ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா பிரிட்டன்?

ஜாலியன்வாலாபாக்

பட மூலாதாரம், AFP

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள், பிரிட்டன் துருப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு பிரிட்டன் மன்னிப்புக் கோர வேண்டுமா என்று அந்நாட்டின் பிரபுக்கள் சபை விவாதிக்க தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், புனைவுகளில் இருந்து உண்மையை பிரித்தெடுக்கிறார் வரலாற்றாசிரியர் கிம் வேக்னர்.

1919 ஏப்ரல் 13ஆம் தேதியன்று அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாகில் நடந்த கொடுமையான சம்பவத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதை சர்ஜென்ட் டபிள்யூ.ஜே.ஆண்டர்ஸன் நேரில் பார்த்தார்.

"துப்பாக்கிச்சூடு தொடங்கியதும், அங்கிருந்த பொதுமக்கள் கூட்டம் தரையோடு குனிந்து கொண்டது. பலரும் பிரதான நுழைவுவாயில் நோக்கி ஓடத் தொடங்கினர். மேலும் சிலர் உயரமான சுவரில் ஏறி தப்பிக்க முயன்றனர்" என்று நினைவு கூர்கிறார் ஆண்டர்ஸன்.

இவர் பிரிகேடியர் ஜெனரல் ஆர்எச் டயரின் பாதுகாவலராக இருந்தார். அமிர்தசரஸ் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பாகதான் டயர், அங்கு வந்திருந்தார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ஜெனரல் டயர்

ஜாலியன்வாலாபாகில் அன்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் எல்லாம் இருக்கவில்லை. அவர்கள் அப்பகுதியில் குடியிருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள மற்ற கிராமங்களில் இருந்து அரசியல் உரைகளை கேட்கவோ அல்லது பூங்காவில் சில மணி நேரங்கள் செலவிடவோ வந்தவர்கள்.

அன்றைய தினம், சீக்கியர்களின் புத்தாண்டான பைசாகி விழா என்பதால், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் பக்தர்கள் அங்கிருந்தார்கள்.

அக்கூட்டத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் என அனைவரும் இருந்தனர். பெரும்பாலும், ஆண்களும், இளைஞர்களும், சில குழந்தைகளும் இருந்தார்கள். ஒரு சில பெண்கள் மட்டுமே இருந்தனர்.

ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூடை நிறுத்த உத்தரவிட்டபோது, ஜாலியன்வாலாபாக் மைதானம், இறந்த உடல்களால் நிறைந்திருந்த போர்களம் போல காட்சியளித்தது. 500 - 600 பேர் வரை கொல்லப்பட்டனர். இதைவிட மூன்று மடங்கு அதிகமான மக்கள் காயமடைந்திருந்தனர். உண்மையாக அங்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது, ஆனால் சில மாதங்களுக்கு பிறகு 379 பேர் மட்டுமே இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு பிரிட்டன் முறையாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று சில ஆண்டுகளாக குரல் எழுந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் உள்ளிட்ட சிலர் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

1997ஆம் ஆண்டு இரண்டாம் ராணி எலிசபெத்தும், 2013ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டேவிட் கேமரூனும் ஜாலியன்வாலாபாக்கை பார்வையிட்டு மரியாதை செலுத்த வருகை தந்திருந்தனர். எனினும், அவர்கள் மன்னிப்பு கேட்பதை கவனமாக தவிர்த்து விட்டனர்.

2017 டிசம்பர் மாதம், லண்டன் மேயர் சாதிக் கான், அமிர்தசரஸ் வந்திருந்தபோது, பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

2013ஆம் ஆண்டு அமிர்தசரஸை பார்வையிட வந்த டேவிட் கேமரூன்

"சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் கடக்கவிருக்கும் நிலையில், பிரிட்டன் அரசாங்கம் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். முறையான மன்னிப்பு கேட்பதன் மூலம், இங்கு நடந்தவற்றை ஒப்புக் கொள்வதோடு, அமிர்தசரஸ் மற்றும் இந்திய மக்களுக்கு இந்த விஷயத்தில் ஒரு முடிவை கொடுக்க முடியும்" என்று சாதிக் கான் தெரிவித்திருந்தார்.

எப்படியிருந்தாலும், அன்றைய தினம் ஜாலியன்வாலாபாக்கில் சரியாக என்ன நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. சம்பவம் நடந்து ஒரு நூற்றாண்டு ஆகியும் அப்படுகொலை நடந்த சூழல் குறித்த கதைகளும், தவறான புரிதலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

மைதானத்தில் இருந்த மக்கள் கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் வேறு வழியில்லாமல் ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.

ஜாலியன்வாலாபாக் நினைவிடத்தில் இன்றும் சில தவறான உண்மைகள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள தியாகிகள் கிணறில் 120 உடல்கள் எடுக்கப்பட்டதாக எழுதியிருக்கும். துப்பாக்கிக் குண்டுகளிடம் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் கிணற்றினுள் குதித்ததாக நம்பப்படுகிறது.

ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஜாலியன்வாலாபாக் சம்பவத்தின் காட்சி சித்தரிப்புகளில் கூட, அவர்கள் மெஷின் துப்பாக்கி வைத்திருந்தது போலவே காண்பிக்கப்பட்டது. அன்று 50 கூர்கா மற்றும் பலூச்சி துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

ஜெனரல் டயர் திட்டமிட்டு இந்த படுகொலையை நிகழ்த்தவில்லை என்றும் வேண்டும் என்றே மக்கள் கூட்டத்தை அங்கு அடைக்கவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்தியாவின் அரசியல் கொந்தளிப்பு குறித்து பிரிட்டன் சரியாக புரிந்து கொள்ளத் தவறியதே, இந்த வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

முதலாம் உலகப்போரின் முடிவில் அரசியல் சீர்திருத்தம் செய்யவும், அதிக சுயநிர்ணய உரிமைகள் தரவும் பிரிட்டன் முன்வரும் என்று இந்திய தேசியவாதிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ஏப்ரல் 10ஆம் தேதி அமிர்தசரஸில் கலவரம் வெடித்தபோது, ஐந்து ஐரோப்பியர்கள் மற்றும் டஜன் கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உடனடியாகவும், கண்மூடித்தனமாகவும் பிரிட்டன் அதிகாரிகள் பதிலடி கொடுத்தனர்.

மூன்று நாட்களுக்கு பிறகு, போர் நடக்கும் பகுதி என நினைத்து ஜெனரல் டயர் தவறான இடத்தில் நுழைந்தார்.

அங்கு கூடியிருந்த கூட்டம் அமைதியாக ஓர் அரசியல் சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருந்ததாகவே பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால், அடுத்த சில நாட்களில் அமிர்தசரஸ் நகரில் வன்முறையை உண்டாக்க வாய்ப்புள்ள, சட்டத்தை மதிக்காத கொலைவெறியுள்ள கும்பலாக ஜெனரல் டயர் அதைப் பார்த்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சுவரில் உள்ள துப்பாக்கிச்சூட்டின் தடங்கள்

மோசமாக செய்யப்பட்ட மதிப்பீடுகளால் தூண்டப்பட்ட அச்சத்தால் அவர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.

எனினும் இவை எதுவும் அந்தக் கொலைகளின் கொடூரத்தை குறைத்துவிடாது. அந்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் நியாயப்படுத்த முடியாது.

ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை விவரிக்க மிகைச் சொற்கள் எதுவும் தேவையில்லை. அரசியல் நோக்கங்களுடன் கூறப்படும் கட்டுக்கதைகளை விட, கொல்லப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மைகளே முக்கியம்.

எனினும், பிரெக்ஸிட் வலிகளில் உள்ள பிரிட்டன் அரசாங்கம் மன்னிப்பு கேட்பது சாத்தியமாகத் தோன்றவில்லை.

கடந்த காலத்தில் நடந்த சம்பவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், கேட்கப்படும் மன்னிப்பு, பலரும் எதிர்பார்க்கும் வகையில் இந்த நிகழ்வுக்கு முடிவைத் தருமா என்பதும் கேள்விக்குறியே.

கிம் வேக்னர், Amritsar 1919: An Empire of Fear and the Making of a Massacre (Yale University Press) மற்றும் Jallianwala Bagh: An Empire of Fear and the Making of the Amritsar Massacre (Penguin India).ஆகியவற்றை எழுதியவர் ஆவார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :