2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடையா?

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடையா?

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடையா?"

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது என்று தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"பா.ஜனதா கட்சியை சேர்ந்த வக்கீல் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார்.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது என்று தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், அதை ஏற்க மறுப்பவர்களுக்கு அரசு வேலை, மானியம் மற்றும் குடியுரிமை, ஓட்டுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ''அரசியல் அமைப்பை கொண்டு இயங்கும் நீதிமன்றம், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று எப்படி சொல்ல முடியும்?'' என்று கேட்ட நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்து தமிழ்: "5 விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை 50 ஆண்டுகளுக்கு கைப்பற்றிய அதானி நிறுவனம்"

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/GETTY IMAGES

விமான நிலைய நிர்வாக பொறுப்பை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைக்க முடிவெடுத்துள்ள நிலையில் முதல்கட்டமாக 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களின் நிர்வாக பொறுப்பை அதானி நிறுவனம் பெறவுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"நாடுமுழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பணியில் தனியாரையும் இணைத்துக் கொள்ள சில மாதங்களுக்கு முன்பு முடிவெடுக்கப்பட்டது. இதன்படி திருவனந்தபுரம், அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் விமான நிலையங்களின் அன்றாட பணிகள் மற்றும் பராமரிப்பு முழுமையாக அதானி நிறுவனம் வசம் ஒப்படைக்கப்படும்.

கவுகாத்தி நிறுவனத்துக்கான ஒப்பந்த புள்ளிகள் இன்னமும் திறந்து பார்க்கப்படவில்லை. ஏற்கெனவே தனியார் துறைமுகங்களில் கால் பதித்து வரும் அதானி நிறுவனம் தற்போது விமான நிலையங்களிலும் தனது பணியை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்"

பட மூலாதாரம், FACEBOOK/MUGILAN SWAMIYATHAL

படக்குறிப்பு,

முகிலன்

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 14 பேர் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த ஆவணப்படமொன்றை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் வெளியிட்டது முதல் சமூக ஆர்வலர் முகிலன் காணவில்லை. இதுகுறித்து, முதலில் ரயில்வே காவல்துறையினரும், பின்னர் எழும்பூர் காவல் நிலையத்தின் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், இந்த வழக்கை நேற்று (திங்கட்கிழமை) சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஓர் அணு குண்டு வீசினால் இந்தியா 20 குண்டுகளை வீசிவிடும்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

பர்வேஸ் முஷாரஃப்

இந்தியா மீது பாகிஸ்தான் ஓர் அணுகுண்டு வீசினால், அந்த நாடு பதிலுக்கு 20 குண்டுகளை வீசி நம்மை அழித்துவிடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நிலவும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளுமா? என்பது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அளித்த பதில், பாகிஸ்தான் நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

"ஒரு நாடு மற்றொரு நாடு மீது போர் தொடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுபோன்று பேசாதீர்கள். அது முற்றிலும் ராணுவ ரீதியிலான திட்டங்களைச் சார்ந்தது. எனவே, இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற வாய்ப்பில்லை.

இந்தியா மீது பாகிஸ்தான் ஓர் அணுகுண்டு வீசினால், பதிலுக்கு இந்தியா 20 குண்டுகளை வீசி நம்மை அழித்து விடும். அதற்கு ஒரே தீர்வு, முதல் தாக்குதலிலேயே இந்தியா மீது நாம் (பாகிஸ்தான்) 50 குண்டுகளை வீச வேண்டும். அதன் பிறகு அவர்களால் 20 குண்டுகளை நம் மீது வீச முடியாது. முதல் தாக்குதலில் 50 குண்டுகளை வீசுவதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ளதா?" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :