“எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் ஒரு நாளைக்கு குறைந்தது 375 ரூபாய் ஊதியம்”

“எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் ஒரு நாளைக்கு 375 ரூபாய் ஊதியம்”

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "ஒரு நாளைக்கு 375 ரூபாய் சராசரி ஊதியம்"

படிப்பு, செய்யும் வேலை, அனுபவம் என எவ்வித வேறுபாடின்றி இந்தியாவில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் குறைந்தது 375 ரூபாய் தினக்கூலியாக வழங்கப்பட வேண்டுமென்று மத்திய அரசுக்கு வல்லுநர் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளதாக ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தேசிய அளவில் தினக்கூலி உள்ளிட்ட பல்வேறு படிநிலைகளை மாற்றியமைக்கும் வகையிலான பரிந்துரைகளை தயார் செய்வதற்கான பணியை கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வி.வி.கிரி நேஷனல் லேபர் இன்ஸ்டிடியூட்டிடம் ஒப்படைத்திருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்த குழுவினர், படிப்பு, செய்யும் வேலை, அனுபவம் என எவ்வித வேறுபாடின்றி இந்தியாவில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் குறைந்தது 375 ரூபாய் தினக்கூலியாக, அதாவது மாதத்திற்கு 9,750 ரூபாய் ஊதியம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும், பணியாளர்களின் வீட்டு வாடகைக்காக வழங்கப்படும் படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் தொடக்கம்"

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நரேந்திர மோதி

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கும் திட்டத்தை உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமர் மோதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கிவைத்தாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த பட்ஜெட்டில், நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் வகையில் 'பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏறத்தாழ 12 கோடி விவசாயிகளும், தமிழ்நாட்டில் சுமார் 75 லட்சம் விவசாயிகளும் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2 ஆயிரத்தை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் நேரடியாக செலுத்துவதற்கான பொத்தானை பிரதமர் நரேந்திர மோடி அழுத்தி, திட்டத்தை தொடங்கி வைத்தார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் - "சென்னையில் பயங்கர தீ விபத்து"

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

சென்னை போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள தனியார் வாடகைக் கார் நிறுத்திமிடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ அருகில் இருக்கும் இந்த இடத்துக்கும் பரவியதாகத் தெரிகிறது. கொழுந்து விட்டு எரியும் தீயைக் கட்டுபடுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் களமிறக்கப்பட்டன

கார்களில் பிடித்த தீ காரணமாக அந்த பகுதியில் ஏற்பட்ட புகையால் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். நிறைய கார்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

பெங்களூருவில் விமான கண்காட்சி கார் பார்க்கிங்கில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமணி - "முதுமலை புலிகள் காப்பக வனத்தில் தொடர்ந்து எரியும் தீ"

பட மூலாதாரம், Getty Images

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் அங்கு சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்படவில்லை என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மன்றாடியார் வனப் பகுதியில் சனிக்கிழமை தீப்பிடித்தது. காட்டுத் தீ தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பரவி வருகிறது. தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குப் பின்புறம் வரை தீ பரவிவிட்டதால், அப்பகுதிக்கு புலிகள் காப்பக நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை.

மேலும், மசினகுடி, கார்குடி உள்ளிட்ட வனத்தின் உள் பகுதியிலும் காட்டுத் தீ எரிந்து கொண்டிருக்கிறது. முதுமலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக புல்வெளிகள், செடி, கொடிகள் உள்ளிட்ட தாவரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இதனால் காட்டுத் தீ மளமளவென பரவி வருகிறது. புல்பூண்டுகள், பெரிய மரங்கள் என அனைத்தும் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. வனத்தின் பல பகுதிகளிலும் தீ பரவியுள்ளதால் தீயை அணைக்க முடியாமல் வனத் துறையினர் திணறி வருகின்றனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :