இந்திய விமானப் படை தாக்குதல்: என்ன சொல்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் இரு வாரங்களுக்கு முன்பு நடத்திய தாக்குதலில் இந்திய படை வீரர்கள் குறைந்தது 40 பேர் பலியான சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியாவில் புல்வாமாவை போன்ற மற்றொரு தாக்குதல் நடைபெற்று விடக்கூடாது என்ற நோக்கத்தில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகப் பெரிய முகாமை தாக்கி அழித்ததாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் எவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன என்று காண்போம்.

ரேடியோ பாகிஸ்தான் - "இந்தியாவுக்கு நுழைந்து தாக்குதல்..."

பாகிஸ்தானின் முன்னணி வானொலி சேவை நிறுவனமான 'ரேடியோ பாகிஸ்தான்', பாலகோட் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பப்படும் விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இம்ரான் கான்

"இரவு நேரத்தில் இந்திய விமானப்படை கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியதை முறியடித்த பாகிஸ்தான் விமானப்படை, அவர்களை விரட்டியடித்தது. பாகிஸ்தானை சீண்டும் வகையிலான போக்கை இந்தியா நிறுத்தாவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று பாகிஸ்தானின் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அலி முகம்மது கான் தெரிவித்துள்ளதாக ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் கூட்டி இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்த பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான குர்ஷித், "பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் நுழைந்து இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியும்போது, பாகிஸ்தானாலும் இந்தியாவின் உட்பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முடியும்" என்று தெரிவித்ததாக ரேடியோ பாகிஸ்தானின் செய்தி மேலும் விவரிக்கிறது.

டான் - "பிரதமர் தலைமையில் அவசரக்கூட்டம்"

இருநாடுகளுக்கிடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது தொடர்பாக விவாதிப்பதற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளதாக பாகிஸ்தானின் முன்னணி ஊடகமான டான் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், MANJUNATH KIRAN

படக்குறிப்பு,

கோப்புப்படம்

அதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டமும் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நடத்த கூட்டத்தில், பல்வேறு துறைகளின் முன்னாள் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றதாகவும், அப்போது பேசிய பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, "பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால், இந்தியா தனது மோசமான செயல்பாட்டின் மூலம் பிராந்தியத்தின் சூழ்நிலையை மோசமாக்கி வருகிறது" என்று தெரிவித்ததாக அதில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.

தி எக்ஸ்பிரஸ் ட்ரைபியூன் - "பாகிஸ்தானின் கொடி டெல்லியில் ஏற்றப்படும்"

இந்தியாவின் விமானப்படை தாக்குதல் குறித்து பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருவதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரைபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபஸ் ஷெரீஃப், "இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக போரை தொடுத்தால், பாகிஸ்தானின் கொடி புதுடெல்லியில் பறக்கவிடப்படும். அமைதியை நோக்கிய பாகிஸ்தானின் செயல்பாட்டை பலவீனமாக கருதினால் அது மிகப் பெரிய தவறு" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

"தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி பிராந்திய அமைதியை குலைக்க கூடாது. பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலுக்கான இழப்பை சந்திக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரான ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரைபியூனின் செய்தி விவரிக்கிறது.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஊடகங்களும் வேறுபட்ட கோணத்தை கொண்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் பிரபல ஊடக நிறுவனமான நியூஸ்18, "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2 எனப்படும், இந்தியாவின் இந்த தாக்குதலில் மிராஜ்-2000 ரக 12 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டது. குறிப்பாக, கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரியில் நடத்தப்பட்ட தாக்குதலை விட இது பல மடங்கு பெரியது" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், M.A.JARRAL

புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்திருக்கும் நிலையிலும், தொடர்ந்து நான்காவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் விதியை மீறி செயல்பட்டு வருவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ராஜோரி ஆகிய மாவட்டங்களை ஒட்டிய இருநாடுகளுக்கிடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது" என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் பல்வேறு அதிநவீன விமானங்கள் இருக்கும்போது 35 ஆண்டுகள் பழமையான மிராஜ் போர் விமானத்தை பயன்படுத்தியது ஏன் என்று சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்த செய்தியை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

"ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசிய போர் விமானத்தை விட பல மடங்கு, அதாவது 20 கிலோ டன் எடையுள்ள அணுகுண்டை மிராஜ்-2000 விமானத்தால் வீச முடியும்" என்று அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: