புல்வாமா தாக்குதல்: காங்கிரசுக்கு பின்னடைவும், பாஜகவுக்கு ஊக்கமும் தந்தது எப்படி?
- ராஜேஷ் பிரியதர்ஷி
- டிஜிட்டல் ஆசிரியர், பிபிசி இந்தி

பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 11ஆம் தேதியன்று, உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி சாலை பேரணி நடத்தினார்; ராகுல் காந்தி கையில் பொம்மை விமானத்தை எடுத்துக் கொண்டு, மக்களுக்கு ரஃபேலை நினைவூட்டினார்.
அரசியலில் காற்றடிக்கும் திசை மாறிவிட்டது; காங்கிரசுக்கு ஏறுமுகம், பாரதிய ஜனதா கட்சிக்கு அழுத்தம் அதிகரித்துவிட்டது என்றுகூட சிலர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால், பிப்ரவரி 14ஆம் தேதியன்று புல்வாமாவில் தாக்குதல் நடைபெற்ற பிறகு, நாடே கொந்தளித்துப் போனது. "இந்த சமயத்தில் அரசியல் பேசக்கூடாது" என்று கூறிய பிரியங்கா காந்தி தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார்.
புல்வாமா தாக்குதல் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது என்றால், காங்கிரசால் இன்னும் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஆனால், பாஜகவோ, அந்த துக்கத்தையே அஸ்திரமாக பயன்படுத்தி, முழு உத்வேகத்துடன் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ், இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவாக இருக்கும், இதுதொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்திலும் பாஜகவுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பு யாருடையது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியை உரிய நேரத்தில் கேட்கும் சந்தர்ப்பத்தை ராகுல்காந்தி தவறவிட்டார். ஆனால், மம்தா பேனர்ஜி, இந்த கேள்வியை எழுப்பி, பாஜக எதிர்ப்பு கூட்டணியின் தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொண்டார்.
பிப்ரவரி 14ஆம் தேதி எழுந்த அரசியல் கொந்தளிப்பை பார்க்கும்போது, பாஜக, முழு வீச்சுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டதும், காங்கிரஸ் அதற்கு முன்பிருந்த உற்சாகத்தை இழந்துவிட்டதையும் காணலாம்.
புல்வாமா தாக்குதல் விவகாரம் எந்த திசையில் செல்கிறது என்பதை சற்றே பொறுத்திருந்து பார்த்து காய்களை நகர்த்தலாம் என்று காங்கிரஸ் நினைத்திருக்கலாம். எதாவது பேசி புல்வாமா தாக்குதலில் மக்களின் கோபத்தை தன் பக்கம் திருப்பி விட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் காரணமாக இருந்திருக்கலாம், அல்லது எதிர்பாராத சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த தெரியாமல் இருந்திருக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
மறுபுறம் மிக சாதுரியமாக, தேசபக்தி, ராணுவம், தேசியவாதம், இந்துத்வா, மோதி, வந்தேமாதரம், இந்திய தாயை தலை வணங்குவோம், பாரத் மாதா கி ஜெய் என தங்களது பழைய முழக்கங்களை கையில் எடுத்துக் கொண்டது.
வேலைவாய்ப்பு, வளர்ச்சி, ரஃபேல், என்ற விஷயங்களை கேட்க மக்கள் தயாராக இல்லை. எனவே பாஜகவின் பாடலுக்கு தாளம் போடுவதைத் தவிர காங்கிரஸ் கட்சியிடம் வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.
"தீவிரவாதத்திற்கு நாடோ, மதமோ, சாதியோ கிடையாது" என்று பொதுவான கருத்தை தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மீது கடுமையான தாக்குதல்கள் தொடர்கின்றன. தாக்குதலை தனியாகவே எதிர்கொள்ளும் நிலைமையில் இருக்கும் அவரை காப்பாற்றவோ, அவர் சொன்னது பொதுவான கருத்து, அதில் எந்த மறைபொருளும் இல்லை என்று வக்காலத்து வாங்கவோ காங்கிரஸின் தலைவர்கள் கூட முன்வரவில்லை.
கூட்டணி, பேரணி, சொற்பொழிவு
செவ்வாய்க்கிழமையன்று தமிழ்நாட்டில் பாஜகவும், அ.இ.அ.தி.முகவும் கூட்டணி அறிவித்துவிட்டன. பாஜக தமிழ்நாட்டில் ஐந்து மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் என்று மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயலும் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்கள்.
அதற்கு முன்னதாக, பாஜக-சிவசேனா கூட்டணி பல்வேறு ஊகங்களுக்கு இடையில் ஒருவழியாக உறுதியாகிவிட்டது. அவ்வப்போது ஒருவருக்கொருவர் காலை வாரிவிடும் இரு கட்சியின் தலைவர்களும் ஜோடியாக நின்று புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜகவும், 23 தொகுதிகளில் சிவசேனாவும் போட்டியிடுகின்றன.
பட மூலாதாரம், PTI
அமித் ஷாவும், பியூஷ் கோயலும் முழு மூச்சுடன் அரசியல் வியூகங்களை உருவாக்குவதில் முனைந்துள்ளனர். மறுபுறத்திலோ பிரியங்கா காந்தி, அகிலேஷ், மாயாவதி உட்பட எதிர் கட்சித் தலைவர்கள் அனைவரும் வாய்மூடி மெளனியாக இருப்பதை பார்க்க முடிகிறது.
பிரதமர் நரேந்திர மோதி, உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில், மகாராஷ்டிராவின் துலேயில், பிஹாரின் பரெளனியில் என பொதுக்கூட்டங்களில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். "வந்தே பாரத்" ரயிலையும் பல நலத்திட்டங்களையும் திறந்து வைக்கிறார், நாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். புல்வாமா தாக்குதலை அரசியலாக்கக்கூடாது என்று கூறும் பாஜகவின் மூத்த தலைவரும், ரயில்வே அமைச்சரும், இந்த ரயிலை "தீவிரவாதிகளுக்கான பதில்" என்று கூறுகிறார்.
அதேபோல் அசாமில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய கட்சித் தலைவர் அமித் ஷா, இந்த தாக்குதலைப் பற்றி குறிப்பிட்டு, 'இது யு.பி.ஏ அரசு அல்ல" என்று முழக்கமிட்டார்.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சத்தீஸ்கரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவில் இருந்து விலகி வந்த கீர்த்தி ஆசாதை தனது கட்சிக்கு வரவேற்றதைத் தவிர அரசியல் ரீதியாக வாய்மூடி மெளனம் காக்கிறார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரியங்கா காந்தி மக்களை சந்திக்கத் தொடங்கினாலும், மேடையிலோ அல்லது செய்தியாளர்களிடமோ சொல்வதற்கு அவரிடம் எந்த முக்கிய செய்தியும் இல்லை.
பட மூலாதாரம், Getty Images
புல்வாமாவை மையமாக வைத்து தேர்தல் நடக்குமா?
பிப்ரவரி 14க்கு முன்புவரை எதிர்கட்சிகளின் தாக்குதலுக்கு பதிலாக வளர்ச்சிக்கான கனவை மட்டுமே முன்வைக்க முடிந்த பாஜகவின் நிலைமை இப்போது மாறிவிட்டது. தேர்தல் முடியும் வரை ராமர் ஆலய விவகாரத்தை கையில் எடுப்பதில்லை என்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துவிட்டன.
ஐந்து நாட்களுக்கு முன்பு வரை 2019 தேர்தலுக்கான உத்தியை வகுத்தது எதிர்கட்சிகள்தான். ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாஜக விஸ்வரூபம் எடுத்துவிட்டது. ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிராக தேசபக்தி என்ற அவர்களின் முன்னெடுப்பு மிகவும் நன்றாகவே வேலை செய்கிறது. தேசபக்தி என்ற வார்த்தைக்கு இந்துத்வா என்ற பொருளை மக்களின் மனதில் பதிய வைப்பதில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது.
மறுபுறமோ, பாகிஸ்தான், முஸ்லிம், காஷ்மீரி, தேச துரோகி என தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்த பல வார்த்தை ஆயுதங்களையும் தயாராக வைத்திருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற நிலையில் எதிர்கட்சிகள் தங்களுடைய அரசியல் உத்தியை புதுக் கோணத்தில் முன்னெடுக்க வேண்டியிருக்கும். புல்வாமா விவகாரம் விரைவில் தணியக்கூடியதல்ல. அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை தனது தலைமையின் வெற்றியாக முன்வைக்க பாஜக தயங்காது.
இதுபோன்ற சூழலில் தேர்தலுக்கு முன்னதாக எதிர்கட்சிகள் கூறும் எந்த ஒரு கருத்தும் அவற்றுக்கே எதிராக முடிவடையும். உரி தாக்குதலுக்கு பிறகு, 'சர்ஜிகல் தாக்குதல்' பற்றி கேள்வி எழுப்பிய அர்விந்த் கேஜ்ரிவால் எதிர்கொண்ட தாக்குதல்களை மறக்கமுடியாது.
எதிர்கட்சிகளின் ஒற்றுமையாக கூறப்படும் மெகாகூட்டணியை எதிர்க்கும் வியூகமாக அ.இ.அ.தி.மு.க மற்றும் சிவசேனா என தனது கூட்டணியை வலுப்படுத்துகிறது. ஆனால் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்டு போரிடத் தயாரான எதிர் முகாமில் கனத்த அமைதி நிலவுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்