திருநெல்வேலி மக்களவைத் தொகுதி: திமுக வேட்பாளர் வெற்றி

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்
படித்தவர்கள் நிறைந்த திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கடந்துவந்த பாதை

பட மூலாதாரம், IndiaPictures

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம், அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியனை விட1,85,457 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

2019-ஆம் ஆண்டு திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள்

மனோஜ் பாண்டியன் - அதிமுக

ஞானதிரவியம் - திமுக

மைக்கேல் ராயப்பன் - அமமுக

சத்யா - நாம் தமிழர்

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி தமிழக தேர்தல் அரசியலில் பல அதிர்வலைகளை கடந்த காலங்களில் ஏற்படுத்தியுள்ளது.

1952 முதல் இந்தியாவில் நடந்த 16 நாடாளுமன்ற தேர்தல்களிலும் இத்தொகுதி இடம்பெற்றுள்ளது. முதல் மக்களவை தேர்தலில் (1952) காங்கிரஸ் வேட்பாளர் பி.டி தாணுபிள்ளை வெற்றிபெற்றார்.

2004-ஆம் ஆண்டுவரை திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திருநெல்வேலி, பாளையம்கோட்டை, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தல் முதல் இத்தொகுதியில் திருநெல்வேலி, பாளையம்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பிடித்துள்ளன.

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி இது வரை

அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமே இருந்து வருகிறது. இங்கு விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர்.

அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் உள்ள தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படும் பாளையங்கோட்டை, நகரப் பகுதியான திருநெல்வேலி போன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் பட்டதாரிகள் அதிகம் உள்ளனர்.

பெரும் தொழில் நிறுவனங்கள் இல்லாததும், தாமிரபரணியில் நீர் இல்லாத போது இங்கு ஏற்படும் குடிநீர் பாற்றாக்குறையும் இத்தொகுதியில் முக்கிய பிரச்சனைகளாக கருதப்படுகின்றன. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள குளிர்பான தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீர், அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டுவருகிறது. இதுவே ஓர் பெரும் பிரச்சனையாக உள்ளது.

பெரிய நிறுவனங்கள் எதுவும் இல்லாததால் இந்த தொகுதியை சேர்ந்த எண்ணற்ற இளைஞர்கள், தங்களின் வேலைவாய்ப்புக்காக வேறு நகரம் அல்லது மாநிலத்துக்கு புலம்பெயர்கின்றனர்.

இத்தொகுதியில் அதிகமுறை ( 4 முறை) அதிமுகவின் கடம்பூர் ஜனார்த்தன் வெற்றி பெற்றுள்ளார்.

1998-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் நட்சத்திர வேட்பாளர் சரத்குமார் சுமார் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

இதுவே இத்தொகுதி வரலாற்றில் குறைந்த வெற்றி வித்தியாசம் ஆகும்.

இந்த தொகுதியில் இதுவரை அதிமுக 7 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 முறை வென்றுள்ளது. அதில் இரண்டு முறை (2004, 2009) திமுக கூட்டணியில் காங்கிரஸ் இந்த தொகுதியில் வென்றது.

திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறையும் திமுகவின் சார்பில் ஒரே வேட்பாளர்தான் (சிவப்பிரகாசம்) வெற்றி வேட்பாளராக இருந்துள்ளார்.

அதேவேளையில் சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :