நரேந்திர மோதி - 'ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம்'

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "ரஃபேல் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் - மோதி

இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "ஒட்டுமொத்த நாடே ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப்படையிடம் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என அறிந்துகொள்வதற்கு ஆவலாக இருக்கிறது.

இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் அதிக சாதனைகளை செய்திருக்க முடியும். முந்தைய அரசின் சுயநலத்தால் நாடு பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது அரசியல் ரஃபேல் போர் விமானம் பக்கம் திரும்பியிருக்கிறது.

மோதியை எதிர்க்கிறீர்களா? செய்யுங்கள், ஆனால் தேசநலன்களை எதிர்க்காதீர்கள். அவர்களது மோதிக்கு எதிரான தொல்லைகள் மசூத் அஸ்கர், ஹபீஸ் சயீத் போன்ற தீவிரவாதிகளுக்கு உதவாத வகையில் கவனமாக நடந்துகொள்ளுங்கள்," என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ்: "குழந்தைக்கு அபிநந்தனின் பெயரைச் சூட்டிய தம்பதி"

விமானி அபிநந்தனின் விடுதலையான நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பிறந்த ஆண் குழந்தைக்கு அபிநந்தனின் பெயரை ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் வைத்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் பஞ்சாப் மாநிலம், வாகா - அட்டாரி எல்லை வழியாக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு நாடு திரும்பினார். பாகிஸ்தானில் இருக்கும்போது அவரின் காணொளி வெளியானது. அதில் துணிச்சலுடன் அவர் பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளானது.

இந்நிலையில், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள கிஷான்கர் பகுதியில் நேற்று மாலை பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாய் சப்னா தேவி பேசும்போது, ''அபிநந்தன் என்று என்னுடைய மகனை அழைக்கும்போதெல்லாம், விமானி அபிநந்தனின் வீரச் செயல்களைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருப்போம். என் மகன் வளர்ந்து பெரியவனாகும்போது, அவரைப் போன்ற துணிச்சல் மிக்க வீரனாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,'' என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமணி: "அனைவருக்கும் குறைந்தபட்ச வருவாய்"

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், அனைத்து தரப்பினருக்கும் குறைந்தபட்ச வருவாய் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்துத் தரப்பினருக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைப்பதை உறுதி செய்வோம். ஏழைகளுக்கான பணம், அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நான் அரசியலில் இணைந்தது முதல் பொய் பேசியதில்லை.

நமது விமானப் படை தேசத்தை பாதுகாக்கிறது. அதன் விமானிகள், நாட்டுக்காக தியாகம் செய்கின்றனர். ஆனால், பிரதமர் மோதியோ ரஃபேல் விவகாரத்தில் விமானப் படையிடமிருந்து ரூ.30,000 கோடியை கொள்ளையடித்து, அதை அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளார்.

இது வெட்கப்படத்தக்க செயலாகும். அவர் தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளாரே தவிர, விவசாயிகள், மாணவர்கள், சிறு வர்த்தகர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவில்லை" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்): "100வது பட்டத்தை பெற்றார் ரோஜர் பெடரர்"

படத்தின் காப்புரிமை Francois Nel
Image caption ரோஜர் பெடரர்

உலகின் பிரபல டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது 100வது பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.

"துபாய் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில், கிரீஸின் ஸ்டீபானோசியை 69 நிமிடங்கள் போராடி 6-4, 6-4 என்ற கணக்கில் 37 வயதாகும் ரோஜர் பெடரர் வென்றதன் மூலம் தனது 100வது வெற்றியை பதிவு செய்தார்.

இதன் மூலம், அமெரிக்காவின் ஜிம்மி கான்னர்ஸுக்கு அடுத்து, 100 பட்டன்களை வென்ற உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரோஜர் பெடரர் படைத்தார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :