தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி: இந்திரா காந்தி போட்டியிட விரும்பினாரா?
- மு.நியாஸ் அகமது
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images
" சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுண்டாக்க காவிரி புரக்கும் நாடு கிழவானே" - பொருநராற்றுபடை
ஒரு ஏக்கர் நிலத்தில் 4.2 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் விளையும் பகுதியின் அரசனே என்று கரிகாற் பெருவளத்தானை பாடும் முடந்தாமக்கண்ணியாரின் பொருநராற்றுபடை பாடல் இது.
காவிரி ஆற்று கரையின் பகுதியைதான் இந்த பாடல் சுட்டுகிறது. அதாவது சோழர் காலத்தில் ஒரு ஏக்கரில் டன் கணக்கில் நெல் விளைவித்த விவசாயிகள்தான், விவசாயம் பொய்த்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எலிக்கறியும் உண்டு இருக்கிறார்கள், தற்கொலையும் செய்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், M Niyas Ahmed
'நெற்களஞ்சியமாம் தஞ்சை' என்று சமூக அறிவியல் புத்தகம் டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் குறித்து விவரிக்கிறது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி 1952 முதல் 2014 வரை இடைத்தேர்தல் உட்பட 18 தேர்தல்களை சந்தித்திருக்கிறது.
இந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர் வெங்கட்ராமன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவே இருந்திருக்கிறார்.
அந்த தஞ்சாவூரின் நாடாளுமன்ற தேர்தல்கள் கடந்து வந்த பாதை குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.
2019- மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக எஸ். எஸ். பழநிமாணிக்கம், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என்.ஆர்.நடராஜன், அமமுக சார்பாக முருகேசன், மக்கள் நீதி மையம் சார்பாக சம்பத் ராமதாஸ், நாம் தமிழர் சார்பாக கிருட்டிணகுமார் ஆகியோர் போட்டியிகிறார்கள்.
தற்போது தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி,பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

பட மூலாதாரம், DE AGOSTINI PICTURE LIBRARY / Getty Images
தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்த போது 1952 ஆம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர் வெங்கட்ராமன் வென்றார் . கடைசியாக நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பரசுராமன் வெற்றி பெற்றார்.
கடந்து வந்த பாதை
விவசாய போராட்டங்கள்
சுதந்திர போராட்ட காலத்திலும், அதற்கு பின்பும் தஞ்சாவூர் பகுதியில் பெரும் நிலக்கிழார்களை எதிர்த்து உறுதியான போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இடதுசாரிகளின் துணையுடன் நடந்த இந்த போராட்டங்களில் எளிய விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வென்று எடுத்திருக்கிறார்கள்.
இந்திரா போட்டியிட விரும்பினாரா?

பட மூலாதாரம், Getty Images
திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக அதிமுக உருவாகியது 1977 தேர்தலில் எதிரொலித்தது. 1971 தேர்தலில் திமுக சார்பில் சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.டி.சோமசுந்தரம் அதிமுகவில் இணைந்தார். 1977 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். அதிமுக ஆட்சி அமைத்ததும் மாநில அமைச்சராக பதவியேற்றார். இதனால் அங்கு 1979 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது.
1979ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் இந்திரா காந்தி தஞ்சாவூரில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸின் தமிழகப் பிரிவு விரும்பியாதகாவும், இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வருமென எம்.ஜி.ஆர் கருதியதாகவும் தி இந்து செய்தி ஒன்று கூறுகிறது.
தோல்வியும், குடியரசுத் தலைவர் பதவியும்
முதல் நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் வென்ற ஆர். வெங்கட்ராமன் 1967ஆம் ஆண்டு திமுக வேட்பாளர் டி.எஸ் கோபாலரிடம் 22574 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
பின் இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடைத்தேர்தல்கள்
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி இரண்டு முறை இடைத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது.
1957ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் பொறுப்பை ஏற்பதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் ஆர். வெங்கட்ராமன். இதனால் ஒரு முறை இடைத்தேர்தல் வந்தது.
இதே காரணத்திற்காக எஸ்.டி.சோமசுந்தரம் தன் பதவியை ராஜிநாமா செய்தார் இதனால் 1979ஆம் ஆண்டு ஒரு முறை இடைத்தேர்தல் வந்தது.
தொகுதியின் கோரிக்கை
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் விவசாயம், மீன்பிடி தவிர்த்து பெரிய தொழில்கள் என ஏதும் இல்லை. இந்த பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகிறார்கள்.

பட மூலாதாரம், M Niyas Ahmed
இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது இந்த பகுதி விவசாய அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.

பட மூலாதாரம், Somasekar Natarajan /Getty Images
அதுபோல இந்தப் பகுதியில் கோயில்கள் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளன. சுற்றுலாதுறையை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்பதும் இம்மக்களின் கோரிக்கைகள்.
பிற செய்திகள்:
- கந்தஹாருக்கு மசூத் அசாருடன் சென்றாரா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்?
- பொள்ளாச்சி விவகாரம்: ஆபாச காணொளிகளை நீக்குவது எப்படி? - பத்மாவதி விளக்கம்
- எத்தியோப்பிய விமான விபத்தில் புதிய ஆதாரம் : மேக்ஸ் ரக விமானத்துக்கு டிரம்ப் தடை.
- "நாட்டை நாக்பூரிலிருந்து கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்": ராகுல் காந்தி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்