பாலகோட் விமான தாக்குதல்: பாகிஸ்தானிலிருந்து இந்திய விமானங்கள் எப்படி வெளியேறின?

போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

மக்கள் தூங்கிக்கொண்டு இருந்த வேளையில், விமானங்கள் முசாஃபராபாத் பகுதியில் நுழைந்தன என்று பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல், ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.

இந்தியாவின் தாக்குதலுக்கு, பாகிஸ்தான் உடனடியாக எதிர்வினையாற்றியதாகவும், இந்திய விமானங்கள் திரும்பி சென்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறிவைத்து இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

"சர்ஜிகல் ஸ்ட்ரைக்" எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தியதாக இந்தியா முன்பு கூறியபோது, அப்படி தாக்குதல் நடக்கவில்லை என்று கூறிய பாகிஸ்தான், இப்போது இந்திய விமானங்கள் வந்ததை ஒப்புக்கொண்டுள்ளது.

இப்போது, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வழியில் நுழைந்து எவ்வாறு வெளியேறின என்றும், பாகிஸ்தானால் ஏன் தாக்குதல் நடத்த முடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

பாகிஸ்தானின் மக்களும், `இந்திய விமானங்களை ஏன் சுட்டு வீழ்த்த முடியவில்லை` என்ற கேள்வியை தங்கள் நாட்டு இராணுவத்தின் முன் வைக்கின்றனர்.

ஃபராஸ் ஜாவேத் என்பவர், தனது ட்விட்டர் பதிவில்," ஆக, அவர்கள் நமது வான்வழியில் நுழைந்துள்ளனர். ஆனால், நம் ராணுவமோ, விமானப்படையோ அவர்களை சுடவில்லை. இப்போது, ட்விட்டர் பதிவுகள் மூலமாக மட்டுமே சுடுகிறோம்" என்று கோபமாக கேள்வியை எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானின் வான்வெளி கண்காணிப்பு அமைப்பால், ஏன் இந்த நுழைவை கண்காணிக்க முடியவில்லை?

`தி இன்ஸ்டிடூட் ஆஃப் டிபன்ஸ் அண்ட் அனாலிஸ்` (The insitutue of defense studies and analysis) இயக்குநராக இருக்கும், லஷ்மண்குமார் பஹேரா, "இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் படையை விட வலிமையானது" என்கிறார்.

"பாகிஸ்தான் விமானப்படை, இத்தகைய தாக்குதல்களை தடுக்கும் வலிமையை கொண்டவை அல்ல. இந்திய விமானப்படை மிகவும் தயாரான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் இதை எதிர்பார்த்திருக்கவில்லை." என்று கூறுகிறார்.

"இந்திய விமானப்படை இந்த தாக்குதலை மிகவும் குறைவான நேரத்தில் நடத்தி முடித்துள்ளது. பாகிஸ்தானின் வான்வெளி கண்காணிப்பு அமைப்பும், ஜாமர்களும், திறம்பட செயல்படுபவை அல்ல. இவ்வளவு குறைந்த நேரத்தில், இத்தகைய தாக்குதலை கண்டறிந்து செயல்படுவதற்கான திறனை பாகிஸ்தானின் வான்வெளி கண்காணிப்பு அமைப்பு பெற்றிருக்கவில்லை."

பட மூலாதாரம், M.A.JARRAL

12 மிராஜ் விமானங்கள், பாகிஸ்தானின் வான்வெளியில் நுழைந்து, 19 நிமிடங்களில் தாக்குதலை முடித்து திரும்பியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

1971க்கு பிறகு, முதன்முறையாக, இந்திய விமானப்படை பாகிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்துள்ளது. 2000ஆம் ஆண்டின், ஏப்ரல் மாதத்தில், இந்தியா, ரஷ்யாவிடமிருந்து இரண்டு A-50 AWAC விமானங்களை வாங்கியது.

ராடார் மற்றும், மின்னணு கண்காணிப்பு ஆகிய விஷயங்களுக்கு இவை முக்கியமானவையாகும்.

பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல், அயாஸ் அகமது கான், பாகிஸ்தானிற்கு இவை பயங்கரமானவையாக இருக்கும் என்று அப்போதே கூறினார்.

இந்த விமானங்கள், பாகிஸ்தானின் வான்வெளியில், இந்தியா உளவு பார்க்க ஏதுவாக அமையும் என்று கவலை தெரிவித்தார்.

இந்த கண்காணிப்பு அமைப்பு, பாகிஸ்தானின் விமானப்படை தளங்களில் நடக்கும் விஷயங்களை இந்தியா தெரிந்துகொள்ள உதவியாக அமையும் என்று எச்சரித்தார்.

பட மூலாதாரம், Getty Images

அவர், "பாகிஸ்தானின் ஏவுகணைகள், ரடார் அமைப்பு இருக்குமிடம், விமானப்படை நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தியா தெரிந்துகொள்ள இந்த A-50 AWAC விமானம் வாய்ப்பு ஏற்படுத்தி தரும்" என்று கூறியிருந்தார்.

மேலும், defencedotpk, என்ற பாகிஸ்தானின் இணையதளம், தனது அறிக்கையில், பாகிஸ்தானின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் மேம்பட்டவையாக இல்லாமல், வழக்கற்று போனவையாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

"இந்தியா, வான்வெளி கண்காணிப்பில் அதிக முதலீடுகள் செய்துள்ளது. அதே சூழலில், அத்தகைய மேம்பட்ட அமைப்புகளைப்பெற பாகிஸ்தானும் முயன்றுள்ளது. இந்தியா மிகப்பெரிய நாடு. ஆனால், பகிஸ்தானின் கண்காணிப்பு அமைப்பில் இன்னும் பல குறைகள் உள்ளன. அவை காலத்திற்கு ஏற்றவாறு இல்லை."

உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட வான்வெளி கண்காணிப்பு அமைப்பை அமெரிக்கா கொண்டுள்ளது. பாகிஸ்தான், தனது பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களில், அதிகளவில் சீனாவை நம்பியுள்ளது. ஆனால், வான்வெளியைப் பொறுத்தவரையில், சீனாவிடமிருந்து அவர்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Reuters

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறைக்கான உதவிகளை செய்வதை அமெரிக்கா நிறுத்திவிட்டது. ஒபாமா அரசு, தமது கடைசி சில மாதங்களில், F16 ரக விமானங்களை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வதை நிறுத்தியது. இதனால், பாகிஸ்தான் மற்ற நாடுகளுடன் இணைந்து, பாதுகாப்பு அமைப்புகளை தயாரிக்க கவனம் செலுத்தியது.

இதனால், சீனாவுடன் இணைந்து JF-17 ரக விமானத்தை தயாரிக்க பாகிஸ்தான் தொடங்கியது.

அமெரிக்காவின் பாதுகாப்பு இணையதளமான Global fire power, பாகிஸ்தானிடம் 1,281 பாதுகாப்பு விமானங்கள் உள்ளன என்றும், இந்தியாவிடம் 2,185 விமானங்கள் உள்ளன என்றும் கூறுகிறது. ஆதலால், லஷ்மண் குமார், "அணு ஆயுத திறன் இருந்த போதிலும், பாதுகாப்பு திறனை பார்க்கும்போது, பாகிஸ்தான் வலிமை இழந்தே உள்ளது."என்று கூறுகிறார்.

இந்திய செய்தி நிறுவனமான பி.டி,ஐ, இந்திய எல்லைக்காவல் படை (BSF) விரைவிலேயே இந்த கண்காணிப்பு அமைப்பை பெற்று, பாகிஸ்தான் எல்லையை கண்காணிக்கும் என்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :