பாகிஸ்தான் மீதான இந்தியாவின் 'தண்ணீர்' சர்ஜிகல் ஸ்டிரைக் சாத்தியமா? கள நிலவரம் என்ன?

  • வினித் கரே
  • பிபிசி இந்தி
நரேந்திர மோடி

பட மூலாதாரம், ED JONES

உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்டு 1960களில் பாகிஸ்தான் உடனான இந்தியாவின் சிந்து நதி உடன்படிக்கையை முறிக்கும் திட்டங்கள் எதுவுமில்லை என இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவு பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் மீது கடுமை காட்ட வேண்டுமென அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் 46 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை மையாக கொண்டு இயங்கும் இஸ்லாமியவாத போராளி குழுவான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றது.

புல்வாமா தாக்குதல் மற்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சிந்து நதி உடன்படிக்கைக்கும் மத்திய அரசின் தண்ணீர் நிறுத்த அறிவிப்பிற்கும் எந்த தொடர்புமில்லை என்கிறார் நிதின் கட்கரி அலுவலகத்தை சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியுமா?

1960 களில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளிடையே போடப்பட்ட சிந்து நதி ஒப்பந்தம் இதுநாள் வரை ஒரு வெற்றிகரமான ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கை இரண்டு போர்களையும், எண்ணற்ற ராணுவ மோதல்களையும் கடந்து இதுநாள் வரை வெற்றிகரமாக அமலில் இருந்து வருகிறது.

1960 சிந்து நதி ஒப்பந்தத்தின் கீழ், சிந்து நதிக்கு செல்லும் பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய ஆற்றின் நீரை இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், செனாப் மற்றும் ஜீலம் பாகிஸ்தானிற்கும் வழங்கப்பட்டது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவுக்கு 33 மில்லியன் ஏக்கர் அடி தண்ணீரை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு இருந்த போதும் அது வெறும் 31 மில்லியன் ஏக்கர் அடி நீரை மட்டுமே பயன்படுத்தி வந்ததுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அவருடைய சமீபத்திய ட்வீட்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

மறைமுகமாக சொல்லப்படும் தகவல் என்ன?

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, சிந்து நதி உடன்படிக்கையின்கீழ் பாகிஸ்தானுக்கு பாய்ந்தோடும் இந்திய பங்கின் ஒவ்வொரு துளி நீரும் பஞ்சாப், ஜம்மூ மற்றும் காஷ்மீர் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என்றார்.

பட மூலாதாரம், Hindustan Times

இந்த பொதுக்கூட்டம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற உடி தாக்குதலை தொடர்ந்து நடைபெற்றது. உடி ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 ராணுவ வீரர்காள் கொல்லப்பட்டனர்.

ரத்தமும், நீரும் ஒரு சேர ஓட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோதி 2016ஆம் ஆண்டு முழங்கியிருந்தார்.

இதன்மூலம், விவசாயிகளுக்கு பிரதமர் அளித்த பழைய வாக்குறுதிய மீண்டும் நினைவூட்டியுள்ளார் கட்கரி.

ஏன் இந்தியாவால் அதன் முழு பங்கை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை?

இதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறும் இஸ்ன்டிட்யூட் ஆஃப் டிபன்ஸ் ஸ்டடீஸ் மற்றும் அனாலிசஸ் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் உத்தம் குமார், தண்ணீர் குறித்து போடப்படும் திட்டங்களை முடிவு செய்து கட்டி முடிக்க நிறைய நேரத்தை எடுத்து கொள்ளும் என்றும், மேற்கு மற்றும் கிழக்கில் ஓடும் ஆறுகளின் தண்ணீர் திட்டங்களை நாம் முறையாக மேம்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Frank Bienewald

இதுமட்டுமின்றி தண்ணீர் பங்கீடு குறித்து இருநாடுகளுக்கு இடையே நிலவும் சச்சரவும் ஒரு காரணம் என்கிறார் அவர்.

ரவி ஆற்றின் மீது அணைக் கட்ட இந்தியா தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி. ஆனால், எதார்த்தத்தில் இந்த பணிகள் முடிய பல ஆண்டுகளாக ஆகலாம் என்கிறார் நீர் மேலாண்மை நிபுணர் ஹுமான்ஷு தாக்கர்.

பஞ்சாப் மற்றும் காஷ்மீர் இடையே நிலவிய மோதல் போக்கு காரணமாக இந்த அணை கட்டும் திட்டம் தாமதமாகியுள்ளது.

"இதுநாள் வரை பயன்படுத்தாத பங்கை இந்தியா பயன்படுத்த நினைத்தால் எங்களுக்கு ஒன்றுமில்லை. தாராளமாக இந்தியா பயன்படுத்தி கொள்ளட்டும்," என்று கூறுகிறார் சிந்து நதியின் பாகிஸ்தான் முன்னாள் கமிஷனர் ஜமாத் அலி ஷா.

ஆனால் இப்போது எதற்காக இந்த ட்வீட்?

"2016ஆம் ஆண்டு உடி தாக்குதல் நடந்த பிறகு, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியில் இந்தியாவின் பங்கை அனுமதிக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்போது ஏன் இதை அமல்படுத்தவில்லை." என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த பத்திரிகையாளரான சுஹாசினி ஹைதர்.

பட மூலாதாரம், Twitter

ஏற்கனவே இருநாடுகளுக்கு இடையேயான உறவு சுமூக நிலையில் இல்லாத நிலையில், மத்தியில் ஆளும் அமைச்சர்கள் மேலும் இந்நிலையை மோசமாக்கும் விதத்தில் கருத்துகளை கூறக்கூடாது என்கிறார் ஜமாத் அலி ஷா.

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியாவால் நிறுத்த முடியுமா?

போர் காலக்கட்டத்தில் வர்த்தகம் ஆயுதமாக பயன்படுத்தப்படும் என்பதை நம்பும் பேராசிரியர் உத்தம் குமார், அதேபாணியில் தண்ணீரும் இப்போது பயன்படுத்தப்படலாம் என்கிறார்.

"நம்மால் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. காரணம், ஆறுகளுக்கென தனி இயல்புகள் இருக்கின்றன. உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள தண்ணீரின் அளவை நாம் பயன்படுத்த இதுவரை என்ன செய்துள்ளோம் மற்றும் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய ஆராய வேண்டும்." என்கிறார் உத்தம்.

சிந்து நதி ஒப்பந்தம் சர்வதேச உடன்படிக்கை என்று கூறும் ஜமாத் அலி ஷா, இந்த ஒப்பந்தத்தை முறிக்க பேச்சுகள் இருப்பதாகவும், உலக நாடுகள் இதுபோன்ற ஒரு பேச்சை ஏற்க மாட்டார்கள் என்கிறார் அவர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :