அபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்தார் - முழு விவரம்

இந்திய எல்லையில் அபிநந்தன்
Image caption இந்திய எல்லையில் அபிநந்தன்

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.

10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அபிநந்தன் நாடு திரும்பியதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அவரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

9:35 PM: அபிநந்தன் வருகையையடுத்து அமிர்தசரஸ் துணை போலீஸ் ஆணையர் ஷிவ் துளர் சிங் திலோன் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன் அபிநந்தன் என்ன கூறினார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், "அபிநந்தன் ஏதும் பேசவில்லை. புன்னகைத்தார். அவ்வளவுதான். நாடு திரும்பியதில் மகிழ்ச்சி என்றார். அவர் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது" என்றார்

"வாகா எல்லைக் கதவுகள் பொதுவாக மாலை 6 மணிக்கு மூடப்படும். ஆனால், இன்று அபிநந்தனின் வருகைக்காக இரவு வரை திறந்து வைக்கப்பட்டது. அவரை இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் அழைத்துச் சென்றுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்" என்றும் துளர் சிங் திலோன் கூறினார்.

விமானம் மூலம் அபிநந்தன் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் திலோன் குறிப்பிட்டார்.

அபிநந்தனை விடுவிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தியா கேட்கவில்லை என அமிர்தசரஸ் துணை போலீஸ் ஆணையர் ஷிவ் துளர் சிங் திலோன் செய்தியாளர்களிடம் கூறினார்.

அபிநந்தனை ஒப்படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏர் வைஸ் மார்ஷல் ஆர் ஜி கே கபூர், "பாகிஸ்தான் அவரை ஒப்படைத்ததில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.

9:28 PM: அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டவுடன் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அபிநந்தன் பேசும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பாகிஸ்தான் ராணுவம் தம்மை நன்றாகப் பார்த்துக்கொண்டதாகவும், தொழில்முறைத் தன்மையோடு அது அமைந்திருந்தாகவும், அதில் அமைதி தெரிந்ததாகவும் அபிநந்தன் கூறியிருந்தார். மேலும் அவர் இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்துவதாகவும், அதனால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ அவர் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ பல இடங்களில் வெட்டி ஒட்டப்பட்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

9:23 PM: வாகா எல்லையில் கதவுகள் திறக்கப்பட்டு, அபிநந்தன் இந்தியாவுக்குள் நுழைந்தார்.

9:16 PM: இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு வந்தடைந்தார் விங் கமாண்டர் அபிநந்தன்.

8:30 PM: அபிநந்தன் 6 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 8:30 மணி ஆகியும் அவர் ஒப்படைக்கப்படவில்லை. தாமதத்திற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் இல்லை.

7:20 PM:இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவுக்குள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள வாகா-அட்டாரி எல்லைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.

படத்தின் காப்புரிமை NARINDER NANU

6:55 PM:இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் இருநாடுகளுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக பிபிசி உருது சேவையின் செய்தியாளர் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.

6:20 PM: இந்திய எல்லைக்குள் தொடர்ந்து பாதுகாப்பு படைகளை சேர்ந்த வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அபிநந்தனின் வருகையை எதிர்நோக்கி பல்வேறு தரப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கனோர் காத்திருக்கின்றனர்.

5:50 PM: அட்டாரி - வாகா எல்லை வாயிலை மாலையில் மூடும்போது தினசரி இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தியத் தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்தும் இந்த தினசரி நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தரப்பு வழக்கம் போல் தங்களது நிகழ்ச்சியை நடத்தியதாக பிபிசி உருது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

5:20 PM: இந்திய எல்லையான அட்டாரியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்தவுடன், செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

5:00 PM: இந்திய எல்லையான அட்டாரியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்தவுடன் அவரது உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மருத்துவ வாகனங்கள் இந்தியாவின் எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

4:40 PM: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் வாகனங்கள் வாகா எல்லையை வந்தடைந்துள்ளன. இருப்பினும், அதில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளாரா என்று தெரியவில்லை.

4:20 PM: கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களிலுள்ள விமான நிலையங்களை தவிர்த்து மற்றனைத்து பாகிஸ்தானின் வான் மார்கங்களிலும் வரும் மார்ச் 4ஆம் தேதி வரை விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்து அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

4:15 PM: "இந்தியர்களை பெருமையடைய வைத்திருக்கும் துணிவுமிக்க இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனும், நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை எண்ணி பெருமையடைகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

4:00 PM:இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க இந்தியாவின் எல்லைப்பகுதியான அட்டாரியில் காத்திருக்கும் மக்கள்.

3.40 PM: இந்தியத் தரப்பில் வாகா-அட்டாரி எல்லையில் இருந்து அரை கி.மீ. முன்பாகவே நிறுத்தப்பட்டன ஊடகங்கள். தினமும் இந்த எல்லை வாயிலை மூடும் நிகழ்வையும் அணி வகுப்பையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இன்று அணி வகுப்பு ரத்து செய்யப்பட்டாலும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்க உள்ள நிலையில் அங்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர்.

Image caption கொண்டாட்ட மன நிலையோடு அபிநந்தனை வரவேற்க காத்திருக்கும் ஓர் இந்தியர்.

3.25 PM: அட்டாரி - வாகா எல்லை வாயிலை மாலையில் மூடும்போது தினசரி இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தியத் தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்தும் இந்த தினசரி நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் துணை கமிஷனர் ஷிவ் கில்லார் சிங் இதனைத் தெரிவித்தார்.

3.10 PM: அபிநந்தனை விடுவிக்கக் கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

2.15 PM - இது வாகா எல்லையில் பாகிஸ்தானின் பகுதி ஆனால் வாகா எல்லையையொட்டிய பாகிஸ்தான் பகுதியில் பெரியளவில் ஆள்நடமாட்டம் இல்லை. ஊடகத்தினர் மட்டுமே உள்ளனர்.

1:50 PM - அபிநந்தனை வரவேற்க எல்லையில் கூடியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. எத்தனை மணிக்கு அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்பதை பாகிஸ்தான் இன்னும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

1:20 PM - பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக தனது வான் எல்லையை பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது நாளாக மூடியுள்ளது.

பாகிஸ்தான் வழியாகச் செல்லும் விமானங்கள் சுற்றி, வேறு பாதையில் பயணமாகின்றன.

1:08 PM - வாகா - அட்டாரி எல்லைக்குச் செல்லும் ஊடகவியலாளர்கள் தங்களது கேமராக்களை வாகனங்களிலேயே வைத்துவிட்டுச் செல்லுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

1:00 PM - இஸ்லாமிய நாடுகள் உடனான இந்தியாவின் பொருளாதார உறவு வளர்ச்சி அடைந்துள்ளது என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் அமர்வில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியுள்ளார். சுஷ்மா கலந்துகொள்வதால் பாகிஸ்தான் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.

Image caption அபிநந்தனை வரவேற்க எல்லையில் கூடியிருக்கும் இந்தியர்கள்.அபிநந்தனை வரவேற்க எல்லையில் கூடியிருக்கும் இந்தியர்கள்.

12:44 PM: விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது என இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஷோயப் ரஜாக் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

12:30 PM - அபுதாபியில் இன்று தொடங்கவுள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தைத் தாம் புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷேக் மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறப்பு அழைப்பாளராக அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.

12:00 PM - அபிநந்தன் வாகா - அட்டாரி எல்லையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் அதிகாரிகள் பிபிசி இடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வாகா - அட்டாரி எல்லை பரப்பரப்பாகியுள்ளது.

இந்தியத் தரப்பிலுள்ள கிராமத்தின் பெயர் அட்டாரி - பாகிஸ்தான் தரப்பிலுள்ள கிராமத்தின் பெயர் வாகா.

அட்டாரி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலும், வாகா பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலும் உள்ளன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அபிநந்தன் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கே விளக்குகிறோம்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் புகுந்து இந்திய விமானம் செவ்வாய்க்கிழமை குண்டு வீசியதை அடுத்து, பதிலடியாக மறு நாளே இந்திய எல்லையில் புகுந்து பாகிஸ்தான் விமானம் தாக்குதல் நடத்தியது. அப்போது நடந்த மோதலில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், ஒரு விமானத்தை தாங்கள் இழந்ததாகவும், ஆனால், பாகிஸ்தான் விமானம் ஒன்றை தாங்கள் வீழ்த்தியதாகவும் இந்தியா கூறியது.

இந்தியாவின் விமானி ஒருவரை சிறைப்படுத்தியுள்ளோம் என்றும் அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியதாக செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார்.

இந்திய விமானியை சிறைப்பிடித்துள்ளதாக விவரிக்கும் ஒரு காணொளி காட்சியையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.

கண்கள் கட்டப்பட்ட நிலையில், முகத்தில் ரத்தத்தோடு அபிநந்தனைக் காட்டும் காணொளியை புதன்கிழமை பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டது.

மோசமான முறையில் அவரைக் காட்சிப்படுத்திக் காட்டியதாக இந்தியா குற்றம்சாட்டியது.

இந்தியாவிலுள்ள சமூக ஊடகப் பதிவர்கள் அபிநந்தனை நாயகனாக சித்தரித்தனர்.

#SayNoToWar என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பலரும் பதிவிட்டனர்.

படத்தின் காப்புரிமை twitter.com/OfficialDGISPR

இந்திய விமானிக்கு என்ன நடந்தது?

இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமேண்டர் அபிநந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவரை இந்த நடவடிக்கைக்கு பின்னர் காணவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த விமானி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், உள்ளூர்வாசிகளால் தாக்கப்படுவதாக தோன்றுகின்ற படங்கள் பகிரப்பட்டுள்ளதை இரு நாடுகளும் கண்டித்துள்ளன. அந்த தாக்குதலில் இருந்து விமானியை காப்பாற்றிய பாகிஸ்தான் சிப்பாய்கள் தலையிட்டது புகழப்பட்டுள்ளது.

கண்கள் கட்டப்பட்டநிலையில் தண்ணீர் கேட்கின்ற விமானியின் காணொளியை வெளியிட்ட பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம், பின்னர் அதனை நீக்கிவிட்டது.

பிந்தைய காணொளியில் குவளையில் இருந்து தேனீர் குடித்து கொண்டிருப்பது போலவும், கண்கள் கட்டப்படாமல், முகம் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் இந்த விங் கமேண்டர் காட்டப்படுகிறார்.

அவரது பெயர், ராணுவ பதவி, இந்தியாவின் தெற்கு பகுதியை சேர்ந்தவர் என பல தகவல்களை அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேசுவது போல ஒரு காணொளியும் வெளியாகி உள்ளது.

படத்தின் காப்புரிமை PAKISTAN INFORMATION MINISTRY

அதில் அந்த நபர், ஒரு கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் தன்னை மீட்டதாகக் கூறுகிறார்.

இந்த காட்சியின் உண்மைதன்மை குறித்து பிபிசி பரிசீலித்து உறுதி செய்யவில்லை.அந்த காணொளியில் என்ன உள்ளது என்பதை மட்டும் இங்கே வழங்குகிறோம்.

அந்த காட்சியில் சாதாரண உடையில் தேநீர் கோப்பையுடன் அபிநந்தன் உள்ளார்.தன்னை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாக கூறுகிறார். அவரிடம் அவரது இருப்பிடம் குறித்தும், ராணுவ இலக்கு குறித்தும் கேட்கிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் அவர், "என் இருப்பிடத்தைக் கூற எனக்கு அனுமதியில்லை. இந்தியாவின் தென் பகுதியை சேர்ந்தவன் தான் என்றும், இலக்கு குறித்து தாம் கூறமுடியாது" என்கிறார்.

ராணுவ அறநெறிகளுக்கு ஏற்றபடி இந்த விமானி நடத்தப்படுவதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசிஃப் கபூர் தெரிவித்திருக்கிறார்.

அபிநந்தன் யார்?

பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று இந்தியா முழுக்க சமூக ஊடங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

யார் இந்த அபிநந்தன்? விங் கமாண்டர் அபிநந்தன் குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர்தான், அபிநந்தன் குடும்பத்தின் பூர்வீக கிராமம். அபிநந்தனின் பெற்றோர் தற்போது சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள விமானப்படை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அபிநந்தனின் சகோதரி ஒருவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அபிநந்தனுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன.

விங் கமாண்டர் அபிநந்தன் கோவையிலுள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இந்திய விமானப்படையில் சுமார் 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அபிநந்தன், 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தற்போது, விங் கமாண்டர் பதவியை வகிக்கிறார். இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு இணையானது விங் கமாண்டர் பதவி. இவர் இயக்கியதாக சொல்லப்படும் மிக்21 பைசன் ரக விமானம் இந்திய விமானப்படையின் 3ஆம் அணியை சேர்ந்தது. இந்தப் பிரிவை கோப்ரா பிரிவு என்றும் அழைக்கிறார்கள்.

மனைவியும் முன்னாள் விமான படை வீரர்

அபிநந்தனின் மனைவி தான்வி மர்வாவும் இந்திய விமானப்படையில் பணியாற்றிவர்தான். 2005 ஆம் ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்ந்தார். ஸ்குவாட்ரன் லீடராக இருந்து விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: