காதலி முத்தம் தர விதித்த விநோத நிபந்தனை - பர்தா அணிந்து சுற்றிய மாணவர்

முத்தத்துக்காக பர்தா அணிந்து சென்னையில் சுற்றிய மாணவர்

பட மூலாதாரம், AMER HILABI

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினத்தந்தி: 'காதலியின் முத்தத்துக்காக பர்தா அணிந்து சுற்றிய மாணவர்'

சென்னையில் காதலி முத்தம் தருவதாக கூறியதால், பர்தா அணிந்தவாறு சுற்றித்திரிந்த மாணவரை, திருடன் என்று நினைத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் சக்திவேல். ஐ.டி.ஐ. மாணவரான இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 14-ந் தேதி காதலர் தினத்தன்று, சக்திவேல் மெரினா கடற்கரையில் காதலியை சந்தித்தார். அப்போது காதலியிடம் அன்பான முத்தம் ஒன்றை காதலர் தின பரிசாக கேட்டார்.

முத்தம் கொடுப்பதற்கு, சக்திவேலின் காதலி நிபந்தனை விதித்தார். பர்தா அணிந்து பெண் வேடம் போட்டு ராயப்பேட்டையில் இருந்து மெரினா கடற்கரை வரை நடந்து வந்தால் முத்தம் தருவதாக காதலி சொன்னார். இந்த நிபந்தனைக்கு சக்திவேல் ஒப்புக்கொண்டார்.

பட மூலாதாரம், Bernard Annebicque

காதலியின் நிபந்தனையை சக்திவேல் நிறைவேற்ற முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை, ராயப்பேட்டையில் உள்ள தனது காதலியின் வீட்டின் அருகில் இருந்து, பர்தா அணிந்து பெண் வேடம் தரித்து சக்திவேல் மெரினா நோக்கி நடந்து சென்றார். மெரினாவில் அவரது காதலி காத்திருந்தார்.

ஐஸ்அவுஸ் பகுதியில் பர்தாவுடன் நடந்து சென்ற சக்திவேலை பொதுமக்கள் சந்தேகத்துடன் பார்த்தனர். அவர் காலில் அணிந்து இருந்த செருப்பு அவரை ஆண் என்று அடையாளம் காட்டியது. திருடனாக இருக்கலாம் என பொதுமக்கள் நினைத்தனர்.

உடனே அவரை பிடித்த பொதுமக்கள் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சக்திவேலிடம் விசாரணை நடத்தியபோது, தனது காதலி விதித்த நிபந்தனையை விவரித்து இருக்கிறார்.

இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி உள்ளனர்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

இந்து தமிழ்: இன்றைய கார்ட்டூன்

பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: 'அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா தேமுதிக?'

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images

"2019 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீட்டிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை மக்களவைத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து அறிவிக்கும் பேச்சுவார்த்தையை முதல் கட்சியாக அதிமுக செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாக அதிமுக - பாமக இடையேயான கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதிமுக தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பாமக தரப்பில் அதன் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை முடிவில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே, அதிமுக - தேமுதிக உடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேமுதிக தரப்பில் யாரும் அங்கு வரவில்லை. இதற்கிடையே, அதிமுக வுடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட பின்னர், அங்கிருந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்ற பியூஷ் கோயல், விஜயகாந்த் மற்றும் தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பாக பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்ததாகப் பியூஸ் கோயல் பேட்டியளித்தார்.

ஆர்வமில்லாத அதிமுக: இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என்றே கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து ஓய்வெடுத்து வருவதால், தேர்தல் பிரசாரங்களிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. இது தேமுதிக தொண்டர்களிடையேயும், நிர்வாகிகளிடையேயும் பெரும் சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயகாந்த் பிரசாரத்துக்கு வரமுடியாது என்பதால், தேமுதிக-வுக்கு ஒதுக்கப்படும் இடங்களிலும் அதிமுக தலைவர்களே முழுமையாகப் பிரசாரம் செய்யும் நிலை ஏற்படும். இதனால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எண்ணியும், அதிமுகவுக்கு எதிரான தேமுதிகவின் கடந்த கால செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டும், தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பாமகவுக்கு ஒதுக்கியதுபோல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், குறைந்தபட்சம் 4 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்கவேண்டும் என தேமுதிக எதிர்பார்க்கிறது. ஆனால், தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தர அதிமுக தயாராக இல்லை.

இதுபோன்ற காரணங்களால், அதிமுக - பாமக- பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது சந்தேகம்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்." - இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

இந்து தமிழ்: '5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு'

5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. தேர்வு மையம், வினாத்தாள் தயாரிப்பு உட்பட முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"இந்தியா முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறை இப்போது அமலில் உள்ளது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக கூறி 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வியாண்டு இறுதியில் கட்டாய தேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இடை நிற்றல் உயரும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தமிழகத்திற்கு அதிக நிதி கிடைக்கும்'

பாரதிய ஜனதாவுடன் வைத்துள்ள கூட்டணியின் காரணமாக தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து அதிக நிதி இனி கிடைக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

"முன்பு நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். அதன் காரணமாக நம்மால் விருப்பட்ட நிதியை பெற முடியவில்லை. ஆனால், இப்போது நாம் பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறோம். நல்லுறவும் இருக்கிறது. இப்போது நம்மால் 50 ஆயிரம் கோடி வரை நிதியை பெற முடியும்" என அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்தியாவால் ஏன் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :