பாலகோட் இந்திய விமான தாக்குதல்: வரவேற்கிறது புல்வாமாவில் உயிரிழந்த சுப்ரமணியன் குடும்பம்

போர் வாழ்த்துக்கள்

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP/Getty Images

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள பாலகோட்டில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது விமானம் மூலம் குண்டு வீசி அழித்ததாக கூறியுள்ளது இந்தியா.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலை கார் குண்டு தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாகவும் இந்தியா கூறியுள்ளது.

கடந்த 14ம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், துணை ராணுவப்படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இந்த தாக்குதலுக்கு பின்னர், இரு நாடுகளுக்கிடையில் போர் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் பாலகோட் விமானத் தாக்குதல் பற்றி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி பாதுகாப்பு படை வீரர் சுப்ரமணியனின் மனைவி மற்றும் உறவினர்கள் பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

"புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் தியாகத்திற்கு கிடைத்த பரிசு" என்றும், "இந்திய விமானபடை வீரர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்" என்றும் தெரிவித்தார் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி.

"தொடர்ச்சியாக இது போன்ற தாக்குதல் நடத்தி தீவிரவாதத்தை இந்திய முழுவதும் ஒழிக்க வேண்டும். எதிர்காலத்தில் தீவிரவாதிகளால் எனது கணவர் போன்று எந்தவொரு இந்திய வீரரும் மரணமடைய கூடாது" என விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்த சுப்பிரமணியனின் தந்தை கணபதி, "இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததை நினைத்து நான் மிகவும் பெருமை அடைகிறேன். ஆனால் அதேநேரத்தில் இது போன்ற தாக்குதலின்போது அப்பகுதிகளிலுள்ள பொது மக்களை பாதிக்காமல் இந்தியா கவனமாக நடந்து கொள்ள வேண்டும்" என கருத்து தெரிவித்தார்.

சுப்பிரமணியனின் நண்பர் ஆறுமுகம் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். "இந்த பதிலடி தாக்குதலால் உயிரிழந்த எனது நண்பர் சுப்பிரமணியின் ஆன்மா சாந்தியடையும். பயங்கரவாதம் முற்றிலும் அழியும் வரை இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டும். எல்லையிலுள்ள இந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் தொடுவதற்கு அச்சம் அடைய வேண்டும்" என தெரிவித்தார்.

சுப்பிரமணியனின் சகோதரர் கிருஷ்ணசுவாமி பேசுகையில், "இன்று காலை நடத்தப்பட்ட இந்த பதிலடி தாக்குதல் மகிழ்ச்சி அளித்தது. இதனை ஓர் ஆரம்ப கட்ட தாக்குதலாகவே பார்க்கிறோன். விமானப் படை வீரர்களுக்கு சுப்பிரமணியின் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன், அடுத்த கட்ட தாக்குதல் மிக பெரிய அளவில் அமைய வேண்டும்" என விரும்புவதாக தெரிவித்தார்.

காஷ்மீர் தாக்குதல் - 'போரில் சாவதைவிட தீவிரவாதியால் கொல்லப்படுவது வேதனையானது'

காணொளிக் குறிப்பு,

“எங்கள் வாழ்க்கை உங்களுக்காக” - முன்னாள் ராணுவ வீரர்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :