ஆஸ்கர் திரைப்பட விழாவுக்கு செல்லும் இந்தியாவின் நாப்கின் தயாரிக்கும் பெண்கள்

  • கீதா பாண்டே
  • பிபிசி, கத்திகேரா கிராமம்
ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறார் ஸ்னேஹ்
படக்குறிப்பு,

ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறார் ஸ்னேஹ்

வயதுக்கு வந்தபோது ஸ்னேஹுக்கு 15 வயது. முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டு ரத்தம் கசியும்போது, தனக்கு என்ன நடக்கிறது என்று அவருக்கு புரிந்திருக்கவில்லை.

"எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என் உடலுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து அழத் தொடங்கிவிட்டேன்" என்கிறார் அவர். டெல்லிக்கு அருகில் உள்ள கத்திகேரா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு நான் சென்றபோது என்னிடம் இதனை அவர் பகிர்ந்து கொண்டார்.

"என் அம்மாவிடம் சொல்ல எனக்கு தைரியம் இல்லாததால், என் அத்தையிடம் சொன்னேன்."

"நீ இப்போது வளர்ந்துவிட்டாய். அழாதே. இது அனைவருக்கும் நடப்பதுதான்" என்று என்னிடம் கூறிய அவர், என் அம்மாவிடம் இதனை தெரிவித்தார்.

ஸ்னேஹுக்கு தற்போது 22 வயதாகிறது. தனது கிராமத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். `பிரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்`( Period. End of Sentence) என்ற ஆவணப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறார் ஸ்னேஹ்.

வடக்கு ஹாலிவுட்டில் உள்ள மாணவர் குழு ஒன்று நிதி திரட்டி இக்கிராமத்திற்கு நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ஸ்னேஹின் கிராமத்துக்கு இரானிய - அமெரிக்க இயக்குனர் ரய்கா செஹ்டப்சி வந்தார்.

டெல்லியில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள கத்திகேரா கிராமம். மால்கள், பெரும் கட்டடங்கள் என தலைநகரின் தாக்கம் சிறுதும் அங்கில்லை.

அக்கிராமத்தின் வயல்வெளிகள், பள்ளிக்கூடங்கள் என பல்வேறு இடங்களில் இந்த ஆவணப்படம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளை போலவே, மாதவிடாய் ஏற்படும் பெண்களை வழிபாட்டு இடங்கள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இருந்து தள்ளி வைக்கும் பழக்கம் இருக்கிறது.

மாதவிடாயை ஏதோ ஒரு களங்கம் போல பார்க்கும் இந்த இடத்தில், தான் வயதுக்கு வராதவரை, இதுகுறித்து கேள்வியே படாமல் இருந்த ஸ்னேஹை பற்றி நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

"பெண்களுக்குள் கூட இதை பற்றியெல்லாம் பேசமாட்டார்கள்" என்று அவர் கூறுகிறார்.

படக்குறிப்பு,

மாத ஊதியமாக இப்பெண்கள் 2,500 ரூபாய் பெறுகிறார்கள்

ஆனால், சுகாதாரப் பிரச்சனைகளை களைய பணிபுரியும் Action India என்ற தொண்டு நிறுவனம், கத்திகேரா கிராமத்தில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலையை, அங்கு நிறுவிய பிறகு, பல விஷயங்களும் மாற ஆரம்பித்தன.

ஜனவரி 2017ஆம் ஆண்டு, அத்தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் சுமன் என்பவர் ஸ்னேஹிடம் வந்து, தொழிற்சாலையில் வேலை செய்ய விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார்.

என்றாவது ஒரு நாள் டெல்லி போலீஸில் பணிபுரிய விருப்பமுள்ள பட்டதாரியான ஸ்னேஹ், இதற்கு ஒப்புக்கொண்டார். எனினும், அக்கிராமத்தில் வேறு வேலைவாய்ப்பு ஏதுமில்லை.

"என் அம்மாவிடம் இதற்கு அனுமதி கேட்டபோது, அப்பாவிடம் கேள் என்று சொல்லிவிட்டார். எங்கள் குடும்பத்தில் அனைத்து முக்கிய முடிவுகளையும் ஆண்கள்தான் எடுப்பார்கள்" என்கிறார் ஸ்னேஹ்.

படக்குறிப்பு,

"என் மகளை நினைத்து பெருமைப்படுகிறேன்" - ஸ்னேஹின் தந்தை ராஜேந்திர சிங் தன்வார்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிய போகிறேன் என்று தன் தந்தையிடம் சொல்ல அவருக்கு சங்கடமாக இருந்தது. அதனால், குழந்தைகளுக்கான டயாபர்கள் தயாரிக்க உள்ளதாக அவரிடம் ஸ்னேஹ் கூறியுள்ளார்.

"வேலை பார்க்க தொடங்கிய இரண்டு மாதங்களுக்கு பிறகு, என் அம்மா அப்பாவிடம் உண்மையை சொல்லிவிட்டார்" என்று சிரித்துக் கொண்டே செல்கிறார் ஸ்னேஹ்.

"பரவாயில்லை. எதுவாக இருந்தால் என்ன, வேலை வேலைதான்" என்று அவரது தந்தை கூறியிருக்கிறார்.

தற்போது அந்த தொழிற்சாலையில் 18 - 31 வயது வரையிலான ஏழு பெண்கள் பணிபுரிகிறார்கள். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து வரை, வாரம் ஆறு நாட்களுக்கு வேலை பார்க்க, மாத ஊதியமாக 2,500 ரூபாய் பெறுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 600 நாப்கின்கள் தயாரிக்க, Fly என்று பெயரில் அவை விற்க்கப்படுகின்றன.

படக்குறிப்பு,

ஒரு பாக்கெட் நாப்கினின் விலை ரூ.30

"நாங்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை மின்வெட்டு. சில சமயங்களில் நாங்கள் எங்கள் இலக்கை தயாரித்து முடிக்க, மின்சாரம் இருக்கும்போது இரவில் மீண்டும் வர வேண்டும்" என்று ஸ்னேஹ் கூறுகிறார்.

கிராமத்து வீட்டில் உள்ள இரண்டு அறைகளில் நடக்கும் இந்த சிறு தொழில், பெண்கள் சுகாதாரத்தை இங்கு உயர்த்தியுள்ளது.

இத்தொழில் தொடங்கப்படுவதற்கு முன்பாக, அந்த கிராமத்தில் இருந்த பெரும்பாலான பெண்கள், மாதவிடாயின்போது பழைய புடவைகளை கிழித்து அந்த துணியையே பயன்படுத்தி வந்தார்கள். தற்போது 70% பெண்கள் நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள்.

அக்கிராமத்தின் பழைமைவாத சமூகத்தில் மாதவிடாய் மீதிருந்த பார்வையை இது மாற்றியமைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி மாறியிருப்பது குறித்து நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

தற்போது மாதவிடாய் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேசுவதாக ஸ்னேஹ் கூறுகிறார்.

"எனக்கு தொடக்கத்தில் மிகவும் கடினமாக இருந்தது. நான் என் அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவுவேன். தேர்வு நேரங்களின்போது, அதிக வேலை இருந்தால், எனக்கு பதிலாக என் அம்மா பணிக்கு செல்வார்" என்கிறார் அவர்.

படக்குறிப்பு,

ஒரு நாளைக்கு 600 நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன

தன் மகளை நினைக்கும்போது தனக்கு "மிகவும் பெருமையாக" இருப்பதாக கூறுகிறார் ஸ்னேஹின் தந்தை ராஜேந்திர சிங் தன்வார். "என் மகள் பணிபுரிவது சமூகத்திற்கு பயன் தருகிறது என்றால், அதுவும் குறிப்பாக பெண்களுக்கு பயன் தருகிறது என்றால் அதில் எனக்கு மகிழ்ச்சியே" என்று அவர் கூறுகிறார்.

முதலில், இதற்கு எதிர்ப்பு இருந்தது. அக்கிராம மக்கள் இதனை சந்தேகத்துடனே அணுகினார்கள். படப்பிடிப்பு குழு அங்கு வந்தவுடன், என்ன நடக்கிறது என்று மக்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

ஆனால், 31 வயதாகும் சுஷ்மா தேவி போன்ற சிலருக்கு, இந்த வேலைக்கு செல்ல தினமும் வீட்டில் போராடிக் கொண்டிருக்கும் சூழல் உள்ளது.

இரண்டு மகள்களுக்கு தாயான சுஷ்மா கூறுகையில், ஸ்னேஹின் தாய், என் கணவருடன் இதுகுறித்து எடுத்து சொன்னபோதுதான், அவர் நான் அத்தொழிற்சாலையில் பணிபுரிய அனுமதியளித்தார்.

ஆனால், வேலைக்கு போகும் முன், வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

படக்குறிப்பு,

தற்போது இந்த கிராமத்தின் 70% பெண்கள் மாதவிடாயின் போது நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்

"நான் காலை ஐந்து மணிக்கு எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, துணி துவைத்து, எருமைகளுக்கு தீவனமிட்டு, சமையல் எரிபொருளாக பயன்படுத்த சானம் தட்டி, குளித்துவிட்டு, காலை மற்றும் மதிய உணவை சமைத்து வைத்து விட்டு வேலைக்கு செல்வேன். மாலை வந்து மீண்டும் இரவு உணவு தயாரிக்க வேண்டும்."

இவ்வளவு செய்தும், தன் கணவருக்கு போதவில்லை என்று கூறும் சுஷ்மா, "என் மீது அவர் அடிக்கடி கோபப்படுவார். வீட்டில் இவ்வளவு வேலைகள் இருக்கும்போது, ஏன் வெளியே சென்று பணிபுரிய வேண்டும்? என்று கேட்பார். எங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களும் நான் செல்வது நல்ல வேலை இல்லை என்றும் ஊதியம் குறைவாக இருப்பதாகவும் கூறுவார்கள்" என்று தெரிவிக்கிறார்.

"என் கணவர் அடித்தாலும், நான் என் வேலையை விட மாட்டேன். எனக்கு அங்கு பணிபுரிவது பிடித்திருக்கிறது" என்கிறார் சுஷ்மா.

படக்குறிப்பு,

சுஷ்மா வேலைக்கு செல்வது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை

ஆவணப்படத்தில் சுஷ்மா பேசும்போது, தான் சம்பாதித்த காசை வைத்து தனது இளைய சகோதரருக்கு துணி வாங்கியதாக கூறியிருப்பார். "இப்படம் ஆஸ்கருக்கு போகிறது என்று தெரிந்திருந்தால் அறிவுப்பூர்வமாக ஏதும் பேசியிருப்பேன்" என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் சுஷ்மா.

சுஷ்மா, ஸ்னேஹ் மற்றும் அங்கு பணிபுரியும் பிறருக்கு ஆஸ்கர் பரிந்துரை பெரும் ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. நெட்ஃபிளிக்ஸில் இருக்கும் இப்படம், சிறந்த ஆவணப்பட பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலசுக்கு கிளம்ப தேவையான வேலைகளை செய்து கொண்டிருக்கும் ஸ்னேஹை, தங்கள் கிராமத்துக்கு பேரும் புகழும் மரியாதையும் பெற்றுத் தந்ததாகக் கூறி மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.

"கத்திகேரா கிராமத்தில் இருந்து யாரும் இதுவரை வெளிநாட்டுக்கு சென்றதில்லை. நான்தான் முதல்முறையாக செல்லப் போகிறேன். எங்கள் கிராமத்தில் என்னை அங்கீகரித்து எனக்கு மதிப்பு தருகிறார்கள். என்னை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்" என்கிறார் ஸ்னேஹ்.

ஆஸ்கர் விருதுகள் குறித்து கேள்விப்பட்டிருப்பதாக கூறும் அவர், இதற்கு முன் அதனை பார்த்தில்லை என்று கூறுகிறார். அங்கு ஒருநாள் செல்வோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்கிறார்.

"நான் அமெரிக்கா செல்வேன் என்று நினைக்கவில்லை. தற்போதும் என்ன நடக்கிறது என்று புரியாத மாதிரி இருக்கிறது. என்னை பொருத்த வரை இந்தப்படம் பரிந்துரைக்கப்பட்டதே விருதுதான். இது என் கண்களை திறந்து கொண்டே நான் காணும் கனவு" என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: