"பழங்குடிகளை வெளியேற்றினால் காடு அழியும்" - தமிழகத்தின் நிலை என்ன?

  • மு.நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்
பழங்குடி

பட மூலாதாரம், M Niyas Ahmed

படக்குறிப்பு,

கோப்புப் படம்

இந்தியாவில் ஏறத்தாழ பத்து கோடி பழங்குடியினர் வசிக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி 40 லட்சத்திற்கும் மேலான பழங்குடிகள் பாதுக்காக்கப்பட்ட வனப் பகுதிகளில் வசிக்கிறார்கள். இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது இந்திய நிலபரப்பில் 5 சதவீதம்.

இந்த 5 சதவீத பகுதியில்தான் 500 வன உயிர் சரணாலயங்களும், 90 தேசிய பூங்காக்களும் உள்ளன.

அண்மையில்வந்த நீதிமன்ற தீர்ப்பால் லட்சகணக்கான பழங்குடி மக்களும், காடுகளில் வாழ்வோரும் காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பானது வனத்தில் வசிக்கும் மக்களை துன்புறுத்த வழிவகை செய்யும் என்று செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைக்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.

வனத்தின் பிள்ளைகள் அகதிகளாக

தமிழகத்தில் வன உரிமை கோரிய மனுக்களில் ஏறத்தாழ 9000 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் இரா. முருகவேள்.

பழங்குடிகள் மத்தியில் பல தசாப்தங்களாக பணியாற்றும் இரா. முருகவேள் அவர்கள் குறித்து நாளி என்ற ஆவணப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

"2002ஆம் ஆண்டு இது போல் தீர்ப்பு வந்தது. அந்த சமயத்தில் பலவந்தமாக வனங்களிலிருந்து மக்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் துப்பாக்கிச்சூட்டில் மரணித்தார்கள்." என்கிறார்.

இப்போதும் அதுபோல நிலை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக அச்சம் தெரிவிக்கிறார் முருகவேள்.

பட மூலாதாரம், Facebook

"பழங்குடிகள் மட்டுமே காடுகளில் வசிப்பது போல பொதுபுத்தியில் ஒரு தவறான புரிதல் உள்ளது. அதனால் இந்த தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கூட பழங்குடிகள் மட்டும் காடுகளில் வசிக்கலாம், பிறர் வெளியேறலாம் என்ற தொனியில் பேசுகிறார்கள். உண்மையில் காடு, மலைகளில் பல சமூகங்கள் வசிக்கின்றன; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம், இடைநிலை சாதிகளும் வசிக்கிறார்கள்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இவர்கள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடு என்ன என்ற கேள்வியை முன் வைக்கிறார் முருகவேள்.

அவர், "வன உரிமை சட்டம் மிகவும் ஜனநாயகமான சட்டம், வனத்தை நிர்வகிப்பதில் வனத்தில் வாழும் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். வனம் குறித்து என்ன முடிவெடுத்தாலும் அவர்களிடம் கேட்காமல் எடுக்கக் கூடாது என்கிறது அந்த சட்டம். வனத்திலிருந்து அம்மக்களை வெளியேற்றும் சூழல் வந்தால் அவர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால், அப்படியான எந்த வழிக்காட்டுகளும் இந்த தீர்ப்பில் இல்லை. வனத்தின் பிள்ளைகள் ஒரே நாளில் அகதிகளாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது" என்கிறார் அவர்.

சுழலியலாளர்கள், இடதுசாரிகள் என பல தரப்பு போராடி பெற்ற வன உரிமை சட்டத்தை பயன்படுத்தியே அம்மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். அதாவது நம் கையை வைத்தே நம்மை குத்துவது போல என்கிறார் முருகவேள்.

"எல்லா தரப்பும் செய்த தவறே இந்த தீர்ப்புக்கு காரணம்." என்கிறார் முருகவேள்.

"இந்த வழக்கு நடந்த போது அரசு தரப்பு ஆஜராகவே இல்லை அடுத்து சூழலியலாளர்கள் இந்த வழக்கை சாதரணமாக எடுத்துக் கொள்ளமல் நீதிமன்றத்தில் கடுமையாக போராடி இருக்க வேண்டும் என்கிறார்."

பழங்குடிகளும் காடுகளும்

"பரத்பூர் பறவைகள் சராணலயத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் நினைவுகூர வேண்டும். மக்கள் அந்தப் பகுதியில் வசித்தபோது பறவைகள் தொடர்ந்து வந்தன. அவர்களை வெளியேற்றியப் பின் பறவைகள் வருகை குறைந்தது.

பட மூலாதாரம், M Niyas Ahmed

படக்குறிப்பு,

வனமகள் (கோப்புப் படம்

இதற்கு என்ன காரணமென்று ஆய்வு செய்த போது, அங்குள்ள நீர்நிலைகளை சுற்றி புதர் மண்டியதுதான் காரணமென தெரிய வந்தது. அதாவது, மக்கள் அங்கு இருந்த போது அந்த நீர்நிலைகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். புதர் ஏதும் மண்டவில்லை. அவர்களை வெளியேறியபின் நீர்நிலைகள் தெரியாத அளவுக்கு செடிகள் வளர்ந்தன. நீர்நிலைகள் இருப்பதே பறவைகளுக்கு தெரியவில்லை" என்கிறார்.

இப்போது பந்திபூரில் ஏற்பட்டுள்ள காட்டுதீயையும் மேற்கோள் காட்டுகிறார்.

"சீவாங்குச்சி மற்றும் காய்ந்த இலைகள் காட்டுத் தீக்கு ஒரு முக்கிய காரணம். காடுகளில் பழங்குடிகள் வசிக்கும் போது, இதனை அவர்கள் அன்றாடம் தேவைக்காக பொறுக்குவார்கள். அதனால், காட்டுத் தீ தடுக்கப்பட்டது. பழங்குடிகள் இல்லை என்றால் காடு அழியும்." என்கிறார் முருகவேள்.

மக்களற்ற காடு

இந்த வாதங்களை புறந்தள்ளுகிறார்கள் கானுயிர் சார்ந்து செயல்படும் செயற்பாட்டாளர்கள்.

காடுகள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுவதால் கானுயிர்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர் அவர்கள்.

இந்த தீர்ப்புக்கு காரணமான வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்த அமைப்பொன்று, காடுகளுக்குள் மனிதர்கள் நிரந்தரமாக வசிக்க அனுமதிக்கப்படுவதால் கானுயிர்களின் வாழ்விடம் அழிக்கப்படுவதாக கூறுகிறது.

பாரம்பரியமாக காடுகளில் வசிப்பவர்களுக்கு அது குறித்த அறிவு இருக்கிறது. அவர்கள் காடுகளின் பங்குதாரர்கள். அவர்கள் தங்கள் வாழியலில் காடுகளை காப்பாற்றுவார்கள். அவர்களை காடுகளிலிருந்து வெளியேற்றுவது சரி அல்ல என்கிறார் சூழலியலாளர் நாராயணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: