மக்களவை தேர்தல் 2019: பிபிசி செய்திகள் வழங்கும் ரியாலிட்டி செக் தொடர்

ரியாலிட்டி செக்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூற்றுகள் குறித்து ஆய்வு செய்ய ரியாலிட்டி செக் என்ற சேவையை பிபிசி செய்திகள் தொடங்க இருக்கிறது.

வரும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல், ஆங்கிலம் மற்றும் பிற ஆறு இந்திய மொழிகளில் வாரத்தின் ஐந்து நாட்களுக்கு ரியாலிட்டி செக் செய்திகள் வெளியிடப்படும். இதில் அரசியல் கட்சிகள் கூறும் கூற்றுகளை ஆய்வு செய்து - உரிய தரவுகளை பயன்படுத்தி, அதன் பின்னால் இருக்கும் உண்மை மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பிபிசி உலக சேவையின் இயக்குனர் ஜேமி ஆங்கஸ், இந்திய தேர்தலுக்கான சிறப்பு சேவையாக ரியாலிட்டி செக் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் அவர்கள் கூறுவதை ஆய்வு செய்து அது உண்மையா அல்லது பொய்யா, மக்களை தவறாக வழிநடத்துகிறதா என்பதை வெளிப்படுத்துவதே பிபிசி ரியாலிட்டி செக்கின் சவாலாகும்.

"மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை தோற்றுவிக்கின்ற தேர்தல் போன்ற நேரங்களில், எங்களது சுயாதீன பகுப்பாய்வுக்கு மிதவும் மதிப்பளிப்பதாக எங்கள் நேயர்கள் கூறுகறார்கள். இதற்கு தயாராக இருந்து, முக்கிய நிகழ்வுகளை ஆய்வு செய்ய போதுமான வளங்களை வைத்திருந்தால்தான், போலி செய்திகளுக்கு நாம் உடனடியாக பதில் கொடுக்க முடியும்" என அப்போது பேசிய ஜேமி ஆங்கஸ் கூறியிருந்தார்.

போலிச் செய்திகள் குறித்தும், டிஜிட்டல் அறிவாற்றல் பயிற்சிகளை இந்தியாவில் பல இடங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அளித்தும் கடந்தாண்டு நவம்பரில் 'Beyond Fake News' என்ற நிகழ்வை பிபிசி நடத்தியதை தொடர்ந்து, ரியாலிட்டி செக் என்ற புதிய சேவையை தற்போது தொடங்க இருக்கிறோம்.

"ரியாலிட்டி செக் மூலமாக, இந்தியாவில் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தும் முக்கிய செய்திகளை விவரித்து, எங்களின் நேயர்களுக்கு வழங்குவோம். இந்த தேர்தல் நேரத்தில், நம்பகத்தன்மையான தகவலை தரும் செய்தி நிறுவனமாக விளங்குவோம்" என பிபிசியின் இந்திய மொழிகளுக்கான ஆசிரியர் ரூபா ஜா கூறுகிறார்.

தற்கால இந்தியாவின் வாழ்வுதாரங்களை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடிய விவகாரங்களின் மீது ரியாலிட்டி செக் அறிக்கைகள் கவனம் செலுத்தும். பணவீக்கம், பாதுகாப்பு, தூய்மை இயக்கங்கள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு போன்ற தலைப்புகளில் அரசியல் கட்சி கூறும் கூற்றுகளை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட தரவுகள் இதற்கு பயன்படுத்தப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: