மக்களவைத் தேர்தல் 2019: அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரசிற்கு புதுச்சேரி ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தல் 2019

பட மூலாதாரம், facebook

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைப்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில், அகில இந்திய என்.ஆர். காங்கிரசின் தலைவர் என். ரங்கசாமி இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை - ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பிறகு, புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரசிற்கு ஒதுக்கீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய ஆட்சிப் பிரதேசமான புதுச்சேரி தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக, என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர். ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார்.

2014ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி, 2,55,826 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது.

அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 40 இடங்களில் 7 இடங்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஐந்து இடங்கள் பாரதீய ஜனதா கட்சிக்கும் ஒரு இடம் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் தி.மு.க. இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :