தேமுதிக-வுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு காரணம் என்ன?

தேமுதிக-வுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சரியானதுதானா? படத்தின் காப்புரிமை Twitter

விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் கூட்டணியை இறுதிசெய்யும் நிலையில் இருக்கிறது ஆளும் கட்சியான அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவும் இக்கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தமிழக அரசியலில் தே.மு.தி.க. மிக முக்கியமான கட்சியா?

2005ஆம் ஆண்டு மதுரையில் மிகப் பெரிய மாநாட்டை நடத்திய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவக்கிய விஜயகாந்த், ஒரு விஷயத்தைத் தெளிவாக அறிவித்தார். அதாவது தங்களுடைய கட்சி, அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் மாற்றாக இருக்கும்; எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தனித்தே போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.

தே.மு.தி.கவின் பலம் எத்தகையது, அவர் யாருடைய வாக்குகளைப் பிரிப்பார் என்றெல்லாம் தெரியாத நேரத்தில், சில தொகுதிகளை மட்டுமே குறிவைத்து அக்கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் போட்டியிட்டது தே.மு.தி.க. கட்சி துவங்கி ஒரு ஆண்டுகூட நிறைவடையாத நிலையில், விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர, அறியப்படாத தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில் கிட்டத்தட்ட அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட்ட தே.மு.தி.க. பிரதான கட்சிகளையே பெரும் ஆச்சரித்திற்குள்ளாக்கியது.

படத்தின் காப்புரிமை Twitter

பலரது அறிவுரையையும் மீறி, பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு நிரம்பிய விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார் கட்சித் தலைவர் விஜயகாந்த். போட்டியிட்ட 232 பேரில் அவர் மட்டுமே வெற்றிபெற்று ஆச்சரியப்படுத்தினார். இருந்தபோதும் அவரது கட்சி, ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஓட்டுகளைப் பெற்றிருந்தது. இது பதிவான வாக்குகளில் 8.4 சதவீத வாக்குகளாகும். முந்தைய ஆண்டுதான் துவக்கப்பட்ட கட்சி என்று பார்க்கும்போது இது அந்தத் தருணத்தில் மிகப் பெரிய சாதனையாவே இருந்தது.

இதற்கடுத்துவந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட முடிவுசெய்த தே.மு.தி.க. நாற்பது தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ், மஃபா பாண்டியராஜன் ஆகியோர் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் தெரிந்த முகங்களாக இருந்தனர்.

இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. பதிவான வாக்குகளில் இது 10.3 சதவீத வாக்குகளாகும்.

பெரிய வெற்றி ஏதும் இல்லாவிட்டாலும் தே.மு.தி.கவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்துவந்தது, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கியபோது, தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தார் ஜெயலலிதா. அதுவரை கடவுளோடும் மக்களோடும்தான் கூட்டணி என்று கூறிவந்த விஜயகாந்த் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க ஒப்புக்கொண்டார்.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.கவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. விஜயகாந்த் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தது நல்ல முடிவு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின. தே.மு.தி.க. 29 இடங்களையும் 7.9 சதவீத இடங்களையும் கைப்பற்றியது.

படத்தின் காப்புரிமை Twitter

இதனால், கட்சியைத் துவங்கி சிறிது காலத்திலேயே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார் விஜயகாந்த். ஆனால், சட்டமன்றத்தில் அவரது கட்சியினரின் செயல்பாடுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்தன.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இது தெளிவாக எதிரொலித்தது. அந்தத் தேர்தலின்போது பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.கவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த அக்கட்சி, 14 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோற்றது. வாக்குகளிலும் பெரும் சரிவைச் சந்தித்து. பதிவான வாக்குகளில் 5.1 சதவீத வாக்குகளை, அதாவது 20 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகளை மட்டுமே அக்கட்சியால் பெற முடிந்தது.

இதற்குப் பிறகு சரிவு தொடர ஆரம்பித்தது. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து 104 இடங்களில் போட்டியிட்டது தே.மு.தி.க. ஆனால், போட்டியிட்ட ஒரு இடத்திலும் அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 2.41 சதவீதமாகக் குறைந்திருந்தது. அதாவது அக்கட்சி வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. கட்சி துவங்கிய இரண்டாவது ஆண்டிலேயே தனித்துப் போட்டியிட்டு 27 லட்சம் வாக்குகளைப் பெற்ற அக்கட்சிக்கு இது மிகப் பெரிய சரிவு.

இது ஒரு புறமிருக்க கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு, அக்கட்சியை பெரிதும் பாதிக்க ஆரம்பித்தது. பலரும் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இணைய ஆரம்பித்தனர். கட்சியினர் விலகுவதும், தேர்தல் தோல்வியும் சேர்ந்து அக்கட்சியை ஒரு பலவீனமான கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையிலும்கூட, விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். தேர்தல் கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் துவங்கிய நிலையில்தான் அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். கோடைகாலத்தில் நடக்கவிருக்கும் இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவரால் முழுமையாக ஈடுபட முடியுமா என்பதிலும் சந்தேகங்கள் இருக்கின்றன.

இருந்தபோதும், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு பிரதான கட்சிகளுமே தே.மு.தி.க தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டுமென நினைத்தன. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ஜ.கவும் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால், மத்திய ஆளும் கட்சி - மாநில ஆளும் கட்சி என இருவிதங்களிலும் ஆளும்கட்சிக்கு எதிரான மன நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் மறைந்துவிட்ட நிலையில், வலுவான கூட்டணியின் மூலம் மட்டுமே இதைச் சாதிக்க முடியுமென நினைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி. இதன் காரணமாகவே பாட்டாளி மக்கள் கட்சியை 7 மக்களவை இடங்களையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் அளித்து கூட்டணிக்கு இழுத்தது. பா.ஜ.கவுடனும் கூட்டணி இறுதிசெய்யப்பட்டது. இதனால், கருத்து ரீதியாக தன்னம்பிக்கைமிக்க ஒரு கூட்டணியாக அ.தி.மு.க. காட்சியளிக்கத் துவங்கியது. தே.மு.தி.கவுடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தியது.

Image caption விஜயகாந்த்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதிசெய்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், உடனடியாகச் சென்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார். உடல்நலம் விசாரிப்பதற்காகவே அவர் சென்றதாகக் கூறப்பட்டாலும் இதற்குப் பிறகு தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன.

ஆனால், 5 மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடங்கள் தவிர தே.மு.தி.க முன்வைத்த வேறு சில கோரிக்கைகளால், தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரவில்லை. இதற்குப் பிறகு, அ.தி.மு.க. தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை நடத்திவருகிறது.

எந்த ஒரு இஸ்லாமியக் கட்சியும் கூட்டணியில் இல்லாத நிலையில், அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய தலைவராக விஜயகாந்தை நினைக்கிறது அ.தி.மு.க. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் தே.மு.தி.கவும் இருந்தால் வட மாவட்டங்களில் டிடிவி தினகரனால் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய முடியுமென அக்கட்சி கருதுகிறது.

ஆனால், 2011ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு எந்தத் தேர்தலிலும் வெல்லாத, தலைவர் உடல்நலம் குன்றியுள்ள, வாக்கு வங்கியை வெகுவாக இழந்துள்ள தே.மு.தி.க. இந்த எதிர்பார்ப்புகளை எந்த அளவுக்கு பூர்த்திசெய்யுமென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :