மக்களவை தேர்தல் 2019: பாஜக அரசு பணவீக்கத்தைத் திறம்படக் கட்டுப்படுத்திவிட்டதா? - BBC Reality Check
- வினீத் காரே
- BBC உண்மை சரிபார்க்கும் குழு

கூற்று: இந்தியாவில் சர்வதேச சந்தை நிலவரம் சாதகமாக இருந்தபோதிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம் எனும் உறுதியளித்து, அதன்மூலம் ஆட்சியைப் பிடித்த பாஜக அரசு, விலைவாசி உயர்வைக் குறைக்க எதையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தீர்ப்பு: பணவீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் விகிதம் ஆகியன இந்த அரசின் கீழ் முந்தைய அரசைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. 2014க்கு பிந்தைய உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சி கிராமியப் பொருளாதாரத்தின் வருமானம் குறைய காரணமானது
"பாஜக பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தது, உலக சந்தை நிலவரம் சாதகமாக இருந்தபோதிலும், அரசாங்கத்தால் எதுவும் செய்யப்படவில்லை," என்று ராஜஸ்தான் மாநிலக் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கடந்த ஆண்டு கூறினார்
2017இல் அவரது கட்சி தலைவரான ராகுல் காந்தியும், பிரதமர் நரேந்திர மோதியை "விலைவாசியைக் கட்டுக்குள் வையுங்கள் அல்லது அரியணையை விட்டு வெளியேறுங்கள்" என்று தாக்கினார்.
ஆனால் மோதி தனது சாதனையை நியாயப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பணவீக்கம் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைவாக இருந்தது என்று கூறினார்.
2014 தேர்தலில் பாஜகவின் முதன்மையான வாக்குறுதிகளில் ஒன்று, அதிக விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்பதாக இருந்தது.
அந்த ஆண்டில் அரசாங்கக் குழு ஒன்று, அதில் அதிகபட்சம் இரண்டு சதவிகிதம் ஏற்றமோ இறக்கமோ உடைய நான்கு சதவீத பணவீக்க இலக்கை பரிந்துரைத்தது. இவை மாறுதலுக்கு உட்பட்ட பணவீக்க இலக்கு என்று அழைக்கப்படுகிறது.
பணவீக்கச் சாதனை
எனவே, இதில் யார் சொன்னது சரி?
2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பணவீக்கம் கிட்டத்தட்ட 12 சதவீதத்தை எட்டியது.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிதரமர் மோதியின் பாஜக ஆட்சியின் கீழ் பணவீக்கம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைவாக உள்ளது.
2017இல் சராசரியாக ஆண்டு விகிதம் வெறும் 3% அளவிற்குக் குறைவாகவே இருந்தது.
பணவீக்கம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இந்தியா போன்ற பெரும் பன்முகத்தன்மையுடைய நாட்டில் பணவீக்கத்தைக் கணக்கிடுவது என்பது சிக்கலான விவகாரமாகும்.
பொதுவாக அதிகாரிகள், பணவீக்கம் சரக்கு மற்றும் சேவைகளின் மொத்தவிலையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
ஆனால் 2014ஆம் ஆண்டில், நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி இதற்காக நுகர்வோர் விலைப்பட்டியலை (CPI) பயன்படுத்தத் தொடங்கியது.
பட மூலாதாரம், Getty Images
இவை நுகர்விற்கு நேரடியாகப் பயன்படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவைகளின் விலையைப் பார்க்கும் அல்லது சில்லறை விலைகளை மட்டும் கணக்கிடும்.
மேலும், இது சரக்கு மற்றும் சேவைகள் குறித்த தகவலைப் பதிவு செய்யும் கணக்கெடுப்பின் அடிப்படையிலானதாகும்.
இக்கணக்கெடுப்பானது உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
உணவு அல்லாத பொருட்கள் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளை உள்ளடக்கியது. அத்துடன் மின்னணு பொருட்கள் மற்றும் மற்ற நுகர்வோர் நிலைப் பொருட்களும் இதில் அடங்கும்.
இதே ஆய்வு நெறிமுறை மற்ற பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், பணவீக்கத்தைக் கணக்கிட கணக்கில்கொள்ளப்படும் பொருட்களின் எண்ணிக்கை மற்றும் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களை எடையிடுவது மாறுபடும்.
ஏன் பணவீக்கம் குறைந்துள்ளது?
பிரதமர் மோதியின் ஆட்சிக் காலத்தில் முதல் சில ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் சீரான விலைக் குறைவு ஒரு பெரிய காரணியாகப் பல ஆய்வாளர்களால் பார்க்கப்பட்டது.
இந்தியா தனது 80% எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. மேலும், உலகளாவிய விலை ஏற்ற இறக்கங்கள் பணவீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
2011ஆம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெயின் பீப்பாய் ஒன்றுக்கான விலை சுமார் 120 டாலர்களாக இருந்தது.
இது ஏப்ரல் 2016இல் 40 டாலருக்குக் கீழ் குறைந்தது. இருப்பினும் அதைத் தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டுகளில் விலை மீண்டும் அதிகரித்தது.
ஆனால், பொருளாதாரத்தில் பணவீக்கத்தைப் பாதிக்கும் மற்ற காரணிகளும் உள்ளன.
இதில், ஒரு முக்கியமான காரணியான உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில். இந்திய மக்கள் தொகையில் 60% மேலானவர்கள் கிராமப்புறங்களில் தான் வாழ்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் முன்னால் தலைமை புள்ளியியளாலர் பிரொனாப் சென் சமீபத்திய காலத்தில் விவசாய வருவாய்கள் குறைந்துள்ளதால் பணவீக்கமும் குறைந்துள்ளது என்று கூறினார்.
இது பெரும்பாலும் இந்த இரண்டு விஷயங்களின் கீழ் இருக்கும் என்றும் அவர் நம்புகிறார்:
- தற்போதைய அரசாங்கம் கிராமப்புறப் பகுதிகளுக்கு வருவாயை உறுதி படுத்துவதற்காகப் பெரிய திட்டங்களுக்கான நிதியைக் குறைக்கிறது
- வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு வழங்க உள்ளதாக அரசு உத்தரவாதம் அளித்துள்ள விலைகளின் குறைந்தபட்ச அதிகரிப்பு
பட மூலாதாரம், Getty Images
"முந்தைய எட்டில் இருந்து பத்து ஆண்டுகளில் [காங்கிரஸின் ஆட்சி காலம்], கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் கிராமப்புற ஊதியங்களை உயர்த்தியது. அதன் விளைவாக உணவிற்கான செலவினம் அதிகரித்தது," என்று பிரொனோப் சென் கூறுகிறார்.
ஆனால், அத்துடன் இப்பொழுது இந்த ஊதிய உயர்வுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும் இது தேவையை திறம்பட குறைப்பதோடு பணவீக்கமும் குறையும்.
இந்தியாவின் மத்திய வங்கி
தேவைகளைக் கட்டுக்குள் வைக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவிய மற்ற கொள்கை முடிவுகளும் இருந்தன.
இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தைக் குறைக்கும் அவசரத்தில் இல்லை. அப்படி செய்திருந்தால், அது நுகர்வோரை அதிகமாகக் கடன் வாங்கி செலவு செய்ய அனுமதித்திருக்கலாம்.
பிப்ரவரியின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த விலைக்குறைப்பு 18 மாதங்களில் முதல் முறையாகும்.
அரசாங்கமும் அதன் நிதிப்பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் குறியாக இருந்தது. நிதிப்பற்றாக்குறை என்பது அரசின் வருவாய் மற்றும் செலவீனங்களுக்கு இடையேயான வித்தியாசம் ஆகும்.
குறைந்த நிதிப் பற்றாக்குறை பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது. ஏனென்றால் அரசாங்கம் குறைவாகக் கடன் வாங்கிக் குறைவாகச் செலவு செய்கிறது.
எனினும், தேர்தல் நெருங்குவதால், குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில், அரசாங்கம் தனது செலவை அதிகரிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை உணரலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்