மக்களவை தேர்தல் 2019: பண மதிப்பிழப்பு நோக்கத்தை நிறைவேற்றியதா?#BBCRealitycheck

பழைய இந்திய நாணயங்கள் படத்தின் காப்புரிமை AFP

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 2016-ஆம் ஆண்டில் இந்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு அறிவிப்பு தைரியமானது என்றும், சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம் மற்றும் ஆதாரம் வெளியிடாமல் ஈட்டப்பட்ட வருவாய் ஆகியவற்றை வெளிக்கொணரவும் இது உதவியது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

(பண மதிப்பிழப்பு அறிவிப்பு தொடர்பாக எங்களின் பழைய கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம்)

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, புழக்கத்தில் இருந்ததாக மதிப்பிடப்படும் சுமார் 85 சதவீத பணநோட்டுக்கள் செல்லாது என்று இந்திய அரசு அறிவித்தது.

500 (7 டாலர் மதிப்புடையது) மற்றும் 1000 (14 டாலர் மதிப்புடையது) ரூபாய் பணநோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்படாத செல்வம் மற்றும் கறுப்புப்பணத்தை வெளியே கொண்டு வருவதற்கான வழி இதுவென இந்திய அரசு இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியது.

பணநோட்டை சாராத இந்திய பொருளாதாரத்தை நோக்கி செல்ல இந்த நடவடிக்கை உதவும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இந்த கொள்கை முடிவால் ஏற்பட்டுள்ள முடிவுகள் கலவையானதாக உள்ளன.

இந்தியாவில் வரி வசூலிக்கும் விகிதத்தை மேம்படுத்த சத்தியக்கூறு ஏற்பட்டுள்ள நிலையில், சட்டப்பூர்வமற்ற சொத்துக்களை வேரறுக்க இந்த பண மதிப்பிழப்பு உதவியது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதும் உண்மையாக உள்ள நிலையில், பண பரிவர்த்தனைகளும் அதிகமாகவே உள்ளன.

அதிர்ச்சியும், குழப்பமும்

படத்தின் காப்புரிமை Reuters

அதிர்ச்சியான நடவடிக்கையாக இந்தியாவில் குறிப்பிடப்படும் பண மதிப்பிழப்பு, அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெரும் குழப்பங்களை விளைவித்தது.

வங்கியிடம் இருந்து மக்கள் எடுத்திருந்த பணநோட்டுக்களை வங்கியில் கொடுத்து சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட பணத்தை பெற்றால்தான் பரிமாற்றி கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.

அதுவும் ஒருவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நான்காயிரம் ரூபாய் (சுமார் 56 டாலர்) என்றும் கட்டுப்பாடு இருந்தது.

இந்த கொள்கை இந்திய பொருளாதரத்தை கடுமையாக சீர்குலைத்தது. பணநோட்டு பரிமாற்றத்தையே அதிகமாக நம்பியிருந்த ஏழை மக்களையும், கிராம சமூகங்களையும் இது மிகவும் மோசமாக பாதித்தது.

ஊழல் மற்றும் பிற சட்டப்பூர்வமற்ற செயல்பாடுகளை தூண்டிவிடுகின்ற, வரி வசூலில் காட்டப்படாத, முறையான பொருளாதாரத்திற்கு வெளியே பதுக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமற்ற சொத்துக்களை இலக்கு வைத்து இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இந்திய அரசு கூறியது.

அதிக பணநோட்டை கொண்டிருப்பவர்கள், சட்டப்பூர்வமாக பரிமாற்றம் செய்வது கடினம் என்று அனுமானிக்கப்பட்டது.

ஆனால், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக புழக்கத்தில் இருந்து வந்த 99 சதவீதத்திற்கு அதிகமான பழைய பணநோட்டுகள் அனைத்தும் வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டு கணக்கில் வந்துள்ளன என்று 2018ம் ஆண்டு இந்தியாவின் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வெளியான அறிக்கை தெரிவித்தது.

இந்த அறிக்கை அதிர்ச்சியை அளித்ததோடு, இந்த நடவடிக்கை பற்றிய மேலதிக விமர்சனங்களை ஏற்படுத்தியது.

படத்தின் காப்புரிமை AFP

கணக்கில் வராமல் பணமாக வைக்கப்பட்டிருக்கும் செல்வம் முதன்மையானதாக இருக்கவில்லை அல்லது அவ்வாறு இருந்தாலும், அதன் உரிமையாளர்கள் அவற்றை சட்டப்பூர்வ நாணயமாக மாற்றிக்கொள்கின்ற வழிகளை கண்டுபிடித்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.

அதிக வரி வசூலிக்கப்படுகிறதா?

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதால், அதிக வரி ஏய்ப்போர் வெளியே தெரியவந்து, வரி வசூலிப்பில் அதிக வருவாய் கிடைத்துள்ளது என்று கடந்த ஆண்டு வெளியான அரசின் அதிகாரபூர்வ அறிக்கை தெரிவித்தது.

இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வரி வசூலிப்பு விகித வளர்ச்சி ஓரிலக்கத்தில் இருந்து வந்தது உண்மைதான்.

2016-17 நிதியாண்டில், இதற்கு முந்தைய ஆண்டை விட நேரடியாக வரி செலுத்துவோர் அதிகரிப்பு 14.5 சதவீதமாக இருந்தது.

அடுத்த ஆண்டு 18 சதவீதம் என்று இது இன்னும் அதிகரித்தது.

நேரடியாக வரி செலுத்துவோர் அதிகரிப்பு பண மதிப்பிழப்பால் ஏற்பட்டதாகும் என்று இந்தியாவின் வருமான வரித்துறை தெரிவித்தது, கணிசமான சொத்துக்களை வைத்திருப்போரை அதிகாரிகள் இனம்கண்டு, வரி செலுத்த செய்வது சாத்தியமாகியது.

ஆனால், நேரடியாக வசூலிக்கப்பட்ட இந்த வரி விகிதத்தின் அதிகரிப்பு, காங்கிரஸ் கட்சி ஆட்சிபுரிந்த 2008-09 மற்றும் 2010-11 நிதியாண்டுகளில் இருந்த அளவுக்கு ஒத்ததாகவே இருந்தது.

2016ம் ஆண்டு வரி வருமான மன்னிப்பு, 2017ம் ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி ஆகிய அரசின் பிற கொள்கைகள் சில பண மதிப்பிழப்பால் கிடைத்த வரி வசூலிப்புக்கு பங்காற்றியிருக்கலாம்.

கள்ளப்பணத்தை ஒழித்தல்

படத்தின் காப்புரிமை Getty Images

கள்ளப்பணபுழக்கத்தை ஒழிக்கின்ற நோக்கத்தை இந்த கொள்கை சாதித்ததா?

இல்லை என்பதுதான் இந்திய ரிசர்வ் வங்கியின்படியான உண்மையாகும்.

பண மதிப்பிழப்பிற்கு பிறகு கள்ள 500 மற்றும் 1000 ரூபாய் பணநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது, அதற்கு முந்தைய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதைவிட அதிகமாகும்.

புதிய நோட்டுகள் போலி பணத்தை அச்சடிக்க கடினமான வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளன. ஆனால், அவற்றுக்கும் போலியான பண நோட்டுக்கள் அப்போதிலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவிலுள்ள பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பண நோட்டுப் புழக்கமற்ற சமூகத்தை நோக்கி?

அதிக மதிப்புடைய நாணயங்கள் செல்லாது என்று அறிவித்தது, இந்தியாவை மேலதிக டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இட்டுசெல்கிறதா என்றால், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து கிடைக்கின்ற தகவல்கள் நிச்சயமற்றதாக இருக்கிறது.

பணநோட்டு பரிவர்த்தனை இல்லாமல் பணம் செலுத்துகிற நீண்டகால பாணியில் படிப்படியான வளர்ச்சிக்கு மாறாக, பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, 2016ம் ஆண்டு இறுதியில் கணிசமானதொரு பாய்ச்சல் வளர்ச்சி இதில் இருந்துள்ளது.

ஆனால், பணநோட்டு பரிமாற்றம் சரியானவுடன், இது அதிகரிப்பு பாணி மாறிவிட்டது.

இதில் நாட்கள் செல்ல செல்ல அதிகரிப்பு காணப்படுவது அரசு கொள்கையின பாதிப்பு மிக குறைவாகவே இருக்கும். மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் பணமாக இல்லாமல் தொகைகளை செலுத்துகின்ற எளிதான நடைமுறைகள் இதற்கு அதிகமான பங்களிக்கும்.

இந்தியாவில் ரொக்கமாகப் புழங்கப்டும் பணம் மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையேயான விகிதத்தைக் கணக்கிட்டு இந்திய பொருளாதாரத்தில் ரொக்க பணப்புழக்கம் வீழ்ச்சி அடைந்ததா என்பதை அறியலாம்.

அதாவது இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் மற்றும் ரூபாய் தாள்களின் ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு உற்பத்தியாகும் சரக்கு மற்றும் சேவை ஆகியவற்றின் மதிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான விகிதம்தான் அது.

2016ம் ஆண்டு பணி மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன் இந்த விகிதத்தின் மதிப்பில் பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு பணப்புழக்கம் 2016ம் ஆண்டுக்கு முந்தைய நிலைகளை அடைந்துவிட்டது.

ரொக்கமாகப் புழங்கப்படும் பணத்தின் அளவு குறையவில்லை என்பது மட்டுமல்லாது, வளரும் பொருளாதாரங்களில் இந்தியா இன்னமும் ரொக்கப் பணப்புழக்கம் உச்சத்தில் இருக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது.

இந்தியாவில் ஏடிஎம்-கள் மூடப்படுவது ஏன்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஏடிஎம்-கள் மூடப்படுவது ஏன்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :