சிறைக் கைதிகளுக்கு மன அழுத்தம் நீக்கி, மறுவாழ்வு - தமிழகத்தில் புதிய முயற்சி

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

"இரு கைதிகள் சிறைக் கம்பிகளுக்கு வெளியே ஒரே சமயத்தில் பார்க்கின்றனர். அவர்களில் ஒருவர் வெளியே உள்ள களிமண்ணையும், இன்னொருவர் நட்சத்திரங்களையும் பார்க்கிறார்," என்று எழுத்தாளர் பிரெட்ரிக் லாங்பிரிட்ஜ் கூறியதாக ஒரு வாசகம் உண்டு.

தமிழகத்தில் உள்ள சில சிறைக் கைதிகள் நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டாகியுள்ளது.

தமிழகத்திலேயே முதல்முறையாக நான்கு இடங்களில் சிறைக் கைதிகளை கொண்டு தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

புதுக்கோட்டை,வேலூர் பாளையங்கோட்டை, கோவை ஆகிய நான்கு இடங்களில் சிறைக் கைதிகளைக் கொண்டு இயக்கப்படும் பெட்ரோல் பங்குகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

சிறைத்துறையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து சிறையில் உள்ள தண்டனை கைதிகளைக் கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் இன்று, வெள்ளிக்கிழமை, விற்பனை தொடங்கியது.

மேற்கண்ட நான்கு ஊர்களிலும் உள்ள மத்திய சிறைகளில் தண்டனை கைதிகளாக இருந்து வருபவர்களில் நன்னடத்தை விதிகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.

அவர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்படும்.

சிறைக் கைதிகள் பணியாற்றக்கூடிய பெட்ரோல் பங்குகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிறைக் கைதிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கு குறித்து தகவலறிந்த வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் வந்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர்.

சிறைக் கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், இதன்மூலம் பொதுமக்களுக்கும் கைதிகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் திருச்சி சரத்தின் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

இதேபோல் சிறைக் கைதிகளை கொண்டு நடத்தப்படும் இந்த பெட்ரோல் பங்க் குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திருச்சி மண்டல பொது மேலாளர் பாபு நரேந்திரா கூறுகையில், "இது சிலர் கைதிகளின் மறுவாழ்விற்கு வழியாக அமைந்துள்ளது. இந்த பங்கு அமைந்துள்ள வளாகத்திலேயே சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளும் திறக்கப்பட உள்ளது," என்று கூறினார்.

மேலும் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இதேபோல் சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :