தமிழகத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கு எப்போதும் பொதுத்தேர்வு இல்லை - அமைச்சர்

பள்ளி

பட மூலாதாரம், Getty Images

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினமணி - 5,8ம் வகுப்புகளுக்கு எப்போதும் பொதுத் தேர்வு இல்லை - அமைச்சர்

தமிழகத்தில் 5,8 ஆம் வகுப்புகளுக்கு இனி எப்போதுமே பொதுத் தேர்வு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு விரும்பினால் பொதுத்தேர்வைக் கொண்டு வரலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படிக் கொண்டுவருவதாக இருந்தால் அதற்காக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் நடப்புக் கல்வியாண்டில் மட்டுமல்ல இனி எப்போதும் 5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நட்த்தப்படமாட்டாது என்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க ஆலோசனை

தேமுதிகவை கூட்டணியில் கொண்டுவர தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் கூட்டணிகள் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தியதாகவும், பாஜக, அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் அதற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்ததாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது பாஜக. இதனை தொடர்ந்து அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் ராமநாதபுரத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது மத்திய அரசால் வழங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிய அமித் ஷா, 2014ஆம் ஆண்டிலிருந்து 2019ஆண்டு வரை தமிழ்நாட்டிற்கு 5,42,500 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு வெறும் 94,540 கோடிகளே ஒதுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

தினத்தந்தி - ரஜினியின் ஆதரவு எங்களுக்கு இருக்கும் - கமல்ஹாசன்

பட மூலாதாரம், ARUN SANKAR/GETTY IMAGES

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு தனக்கு இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்கிறது தினந்தந்தி செய்தி.

"தமிழகத்தில் 3-வது அணி உருவாகும் என்று நான் சொல்லவில்லை. நாங்கள் ஒரு அணி தான். எங்களுடன் நேர்மையானவர்கள் வந்து சேரவேண்டும். இது அழைப்புதானே தவிர சுயநலமோ, வேறு உத்தியோ கிடையாது. கட்சிகள் வரக்கூடும். வரும் என்று சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவை அவர் விரும்பிதான் தர வேண்டும். ஆதரவு தாருங்கள் என்று மக்களிடம்தான் கேட்க வேண்டும்.

இப்போதைக்கு தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் முடிவு. என்னையும், சினிமாவையும் சேர்த்து பார்ப்பதால் தமிழிசைக்கு திரைப்படம்போல் தெரிந்து இருக்கலாம். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி முக்கியமல்ல. நேர்மையும், உணர்ச்சியும் முக்கியம். அதை நோக்கிதான் தேர்தல் அறிக்கை இருக்கும். விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்." என்று கமல்ஹாசன் தெரிவித்தார் என்று மேலும் தெரிவிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :