மக்களவை தேர்தல் 2019: கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல் - வெல்லும் கூட்டணி எது?

  • ஆர்.மணி
  • மூத்த பத்திரிகையாளர்
Stalin Palaniswamy

பட மூலாதாரம், Facebook

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)

இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டு பிரதான கூட்டணிகள் தமிழகத்தில் உருவாகிவிட்டன. அஇஅதிமுக தலைமையில் பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்த கூட்டணியும், திமுக தலைமையில் காங்கிரஸ் கூட்டணியும் தயாராகிவிட்டன.

ஜெயலலிதா இருக்கும் போது எப்படி அஇஅதிமுக முதலில் தான் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையையும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையையும் அறிவிக்குமோ அதுபோலவே இந்த முறையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக வும் கூட்டணி பற்றிய அறிவிப்பை பிப்ரவரி 19ம் தேதி வெளியிட்டுவிட்டது.

இதன்படி பாமகவுக்கு ஏழு தொகுதிகளும், பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன. இதற்கான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமியும், பாமகவின் தலைவர் டாக்டர் ராமதாஸூம் முறையாக அறிவித்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமியும், மூத்த பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலும் அறிவித்தனர்.

அடுத்த நாள் பிப்ரவரி 20ம் தேதி திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸூக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களை திமுக ஒதுக்கியது. இதற்கான முறையான அறிவிப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும் வெளியிட்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரண்டு இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவையும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிலைமை இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வரையில் என்னவென்று தெரியவில்லை.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக - தேமுதிக - பாமக - மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேமுதிக தலைமையில் இந்த கூட்டணி அமைந்திருந்தது. ஆனால் இந்த முறை அநேகமாக தேமுதிக, பாஜக கூட்டணியில் இடம் பெறாது என்று பலமான தகவல்கள் அஇஅதிமுக தரப்பிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.  இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அஇஅதிமுக வின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.  பாமகவின் கூட்டணியை அஇஅதிமுக அறிவித்தது.  பாஜக வுடனான கூட்டணியையும் அஇஅதிமுக அறிவித்தது.  ஆனால் அஇஅதிமுக தேமுதிக பற்றிப் பேசவில்லை.

அதே சமயம் பியூஷ் கோயல் அஇஅதிமுக வுடனான கூட்டணி அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் விஜயகாந்தை பார்த்து, அவருக்கு சால்வை அணிவித்து அவரிடம் நலம் விசாரித்தார்.  அதன் பிறகு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் பிரேமலதாவின் தம்பி சுதீஷூடன் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் கூட்டணி பற்றி இரு தரப்பிடமிருந்தும் எந்த தகவலும் இல்லை.  இதனிடையே தேமுதிக திமுக வுடன் பேசத் துவங்கியிருக்கிறது என்று பிப்ரவரி 20 ம் தேதி காலை முதல் தகவல்கள் கசியத் துவங்கின. ஆனால் இதனை திமுக தலைவர் ஸ்டாலின் அன்று இரவே மறுத்து விட்டார். தேமுதிக திமுக வுடன் வரவிருக்கிறதா என்று செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ''தேமுதிக அப்படி வந்தால் உங்களுக்கு முதலில் சொல்லி அனுப்புகிறோம்'' என்று கூறிவிட்டார். இந்த முறை திமுக மற்றும் அஇஅதிமுக இரண்டும் சேர்ந்து தேமுதிக வை கழற்றி விட்டுவிடுவார்கள் என்று இரண்டு திராவிட கட்சிகளையும் சேர்ந்த சில தலைவர்கள் கடந்த சில நாட்களாகவே தனிப்பட்ட முறையில் பேசும்போது என்னிடம் கூறிக் கொண்டிருந்தனர்.

''இன்னோர் கட்சியை சேர்ந்த, வெறும் 2 சதவிகித வாக்கு வங்கியை வைத்துக் கொண்டிருக்க கூடிய ஒரு கட்சியை, அதுவும், மக்களவை தேர்தலில் வெற்றி பெற வைத்து, எம்.பியாக்கி அழகு பார்ப்பதில் எங்களுக்கு என்ன லாபம்?'' என்பதுதான் திமுக மற்றும் அஇஅதிமுக வின் முன்னணி தலைவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது. ''ஏற்கனவே பாமக வை இது போல கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து விட்டு, இப்போது நாங்கள் படும் அவஸ்தை போதாதா?'' என்று அஇஅதிமுக வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

தமிழகத்தின் முக்கியத்துவம்

கடந்த 21 ஆண்டுகாலத்தில் இந்திய அரசியலில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாகவே இருந்திருக்கிறது. 1998 பிப்ரவரியில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த ஆட்சி வெறும் 14 மாதங்கள்தான் நீடித்தது.  அஇஅதிமுக வின் 18 எம் பி க்களின் ஆதரவுடன் வாஜ்பாய் அரசு ஆண்டது. 1998 தேர்தலில் அஇஅதிமுக - பாஜக - பாமக - மதிமுக, வாழப்பாடி ராம்மூர்த்தியின் ராஜீவ் காங்கிரஸ் மற்றும் சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி ஆகியவை இணைந்து போட்டியிட்டு தமிழகத்தின் 39 தொகுதிகளில் 30 ஐ வென்றன. அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த அரசை ஏப்ரல் 17, 1999 ல் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்த்தார்.  பின்னர் 1999 செப்டம்பர் மக்களவை தேர்தலில் பாஜக வுடன் திமுக கூட்டணி அமைத்தது. இதில் பாமக, மதிமுக, ராஜீவ் காங்கிரஸும் இடம் பெற்றிருந்தன. இந்தக் கூட்டணி 26 இடங்களை வென்றது. அஇஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களை வென்றது.

பட மூலாதாரம், Getty Images

இதற்கடுத்து நடந்த 2004 மற்றும் 2009 மக்களவை தேர்தல்கள் இந்திய அரசியலில், குறிப்பாக தமிழகத்தை பொறுத்த வரையில் முக்கியமானவை. எப்படியென்றால் இந்த இரண்டு தேர்தல்களிலும் இந்தியாவை எந்த கட்சி, எந்தக் கூட்டணி ஆள வேண்டும் என்பதை தமிழகம்தான் தீர்மானித்தது. அதிலும் குறிப்பாக 2004 மக்களவை தேர்தல் மிக முக்கியமானது. 2004 தேர்தலில் திமுக ஒரு மெகா கூட்டணியை அமைத்தது. தமிழகத்தின் அனைத்து 39 மக்களவை தொகுதிகளையும் இந்த கூட்டணி வென்றது. திமுக 16, காங்கிரஸ் 10, பாமக 5, மதிமுக 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள் என்று இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அஇஅதிமுக - பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் மண்ணைக் கவ்வியது. 2009 மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி 28 இடங்களை வென்றது. திமுக 12, காங்கிரஸ் 8 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்தில் வென்றன. அஇஅதிமுக 9 இடங்களையும், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு இடத்தையும், மதிமுக ஒரு இடத்தையும் வென்றன.

2004 தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானவை. எப்படியென்றால் டில்லியில் யார் ஆள்வது என்பதை தமிழகத்தின் 39 எம் பிக்கள் தான் முடிவு செய்தனர். ஆம். அந்த தேர்தலில் காங்கிரஸூக்கும், பாஜக வுக்கும் மக்களவையில் வித்தியாசம் வெறும் ஏழு சீட்டுகள்தான். காங்கிரஸ் 145 இடங்களையும், பாஜக 138 இடங்களையும் வென்றிருந்தனர். இடதுசாரி கட்சிகளின் 59 எம் பிக்கள் மற்ற சில கட்சிகளின் ஆதரவுடன் மன்மோகன் சிங்கின் அரசு முழு ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்தது. இந்த பின்புலத்தில் பார்த்தால் காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தமிழகத்தின் பங்கை புரிந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images

2009 தேர்தலில் எண்ணிக்கை குறைந்தாலும் 28 எம் பி க்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்தனர். மன்மோகன் சிங் அரசு அடுத்த ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்ய இந்த எம் பி க்களின் பங்கு முக்கியமானது. திமுக, மன்மோகன் சிங் அரசுக்கான ஆதரவை இலங்கை விவகாரத்தை காரணம் காட்டி மார்ச் 21, 2013 ல், அதாவது, பொது தேர்தல்களுக்கு ஓராண்டுக்கு முன்பு வாபஸ் பெற்றது. ஆனாலும் நான்காண்டு காலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி டில்லியில் தொடர திமுக வின் பங்கும், தமிழகத்திலிருந்து சென்ற எம்.பிக்களின் பங்கும் முக்கியமானதுதான்.

ஆகவே 1998, 2004, 2009 மக்களவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் பங்கு இந்தியாவின் தேசிய அரசியலில், குறிப்பாக, மத்தியில் யார் இந்தியாவை ஆள வேண்டும் என்பதில் மிகவும் முக்கியமானது. இதனை எவரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமானதாக, அதாவது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அதுவரையில் இல்லாதவகையில் அதிகமானதாக இருந்தது. 

பட மூலாதாரம், Getty Images

2004 ல் தமிழகத்தின் சார்பில் 14 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். 2009 ல் காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மன்மோகன் சிங் அரசில் இருந்தனர். திமுக 2004 - 2009 அரசில் தான் விரும்பிய இலாக்காக்களை காங்கிரஸூக்கு உத்திரவிட்டு பெற்றது.  ஆனால் 2009 தேர்தலுக்குப் பின்னர் இந்த நிலைமை மாறியது. காரணம் காங்கிரஸூக்கு 208 இடங்கள் மக்களவையில் கிடைத்ததுதான்.   தான் கோரிய இலாக்ககாக்களும், தான் விரும்பிய எண்ணிக்கையிலான அமைச்சர்களும் கிடைக்காததால் மே 22, 2009 ல் நடைபெற்ற இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவியேற்பை திமுக புறக்கணித்தது. சில நாட்கள் கழித்துத் தான் சமாதானம் ஏற்பட்டு, அதன் பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக அமைச்சர்கள் பங்கேற்றனர். ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுடன் சேர்ந்து திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியும் மத்திய அமைச்சரானார். இதன் மூலம் வாரிசு அரசயலின் இன்னுமோர் புதிய பரிமாணத்தை தேசீய அரசியலில் கருணாநிதி விரிவடைய செய்தார்.

2004 ல் திமுகவிடம் கட்டுண்டு கிடந்த காங்கிரஸ் 2009 ல் ''சுயமரியாதை சிங்கமாக'' சிலிர்த்து எழுந்ததற்கு காரணம், 2006 - 2011 காலகட்டத்தில் தமிழகத்தை ஆண்ட திமுக அரசுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் அந்த ஆட்சி காங்கிரஸ் மற்றும் பாமக வின் ஆதரவில் மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்ததுதான். 234 எம்எல்ஏ க்கள் கொண்ட தமிழக சட்டசபையில் தனி பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் திமுக பெற்றிருந்ததோ வெறும் 96 எம்எல்ஏ க்கள்தான். காங்கிரஸின் 36 எம்எல்ஏ க்களும் பாமக வின் 18 எம்எல்ஏ க்களும் வெளியிலிருந்து கொடுத்த ஆதரவால் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

திமுக வின் 'தனித்தன்மை'

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டுவது பொருத்தமானதுதான் என்றே கருதுகிறேன். 1996 முதல் 2013 வரையில் இந்தியாவை ஆண்ட மூன்று கட்சிகள் அல்ல, மூன்று வெவ்வேறு விதமான அரசியல் சித்தாந்தங்களை கொண்ட அரசியல் அணிச்சேர்க்கைகளில் (Not three different political parties but three different political formations) பங்கேற்று, மத்தியில் நடைபெற்ற அரசாங்கங்களில் அமைச்சர்களை பெற்றிருந்த ஒரே கட்சி ஒட்டு மொத்த இந்தியாவிலும் திமுக மட்டும்தான். 

பட மூலாதாரம், Getty Images

1996 ஜூன் - 1997 ஏப்ரல் காலகட்டத்தில் பிரதமர் ஹெச்.டி. தேவேகவுடா மற்றும் 1997 ஏப்ரல் - 1998 பிப்ரவரி வரையில் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான் மூன்றாவது அணி அரசாங்கங்களில் (Third Front governments) திமுக பங்கேற்றது. பின்னர் 1999 அக்டேபர் முதல் 2003 டிசம்பர் வரையில் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தது. அதன் பின்னர் 2004 மே முதல் 2013 மார்ச் வரையில் தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகள் பிரதமர் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக பங்கேற்றது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேல் மத்தியில் ஆட்சியில் இருந்தது திமுக.  இந்த வரலாற்று சாதனையை, திமுக வின் அரசியல் சாதுர்யமா அல்லது பதவிகளுக்கான அரசியல் சந்தர்ப்பவாதமா என்பதற்கான பதிலை வரலாறு அளிக்கும் என்றே நினைக்கிறேன்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல்

2019 ம் ஆண்டு தேர்தலின் மற்றுமோர் முக்கியமான விஷயம் மாநிலத்தின் இரண்டு பெரிய அரசியல் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் சந்திக்கப் போகும் முதல் தேர்தல் வரவிருக்கும் மக்களவை தேர்தல்தான். ஆம். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்து விட்டனர். இருவரும் இல்லாமல் தமிழகம் தேர்தலை சந்திக்கத் தயாராகி கொண்டிருக்கிறது. அஇஅதிமுக வை பொறுத்த வரையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அந்த கட்சியின் வாக்கு வங்கியில் என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பது முக்கியமானது.

ஏற்கனவே ஜெயலலிதா மறைந்து 2017 டிசம்பரில் நடைபெற்ற அவரது சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் 40,000 வாக்குகள் வித்தியாசித்தில் அஇஅதிமுக வின் ஈ.மதுசூதனனை தோற்கடித்து எம்எல்ஏ வாக ஆனார். இந்த இடைத் தேர்தலில் திமுக டெபாசிட்டை பறிகொடுத்தது.  தற்போது டிடிவி தினகரன் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்து அவரது கட்சிக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

ஆர்.கே. நகர் வெற்றியை மக்களவை தேர்தலில் எந்தளவுக்கு டிடிவி தினகரன் மீண்டும் பெறுவார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான். ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுவிடுவார் என்று எவரும் சொல்ல முடியாது. ஆனால் ஓரளவுக்காவது அவர் அஇஅதிமுக வின் வாக்கு வங்கியை உடைப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிகழ்ந்தால் டிடிவி தினகரனின் வேட்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள். ஆனால் இது அஇஅதிமுக வின் வெற்றியை பாதிக்கும். ஆங்கிலத்தில் சொன்னால் டிடிவி தினகரன் "spoil sport" ஆக உருவாக வாய்ப்புகள் இருக்கிறது.

மற்றுமோர் விவகாரம் சிறுபான்மையினர் வாக்குகள். 2014 மக்களவை தேர்தலில் அஇஅதிமுக தனியாக எந்த கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டது. அப்போதய முதலமைச்சர் ஜெயலலிதா ''மோடியா லேடியா'' என்று பிரச்சாரம் செய்தார். இந்தியா முழுவதும் வீசிய மோடி அலை தமிழகத்திற்குள் நூழையவிடாமல் தடுத்து அஇஅதிமுக வுக்கு 37 எம்.பிக்களை வென்றெடுத்தார் ஜெயலலிதா.  இது ஜெயலலிதாவின் அரசியல் ஆசான் எம்ஜிஆர் கூட செய்யாத சாதனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த 37 எம் பி க்கள் என்பது ஜெயலலிதா வுக்கு வெறும் எண்ணிக்கையாக மட்டுமே மாறிப் போனது. காரணம் மோடியின் பாஜக வுக்கு தனிப்பெரும்பான்மையாக 2014 தேர்தலில் மக்களவையில் 282 இடங்கள் கிடைத்ததுதான். இதன் மூலம் 1998 ல் வாஜ்பாய் அரசில் 18 எம் பி க்களுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கு, 37 எம்.பி க்களை வென்றும் மோடி அரசில் இல்லாமல் போனது, கடந்த ஐந்தாண்டு கால இந்திய அரசியலுக்கு நல்லதா, கெட்டதா என்பது மாபெரும் விவாதத்துக்கான ஆழமான, சுவையான கேள்விதான் என்றே உறுதியாக நான் கருதுகிறேன்.

மோதி கருணாநிதி சந்திப்பு

இந்த இடத்தில் மற்றோர் சம்பவத்தை சொல்லுவது பொருத்தமானது என்றே கருதுகிறேன். கருணாநிதி, 2018 ஆகஸ்ட் மாதம் காலமானார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் உள்ள கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரிடம் நலம் விசாரித்தார். கருணாநிதியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது மோடி, அவரிடம் டில்லியில் வந்து தன்னுடைய வீட்டில் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இது பலரது புருவங்களையும் உயர்த்தியது. 

பட மூலாதாரம், Getty Images

மோடியின் அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்ற பாஜக வின் வர்ணனையை ஏற்றுக் கொள்ளுவது மிகவும் கடினமானது. இந்த வருகையின் நோக்கம், திமுக வை ஒன்று, தன் பக்கம், அதாவது பாஜக பக்கம் இழுக்க மேற்கொள்ளப் பட்ட முயற்சி அல்லது தங்களுடன் வராவிட்டாலும் பரவாயில்லை காங்கிரஸூடன் மக்களவை தேர்தலில் போக வேண்டாம் என்று திமுக வுக்கு மோடி கொடுத்த ஒரு சமிக்ஞை என்றே திமுக மற்றும் காங்கிரஸில் நான் பேசிய சில தலைவர்கள் தெரிவித்தனர். இந்த வாதத்தின் தர்க்கம் ஒதுக்கித் தள்ள முடியாதது என்றே உறுதியாக நான் நம்புகிறேன்.  ஆனால் மோடியின் முயற்சி தோற்றுப் போனதை பிப்ரவரி 20 ம் நாள் நடைபெற்ற அரசியல் நிகழ்வு நிருபித்து விட்டது.

ரஜினிகாந்த், கமலஹாசன்

இந்த தேர்தலின் மற்றுமோர் முக்கிய நிகழ்வு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனின் அரசியல் பிரவேசங்கள். ரஜனிகாந்த் 2017 டிசம்பர் 31 ம் தேதி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.

பட மூலாதாரம், Rajini

ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை தான் இட்டு நிரப்ப போவதாக ரஜினிகாந்த் கூறினார். தான் சட்டமன்ற தேர்லுக்குத்தான் வரப்போவதாகவும், மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறினார். ரஜினிகாந்த், மக்களவை தேர்தலில் ஒரு கட்சிக்கு, குறிப்பாக, பாஜக வுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாக்களிக்குமாறு தனது ரசிகர்களுக்கு கூறுவார் என்று பரவலாக நம்பபட்டது.  ஆனால் சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தேர்தலில் தன்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லையென்றும், தன்னுடைய பெயர், தன்னுடைய அமைப்பின் கொடி மற்றும் சின்னத்தை எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறிவிட்டார். இது ரஜினியின் ஆதரவை எதிர்பார்த்திருந்த பாஜக வுக்கு ஏமாற்றமாகவே அமைந்து விட்டது.

பட மூலாதாரம், Kamal

கமலஹாசனை பொறுத்த வரையில் அவரது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. கமலஹாசன் கடந்த சில நாட்களாக திமுகவை கடுமையாக தாக்கிக் கொண்டிருக்கிறார். திமுகவும் அதற்கு கடுமையான பதிலடியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

21 சட்டமன்ற இடைத்தேர்தல்கள்

வரும் மக்களவை தேர்தல்களுடன் தமிழக சட்டமன்றத்துக்கான 21 இடங்களுக்கும் இடைத்தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இதனை ஒரு ''மினி சட்டமன்ற பொதுத்தேர்தல்'' என்றே நாம் சொல்லலாம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இப்போது சொற்ப பெரும்பான்மையே இருக்கிறது. இந்த 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் குறைந்தது 10 இடங்களையாவது  அஇஅதிமுக வென்றாக வேண்டும். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்துவிடும். பாமக வுக்கு ஏழு மக்களவை தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்கி அஇஅதிமுக போட்ட ஒப்பந்தத்தின் முக்கியமான மற்றோர் அம்சம், இந்த 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பாமக அஇஅதிமுக வுக்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுக்கும் என்பதுதான். ஆகவே பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற்ற பாமக மற்றும் பாஜக வுடனான தொகுதி பங்கீட்டு உடன்பாட்டின் மூலம், 2019 ம் ஆண்டு மக்களவை தேர்தல் கூட்டணியின் தற்போதய காலகட்டத்தின் ''மேன் ஆஃப் தி மேட்ச்'' ஆக எடப்பாடி பழனிசாமி உருவாகி விட்டார் என்றே கருதுகிறேன். 

தமிழக பாஜவின் நிலைமை

நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றுமோர் நிகழ்வு தமிழக பாஜக வின் நிலைமை. பாஜக வுக்கு அஇஅதிமுக ஐந்து இடங்களை ஒதுக்கியிருக்கிறது.  கடைசியாக அஇஅதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டது 2004 மக்களவை தேர்தலில். அப்போது ஜெயலலிதா ஏழு இடங்களை பாஜக வுக்கு கொடுத்தார். ஆனால் இரண்டு இடங்கள் குறைவாக தற்போது பாஜக வுக்கு அஇஅதிமுக கொடுத்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக வரும் செய்திகள் இந்த ஐந்து இடங்களுக்கு பாஜக வில் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது என்பதுதான். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வானதி சீனிவாசன், ஹெச் ராஜா, எஸ்.ஆர். சேகர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் என்ற ஐவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் புதியதாக வந்திருக்கும் வேறு சிலரும் வாய்ப்பு கேட்டு கடுமையாக போராட துவங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

கடந்த காலங்களில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஏற்பட்ட போதெல்லாம், அது அஇஅதிமுக, திமுக, தேமுதிக யாருடனான கூட்டணிபயாக இருந்தாலும், இரண்டு விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஒன்று, கூட்டணிக்கு அஇஅதிமுக, திமுக, தேமுதிக தான் தலைமை தாங்கியிருக்கின்றன. இரண்டாவது கூட்டணி பற்றிய அறிவிப்பை முறையாக அறிவிக்கும் போது அப்போது பாஜக வின் அகில இந்திய தலைவரும், மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் உடன் இருப்பார்கள். இப்படித்தான் 1998ல் அஇஅதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்ட போது அப்போதய அகில இந்திய பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, 2004, பாஜக தலைவர் எம்.வெங்கையா நாயுடு ஆகியோர் இருந்தனர். 2014 ல் தேமுதிக தலைமையிலான கூட்டணி அறிவிப்பு வந்தபோது பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இருந்தார். ஆனால் இந்த முறை பாஜக தலைவர் அமித்ஷா வருவார் என்று சொல்லப் பட்டது. ஆனால் அவர் வரவில்லை.  மாறாக பியூஷ் கோயல் தான் வந்தார். இந்த அறிவிப்புக்கு முதல் நாள் மும்பையில் சிவசேனா வுடனான கூட்டணி அறிவிப்பை பாஜக வெளியிட்ட போது அமித்ஷா மேடையில் இருந்தார். இதற்கு அஇஅதிமுக வெறும் ஐந்து இடங்களை மட்டுமே பாஜக வுக்கு ஒதுக்கியதுதான் காரணமா என்று தெரியவில்லை. இதன் காரணம் பாஜக வுக்கு மட்டுமல்ல, அஇஅதிமுக வுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும் தான். பிரச்சாரத்திற்கு கண்டிப்பாக மோடியும், அமீத்ஷாவும் வருவார்கள் என்றே நாம் நம்பலாம்.

என்னைப் பொறுத்த வரையில் மூன்று விஷயங்கள் அஇஅதிமுக - பாஜக - பாமக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கலாம் என்றே கருதுகிறேன். ஒன்று மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான மக்களின் கருத்து. இது இயற்கையானது. அதாவது பதவியில் இருக்கும் எந்த அரசுக்கும் எதிராக உருவாகும் மக்களின் கோபம். இது தற்போது இரண்டு அரசுகளுக்கும் எதிரான கோபம் - Double Anti Incumbancy - என்று நாம் புரிந்து கொள்ளலாம். இரண்டாவது, வழக்கமாக சிறுபான்மையின மக்களில் பெரும்பாலானோர் அஇஅதிமுக வுக்கு வாக்களிப்பது இந்த முறை என்னவாகப் போகிறது என்பது. மூன்றாவது டிடிவி தினகரன் உடைக்கப் போகும் அஇஅதிமுக வின் வாக்கு வங்கி. கடைசியாக சொன்ன இரண்டு காரணங்களும் அஇஅதிமுக வின் வெற்றிக்கு பெரும் சவால்களாக இருக்கின்றன என்றே கருதுகிறேன்.

மு.க.ஸ்டாலினின் சவால்களும் எளிதானவை கிடையாது. கருணாநிதி செயலபட முடியாமல் இருந்த சமயத்தில் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்தது. இதனை எளிதாக திமுக கடந்து போக முடியாது. ஒவ்வோர் வாக்கு க்கும் திமுக போராட வேண்டியிருக்கும் என்றே கருதுகிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் இணையானது பணபலம். ''ஓட்டுக்கு பணம்'' (Cash for Votes). கரன்சி நோட்டுக்கள், தமிழகத்தில் வரும் தேர்தல்களில் எப்படி விளையாட போகின்றன என்பது யார் வெல்லப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் ஆகப் பெறும் முதன்மை காரணமாக உருவானால் அதில் நாம் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் வருத்தப்பட ஆழமான காரணங்கள் உண்டுதான் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :