டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவதென்ன? பா.ஜ.க. கூட்டணியில் நீடிக்கிறதா புதிய தமிழகம்?

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

பட மூலாதாரம், PT Party

படக்குறிப்பு,

கிருஷ்ணசாமி

பாரதீய ஜனதாக் கட்சியுடன் நெருக்கமாக இருந்துவந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என அறிவித்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தேவேந்திர குல வேளாளர் மக்களை இட ஒதுக்கீட்டிற்கான பட்டியல் இனத்திலிருந்து நீக்க வேண்டுமென கோரி வருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. கடந்த சில மாதங்களாக பாரதீய ஜனதாக் கட்சியுடனும் நெருக்கமாக இருந்துவந்தார். இதனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திங்கட்கிழமை மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, அறிக்கை ஒன்றை செய்தியாளர்களிடம் அளித்தார். அந்த அறிக்கையில், அண்மையில் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோதி, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலினத்திலிருந்து நீக்குவதாகக் கூறினாலும் அது தொடர்பாக நடவடிக்கை ஏதும் இல்லை என்றும் தமிழக அரசும் இது தொடர்பாக மௌனமாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக இந்தக் கோரிக்கைக்கு மத்திய - மாநில அரசுகள் செயல்வடிவம் கொடுக்க முன்வந்தால் அதற்கேற்றபடி கூட்டணி அமையுமென்றும் இல்லாவிட்டால் அதை அமலாக்கும் தகுதி படைத்த பிற கட்சிகள் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதமளிப்பதோடு கௌரவமான இடங்களையும் அளித்தால் அவர்களோடு கூட்டணி வைப்பதைப் பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், PT PARTY

இல்லாவிட்டால், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் புதிய தமிழகம் தலைமையில் அரசியல் இயக்கங்களை இணைத்து தேர்தல் களமாட உரிய வியூகம் வகுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, எங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்கும் கட்சியுடன்தான் கூட்டணி; பா.ஜ.கவும் அதிமுகவும் அதனைச் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றுவது குறித்துப் பரிசீலிப்போம் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து கேட்டபோது, தி.மு.க. அதனைத் தன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டுமென்றார். மேலும் பா.ஜ.கவுடனோ, அ.தி.மு.கவுடனோ தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லையென்றும் கோரிக்கையை ஏற்ற பிறகுதான் பேச்சுவார்த்தையென்றும் கூறினார்.

தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க. - அ.தி.மு.க. இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவதுபோல அறிக்கை கூறுகிறதே என்று கேட்டபோது, தான் தனித்துப் போட்டியிடப்போவதாகச் சொல்லவில்லையென்று கூறினார்.

பா.ஜ.கவுடன் இவ்வளவு நாட்களாக நட்புணர்வுடன் இருந்தது குறித்தும் பிரதமர் மோதியே அவருடைய கோரிக்கை குறித்து பேசியிருப்பதையும் பார்க்கும்போது,போதுமான அளவில் இடங்கள் ஒதுக்கப்படாததால்தான் கூட்டணியைவிட்டு வெளியேறுகிறீர்களா என்று கேட்டபோது அது தவறான கருத்து என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என இறுதியாக அவர் கூறியவுடன், தேர்தல் கூட்டணிகள் முடிவான பிறகுதானே தேர்தல் அறிக்கை வெளிவரும்; அப்போது எப்படி புதிதாக கூட்டணியில் இணைய முடியும் என்று கேட்டபோது, கட்சிகள் சுறுசுறுப்பாக இருக்கின்றன; அதனால் விரைவில் தேர்தல் அறிக்கைகள் வெளியாகும். அதை வைத்து முடிவெடுப்போம் என்ற கிருஷ்ணசாமி, செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :