ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸ்கரை சீனா பாதுகாக்க நினைப்பது ஏன்?

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, இந்திய எல்லைக்குள் நுழைந்த, ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பின் முக்கிய உறுப்பினரான மௌலானா மசூத் அஸ்கர் 1994ஆம் ஆண்டு இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட மசூத் அஸ்கர், 1999இல் கந்தகார் விமான கடத்தலில் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக, இந்திய அரசால் விடுவிக்கப்பட்டார்.
அதன்பிறகு, மசூத் உருவாக்கிய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தீவிரவாத அமைப்பு என ஐ.நா அறிவித்துள்ளது.
2001இல் இந்திய நாடாளுமன்ற தாக்குதலில் மசூத் அஸ்கரின் பங்கிருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸ்கரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கவேண்டும் என்று இந்தியா பலமுறை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டாலும், சீனா அந்த முயற்சியை தனது ’வீட்டோ’ அதிகாரத்தால் தடுத்து வந்தது.
2008இல் மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டபோதும் சீனா அதற்கு தடை ஏற்படுத்தியது.
2016 பதான்கோட் ராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கு பிறகு, மசூத் அஸ்கரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இரண்டு முறை முறையிட்டது. அவற்றையும் ’வீட்டோ’ அதிகாரத்தால் சீனா முடக்கியது.
பட மூலாதாரம், Getty Images
தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு உள்ளதாகக் கூறிக்கொண்டு, 40 இந்திய துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவிக்கும் சீனா, ஏன் மசூர் அஜ்ஹரை தொடர்ந்து காப்பாற்றுகிறது?
அவரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். தீவிரவாதி அல்லது தீவிரவாத அமைப்பை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு சில வரைமுறைகள் உள்ளன.
அதைத்தவிர, மசூத் அஸ்கருக்கு எதிராக எதாவது ஆதாரத்தை இந்தியா கொடுத்தால், பிறகு அதுபற்றி ஆலோசிக்கலாம் என்று சீனா கூறுகிறது.
யார் இந்த ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு?
மூன்றாவதாக, பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் அனைத்துமே இந்தியாவுக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் சீனா கூறுகிறது. ஆனால், சீனாவைத் தவிர பிற உறுப்பு நாடுகள் அனைத்தும் தனக்கு ஆதரவளிப்பதாக இந்தியா கூறுகிறது.
ஆசியாவின் வலுவான பொருளாதாரமாக இந்தியா மாறுவதை தடுக்க முயற்சிக்கும் சீனா, பாகிஸ்தானை தனக்கு எதிராக பயன்படுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. இதனால் இந்திய - சீன எல்லை விவகாரமும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ஆனால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவு அண்மையில் ஏற்பட்டதல்ல.
பட மூலாதாரம், Hindustan Times
சீனாவின் சரக்கு வாகனங்கள் பாகிஸ்தானுக்கு எளிதாக செல்வதற்காக, 1950களில் தொழில்நுட்ப உதவி ஏதும் இல்லாத காலகட்டத்திலேயே "காராகோரம் காரிடர்" (Karakoram Corridor) எனப்படும் வழித்தடம் அகலப்படுத்தப்பட்டது.
இன்றும் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்வதற்கான ஒரே பாதை அது மட்டுமே. விரிவுபடுத்தப்பட்ட அந்த வழித்தடம்தான் இன்று சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China-Pakistan Economic Corridor) என்ற பரந்த சாலையாக உள்ளது.
அதேபோல், சீனாவின் அக்ஸாயி பகுதியை, அந்த நாட்டுக்கு கொடுத்ததே பாகிஸ்தான்தான். தற்போது சீனா, பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை செய்கிறது.
சீனாவில் இருந்து விமானங்களும், டேங்குகளும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு கிடைக்கிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான வர்த்தக உறவும் வலுவாக உள்ளது.
இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம் - இம்ரான் கான்
பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயும் மசூத் அஸ்கருக்கு உதவி செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐயும் கோபமாகக்கூடாது என்று சீனா விரும்புகிறது.
அதற்கு காரணம் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவி சீனாவுக்கு தேவை. ஏனெனில் எல்லையில் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் சீன அரசுக்கு எதிராக இருக்கின்றனர்.
அடுத்த வாரம், ரஷ்யா - இந்தியா - சீனா வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த விவகாரத்தை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் என ’வீட்டோ’ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும், சுழற்சி முறையில் தலா இரண்டு ஆண்டுகளுக்கு உறுப்பினராக இருக்கும் பத்து தற்காலிக நாடுகளும் உள்ளன.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸ்கருக்கு தடை விதிக்க ஐ.நாவில் புதிய முன்மொழிவை முன்னெடுக்க உள்ளது ஐ.நா நிரந்தர உறுப்பு நாடான பிரான்ஸ்.
புல்வாமா தாக்குதல் - மோதி எப்படியெல்லாம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கலாம்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :