நாகப்பட்டினம் மக்களவை தொகுதி கம்யூனிஸ்ட் கோட்டையா? – கடந்தகால நிலவரம்
- மு. நியாஸ் அகமது
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images
நாகப்பட்டினம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராஜ் 2.1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை சேர்ந்த சரவணன் என்பவரை வென்றுள்ளார் . அமமுகவை சேர்ந்த செங்கொடி இதில் 7.02% சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாலதி 5.13% வாக்குகளை பெற்றுள்ளார்.
இடதுசாரிகள் வலுவாக இருக்கும் தொகுதி என அறியப்பட்ட நாகப்பட்டினம், நாடாளுமன்ற தொகுதியாக 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மீனவர்களும், ஏராளமான விவசாய கூலிகளும் நிறைந்திருக்கும் தொகுதி இது. சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட தொகுதி இது.
2019- மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக தாழை ம.சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக எம்.செல்வராசு, அமமுக சார்பாக செங்கொடி, மக்கள் நீதி மையம் சார்பாக கே. குருவையா மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலதி ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த காலங்களில் காத்திரமான பல விவசாய போராட்டங்களை இந்தத் தொகுதி சந்தித்திருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
கீழ்வெண்மணி காயங்கள்
தமிழக வரலாற்று பக்கங்களில் கருப்பு பிரதியாக இருக்கிறது கீழ்வெண்மணி சம்பவம். 1968ம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி கீழ்வெண்மணியில் கூலி உயா்வுக்காக போராடிய தலித் விவசாய தொழிலாளிகள் 44 போ் எரித்துக் கொல்லப்பட்டனா். அந்த கீழ்வெண்மணி நாகப்பட்டினம் தொகுதியில்தான் இருக்கிறது.
எப்படி இடதுசாரிகள் வசமானது?
இந்த தொகுதி கடந்த காலங்களில் இடதுசாரிகளின் கோட்டையாக இருக்க காரணம் பி. ஸ்ரீனிவாசராவ். கர்நாடக மாநிலம் தென்கனராவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்த தோழர் ஸ்ரீனிவாச ராவ் கம்யூனிச சிந்தாதத்தால் ஈர்க்கப்பட்டு ஒருங்கிணைத்த தஞ்சை பகுதியில் விவசாய நலன்களுக்காக, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக, நிலபிரபுத்துவத்திற்கு எதிராக போராடினார்.
இப்படியாக இயல்பாக அந்த பகுதி இடதுசாரிகளின் வசமாக ஆனது. ஆனால், இதுவெல்லாம் கடந்த காலம் என்றாகி போய்விட்டது. 2014ஆம் தேர்தலில் தனித்து நின்ற அதிமுக 434174 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகளோ 90,313.
இரட்டை உறுப்பினர்கள் முறை
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 489. இதில் தலித்துகள், பழங்குடிகளுக்கான ஒதுக்கீடு 94.
பட மூலாதாரம், DE AGOSTINI PICTURE LIBRARY/ Getty Images
முன்பொரு காலத்தில் நாகப்பட்டினம்
இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித்/பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் - அதாவது ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித்/பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறையும் - இருந்தன. இப்படியான ஒரு தொகுதிதான் 1957ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நாகப்பட்டினம். இவர்களுக்கான ஓட்டுகளை தலித்துகள்/பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள்.
1961ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தனித் தொகுதிகள் இன்றைக்கு உள்ளதுபோல மாறின.
இடைத்தேர்தல்
1977ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்ற எஸ்.ஜி முருகன் 1979ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதனை அடுத்து அதே ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது.
1979ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக ஆதரித்தது.
பட மூலாதாரம், Getty Images
கடந்து வந்த பாதை
1957ஆம் ஆண்டு இந்த தொகுதியில் இரட்டை உறுப்பினர் முறை இருந்ததால் இரண்டு உறுப்பினர்கள் நாகப்பட்டினத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போதும் தனி தொகுதியாக இருக்கிறது நாகப்பட்டினம்.
தொகுதியின் கோரிக்கை
பட மூலாதாரம், Getty Images
ஓ.என்.ஜி.சி க்கு நிலத்தடி நீரை மாசுப்படுத்துகிறது என நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் போராடி வருகின்றனர். இலங்கை கடற்படையால் இந்தப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்திர தீர்வு காணப்பட வேண்டுமென மீனவர்கள் போராடி வருகிறார்கள். நாகப்பட்டினமும் டெல்டா பகுதியாக இருந்தாலும், கடைமடையான இந்தப் பகுகுதிக்கு காவி நீர் எப்போதும் வருவதேயில்லையென விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். நீர் பாதையை செப்பனிட வேண்டுமென்பது அம்மக்கள் கோரிக்கை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்