புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடலுக்கு அருகில் சிரித்தாரா யோகி? #BBCFactCheck
- உண்மை பரிசோதிக்கும் குழு
- பிபிசி

பட மூலாதாரம், NurPhoto
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்திய கொடி போர்த்திய உடலின், அருகில் மூன்று அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சிரிப்பது போலான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
காங்கிரஸ் ஆதரவு பக்கமான ''காங்கிரஸ் அச்சி தீ யார்'' (காங்கிரஸ் நன்றாக இருந்தது) இந்த வீடியோவை புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பகிர்ந்துள்ளது.
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 46 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த காணொளி யூ-ட்யூபிலும் உள்ளது. அந்த வீடியோவில் உள்ள செய்தி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் உடலின் முன் யோகி சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறது.
நமது ஆய்வில் இந்த வீடியோ 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டது என்றும், புல்வாமா தாக்குதலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் தெரியவந்துள்ளது.
வீடியோவின் உண்மைநிலை
இந்த் வீடியோ உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரியின் இறுதிச் சடங்கில் எடுக்கப்பட்டது.
இந்த வீடியோ 2018ஆம் ஆண்டு அதிகமாக பகிரப்பட்ட பிறகு பாஜகவுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது. அந்த வீடியோவில் யோகி ஆதித்யநாத்தை தவிர, பிகார் ஆளுநர் லால்ஜி டண்டன், உத்தரப்பிரதேச அமைச்சர்கள் அஷுடோஷ் டண்டன் மற்றும் மோசின் ராசா ஆகியோரும் திவாரியின் உடலுக்கு அருகில் சிரித்துக் கொடிருப்பார்கள்.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பல்வேறு போலி செய்திகள் சமூக ஊடகங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த தாக்குதல் பல தசாப்தங்கள் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படைகள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் ஆகும். மேலும் சில அதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் புல்வாமா தொடர்பாக எந்த புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
புல்வாமா குறித்த தவறான செய்திகள்
புல்வாமா தாக்குதல் ஒரு கொடூரமான தாக்குதல் என்றபோதும் சில சமூக ஊடகக் குழுக்கள் போலியான பல புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
புல்வாமா தாக்குதலுடன் தொடர்புடையதாக, சமூக ஊடகங்களில் சத்திஸ்கரில் நடைபெற்ற தாக்குதல், சிரியா மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதல்கள் ஆகியவற்றின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம் - இம்ரான் கான்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்