நிதின் கட்கரி 2019 தேர்தலுக்கு பிறகு நரேந்திர மோதிக்கு போட்டியாக இருப்பாரா?

நிதின் கட்கரி படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption நிதின் கட்கரி

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவராக நிதின் கட்கரி நரேந்திர மோதிக்கு உள்கட்சியிலேயே கருதப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோதிக்கு மாற்றாகக் கருதப்படுவதால் நிதின் கட்கரி மீது தமக்கு அக்கறை உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அண்மையில் கூறியுள்ளார்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் நிதின் கட்கரி இருப்பதாகவும் பவார் தெரிவித்துள்ளார். பவாரின் கருத்துகள் வெளியான பிறகு, அவருடைய கருத்துகளின் உண்மையான அர்த்தங்கள் குறித்த யூகங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப் படுகின்றன.

2019 மக்களவைத் தேர்தலில் நிதின் கட்கரியின் பங்கு என்னவாக இருக்கும் என்பதில் ஒவ்வொருவரும் ஆர்வமாக உள்ளனர். வரவிருக்கும் தேர்தல்களில் கட்கரியின் பங்கு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள பிபிசி மராத்தி பிரிவு முயற்சி செய்தது.

நிதின் கட்கரி பிரபலமானவராக இருப்பதால், பிரதமர் நரேந்திர மோதிக்கு அடுத்தபடியாக பாஜகவின் பிரசாரத்தில் அதிகம் தேவைப்படும் நபராக இருக்கலாம் என்று நாக்பூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் யாது ஜோஷி கூறுகிறார்.

கட்கரி கடந்து வந்த பயணம்

சாதாரண தொண்டராக இருந்து பாஜக அரசின் முக்கியமான ஓர் அமைச்சர் என்ற நிலையை எட்டும் வரையில் கட்கரியின் பயணம் நெடியது. ''ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் ஒரு தொண்டராக தனது அரசியல் பயணத்தை கட்கரி தொடங்கினார். நாக்பூர் கல்லூரியில் பல தேர்தல்களில் அவர் தான் வழிகாட்டும் சக்தியாக இருந்தார். அவரிடம் உள்ள தலைமைப் பண்பை அறிந்து, கட்சியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது,'' என்று ஜோஷி விவரிக்கிறார்.

படத்தின் காப்புரிமை SEBASTIAN D'SOUZA

''ஒரு முறை அவர் சட்டமன்றத் தேர்தலில் தோற்றார். அதன்பிறகு சட்ட மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்-ன் தந்தை கங்காதர் பட்நாவிஸ் அப்போது சட்டமேலவையில் உறுப்பினராக இருந்தார். அவர் மறைவை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், அவருடைய இடத்துக்கு கட்கரி போட்டியிட்டார். அதன்பிறகு, அதே பட்டதாரி தொகுதியில் இருந்து சட்டமேலவைக்கு அவர் பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்,'' என்கிறார் ஜோஷி.

2009ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய தலைவரானார் நிதின் கட்கரி. இரண்டாவது முறையும் அவருக்கு அந்தப் பதவி கிடைப்பதாக இருந்தது. ஆனால், அவர் மீது ஏற்கனவே இருந்த ஊழல் புகார் காரணமாக, பதவியில் தொடர்வதற்கு அவருடைய பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங், பிபிசி இந்தி பிரிவில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளார்.

கட்கரியின் அமைப்பு சார்ந்த திறமைகள்

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தவர்களை பாஜகவுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதில் கட்கரி முக்கியப் பங்காற்றினார். தாழ்த்தப்பட்ட இனங்களைச் தொண்டர்களுடன் அவர் தொடர்பு கொண்டார். விதர்பா பகுதியில் பல தலைவர்கள் அவரால் உருவாக்கப்பட்டவர்கள். கட்கரி திறமையான நிர்வாகி என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

`விகாஸ் புருஷ்' (வளர்ச்சிக்கான நபர்) அல்லது வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரக் கூடிய தலைவர் என்று கட்கரி கருதப்படுகிறார். மோதி அரசின் அமைச்சரவையில் மிக வெற்றிகரமான அமைச்சர் என பேசப்படுகிறார் என்று யாது ஜோஷி குறிப்பிடுகிறார். கட்கரிக்கு உள்ள இந்த நற்பெயர் பாஜகவுக்கு ஆதாயத்தைத் தேடித் தரும். பிரதமர் நரேந்திர மோதிக்கு அடுத்தபடியாக, பாஜகவில் பிரசாரத்தில் அதிகம் விரும்பப்படும் நபராக கட்கரி இருக்கலாம் என்று ஜோஷி கருதுகிறார்.

படத்தின் காப்புரிமை Hindustan Times

நிதின் கட்கரியின் செயல்பாடுகளுக்காக மக்களவையில் பாராட்டப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவருடைய பணிகளைப் பாராட்டியுள்ளார். ஆனால், அவருடைய அமைச்சரவை செயல்பாடுகள், கலவையான அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது என்று, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

''ஓர் அமைச்சர் என்ற வகையில் அவருடைய செயல்பாடுகள் கலவையான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலைகள் உருவாக்குவதில் நல்ல செயல்பாடு, கங்கை நதியை புதுப்பித்தலில் வெற்று பிரச்சாரம், நீர்வள மேம்பாட்டில் போதிய செயல்பாடுகள் இல்லாதது, பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளார்,'' என்று சிதம்பரம் அந்தக் கட்டுரையில் கூறியுள்ளார்.

மோதிக்கு மாற்றாக அவர் இருப்பாரா?

பிரதமர் மோதிக்கு மாற்றாக நிதின் கட்கரி இருக்க முடியுமா? இந்தக் கேள்வி நிறையவே விவாதிக்கப்படுகிறது. தொங்குநிலை ஏற்பட்டால், அப்போது கட்கரியின் பெயர் தான் முன்னிலையில் இருக்கும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

''தேர்தல்கள் மிகவும் நெருங்கிவிட்ட நிலையில், மாற்று 'திட்டத்துக்கான' ஒரு திட்டமாகவும் இது இருக்கலாம். ஒருவேளை தேர்தலில் மோதி தோற்றுவிட்டால், பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி பெயர் முன்வைக்கப்படலாம்,'' என்று அரசியல் பார்வையாளர் சபா நக்வி கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Hindustan Times

''சங் பரிவார் விசுவாசியாக அறியப்பட்டவர நிதின் கட்கரி. பாஜகவின் தேசியத் தலைவராக அவர் இருந்திருக்கிறார். இப்போது அமைச்சராக, திறமையான நிர்வாகி என்ற அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனும் அவருக்கு நல்ல உறவு இருக்கிறது'' என்று நக்வி கூறுகிறார்.

இந்தியா டுடே பத்திரிகை நடத்திய மாநாட்டில் இதே கேள்வி நிதின் கட்கரியிடம் கேட்கப்பட்டது. ஆனால், தனக்கு 'பிரதமராக வேண்டும் என்ற லட்சியமோ அல்லது எதிர்பார்ப்போ கிடையாது' என்று அவர் தெளிவாகக் கூறிவிட்டார்.

கட்கரிக்கு துணிச்சல் இருக்கிறது என்று சமீபத்தில் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியிருந்தார். `தைரியம் குறித்து உங்களிடம் இருந்து சான்றிதழ் எனக்குத் தேவையில்லை' என்று கட்கரி அதற்குப் பதில் அளித்திருந்தார்.

''இதுதான் எங்களுடைய மரபணுவுக்கும், காங்கிரஸ் மரபணுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம். ஜனநாயகம் மற்றும் அரசியல்சாசன அமைப்புகளின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். உங்களுடைய உத்திகள் பயன் தராது. மோடி அவர்கள் தான் மீண்டும் பிரதமராக வருவார். முழு வேகத்துடன் நாங்கள் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வோம்'' என்று அவர் கூறியிருந்தார். ஒரு வகையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்பதை கட்கரி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :