சி உண்பேன். பாடி பில்டிங் அல்லது உடற்பயிற்சிக்கு செய்ய வரும் பெண்கள் முதலில் தங்கள் உடலை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இதில் வெற்றிப்பெற முடியும்," என்கிறார் ரூபி.
சர்வதேச போட்டிகளை இலக்காக கொண்டிருக்கும் ரூபி தற்போது போதிய ஸ்பான்சர்கள் இல்லாமல் இருப்பதாகவும், சிலர் ஸ்பான்சர்கள் பெயரில் தனது சூழ்நிலையை வேறு மாதிரியாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்ததாகவும் வேதனைப்பட்டார் ரூபி பியூட்டி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்