புல்வாமா எதிரொலி: காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படவில்லையென பிரகாஷ் ஜாவ்டேக்கர் கூறியது உண்மையா? BBCFactCheck

  • உண்மை பரிசோதிக்கும் குழு
  • பிபிசி
பிரகாஷ் ஜாவ்டேக்கர்

பட மூலாதாரம், MIB INDIA

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தற்கொலை தாக்குதலுக்கு பின்னர், காஷ்மீர் மாணவர்கள் மீது எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேக்கர் கடந்த புதன்கிழமை தெரிவித்தார்.

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் டிஜிட்டல் பலகையை திறக்கும் விழாவின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "புல்வாமா தாக்குதலுக்கு எதிராக நாட்டில் பெருங்கோபம் மூண்டுள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுவதாக பலர் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர். ஆனால், இது உண்மையல்ல. நாங்கள் எல்லா நிறுவனங்களையும் தொடர்பு கொண்டுள்ளோம். இவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை" என்று ஜாவ்டேக்கர் அறிவித்தார்.

ஆனால் இது முழுமையான உண்மை அல்ல என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக காஷ்மீர் மக்கள் மற்றும் காஷ்மீர் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களும், அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் பலரும் பாதிக்கப்பட்ட தகவல்கள் உள்ளன.

உண்மை அறிக்கை

எமது புலனாய்வில், புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிரான பல சம்பவங்களை நாங்கள் கண்டறிந்தோம்.

அடுத்த ஆண்டு காஷ்மீர் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டேராடூனில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளதை ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images

பாபா ஃபாரிட் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் அஸ்லாம் சித்திக் பிபிசியிடம் தெரிவிக்கையில், "கோபமடைந்த மக்கள் கூட்டத்தால் இதனை நாங்கள் எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டியதாயிற்று" என்று தெரிவித்தார்.

"மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே இதனை செய்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.

இவ்வாறு அறிக்கை வெளியிட்ட இன்னொரு கல்வி நிறுவனமான அல்ஃபைன் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இந்நிலையில், டேராடூன் காவல்துறையின் மூத்த சூப்பர்ரெண்ட் நிவேதா குரெட்டி பிபிசியிடம் பேசுகையில், கல்லூரிகளில் சேர அனுமதிக்க கூடாது என்று கோரி தொந்தரவு செய்ததாக 22 மாணவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீர் மாணவர்கள் தொடர்பான இன்னொரு சம்பவத்தில், ஹரியானா மாநில அம்பாலா மாவட்ட மௌலானா கிராம தலைவர் பற்றிய காணொளி ஒன்றை வெளியாகியுள்ளது. மஹரிஷி மார்கண்டேஷ்வரர் பல்கலைக்கழகத்தின் காஷ்மீரை சேர்ந்தவர்களை விருந்தினராக தங்க வைத்திருக்கும் உரிமையாளர்கள் உடனடியாக வெளியேற்ற வேண்டுமென கூறுவதாக இந்த காணொளி காட்டுகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் தாக்குதலுக்கு இலக்கான காஷ்மீர் மாணவர்கள் பற்றிய பிபிசி இந்தி அறிக்கை:

காஷ்மீரில் எழும் கவலைகள்

நாடு முழுவதுமுள்ள காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவலையடைந்து, காஷ்மீர் தொழில் வாழ்க்கை ஆலோசனை கூட்டமைப்பு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசின் உதவியை நாடியுள்ளது.

காஷ்மீர் உள்ளூர் ஊடகங்களின்படி, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நாட்டிலுள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு இலவச நுழைவு அனுமதி வழங்க காஷ்மீர் கல்வி பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மெஹ்போபா முஃப்தியின் ட்வீட்:

மாணவர்களுக்கு அப்பாற்பட்டு, மேற்கு வங்காளம், பிகார் மற்றும் புது டெல்லியில் போன்ற இந்திய நகரங்களின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீர் வர்த்தகர்கள் மிரட்டல்களையும், தாக்குதல்களையும் எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :