பாலகோட் இந்திய விமான தாக்குதல்: `எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும், காத்திருங்கள்' - எச்சரிக்கும் பாகிஸ்தான்

எங்கள் பதிலடிக்கு காத்திருங்கள், நாங்கள் ஆச்சர்யப்படுத்துவோம்: பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

"எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள்" என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.

இதனை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் மக்கள் தொடர்பு (ஐ.எஸ்.பி.ஆர்) இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபார் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அதில் பேசிய அவர், "நாங்கள் உங்களை (இந்தியா) திகைப்புக்கு உள்ளாக்குவோம். எங்கள் பதிலடிக்கு காத்திருங்கள். நாங்கள் ஆச்சரியப்படவில்லை. எங்கள் பதிலடி வேறு விதமாக இருக்கும். அதை நீங்களே பார்க்கப் போகிறீர்கள். ஆனால், எங்களுக்கு அமைதியின் மீது நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.

"ஆனால், பாகிஸ்தான் இந்தத் தாக்குதலால் திகைத்துப் போய்விடவில்லை. தயாராகவே இருந்தோம். அதற்கு சரியாக பதிலடியும் கொடுத்தோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஜப்பாவில் இந்தியா விமானப்படை தாக்கியதை ஒப்புக் கொண்ட அவர். அதே நேரம் இந்தியா கூறியது போல யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கூறி உள்ளார். நாங்கள் ஜனநாயகவாதிகள். நீங்கள் அவ்வாறானவர்கள் இல்லை என்று நிரூபித்துள்ளீர்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஊடுருவல் மூன்று இடங்களில் நடந்ததாகவும், ஆனால் அவை முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

தயாராக இருங்கள்

எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும்படி பிரதமர் (இம்ரான்கான்) தங்களை வலியுறுத்தியதாக அவர் கூறி உள்ளார்.

"இந்திய ராணுவம் 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி 350 பயங்கரவாதிகளை கொன்றதாக கூறுகிறது. ஆனால், யாரும் மரணிக்கவில்லை. இந்தியாவின் கூற்று முற்றிலும் தவறானது" என்று அவர் கூறினார்.

ராஜாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்த பதிலடி மும்முனைகளிலும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தி் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்தியா வெளியிட்டுள்ள புகைப்படம், மூன்று ஆண்டுகளாக யு-டியூப்பில் உள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இரவு நேரத்தில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பட்சத்தில், எப்படி அந்தப் படம் அவ்வளவு தெளிவாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நேரமும், இடமும் முடிவு செய்யப்படும்

முன்னதாக, இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்திய விமான படைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் எதிர்வினையாற்றிய பாகிஸ்தானிய விமானபடைக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் இம்ரான்கான்.

தாக்குதல்

எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், அக்னூர், நவ்ஷேரா, கிருஷ்ணா காட்டி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் செல்களை வீசுவதாகவும், இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் தூர்தர்ஷன் கூறுகிறது.

பட மூலாதாரம், DDNewsLive

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: