மக்களவைத் தேர்தல் 2019: கூட்டணியை இறுதி செய்தது திமுக; அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பது ஏன்?

மு.க.ஸ்டாலின்

சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. கூட்டணியில் 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும் (தமிழகத்தில் 9 + புதுச்சேரியில் 1), விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும் இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும் பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 தொகுதியும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 1 தொகுதியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

வைகோ தலைமையிலான ம.தி.மு.கவுக்கு மக்களவையில் ஒரு தொகுதியும் மாநிலங்களவையில் ஒரு இடமும் அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா இரண்டு இடங்களும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு இடமும் வழங்குவதென ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 3 இடங்களையும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்றிரண்டு இடங்களையும் எதிர்பார்த்தாக தகவல்கள் தெரிவித்தன.

அதேபோல, ம.தி.மு.க. தலைவர் வைகோ திங்கட்கிழமையன்று பிற்பகலில் திடீரென அறிவாலயத்திற்கு வருகைதந்தார். கூட்டணி குறித்து தங்களுடைய உயர்மட்டக் குழுகூடி முடிவெடுக்குமென்று கூறிவிட்டுச் சென்றார்.

செவ்வாய்க்கிழமை காலையில் ம.தி.மு.கவின் தலைமையகமான தாயகத்தில் அக்கட்சியின் உயர்மட்டக் குழுவுடனான விவாதத்திற்குப் பிறகு தி.மு.க. தலைமையகம் வந்த வைகோ, அங்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

படத்தின் காப்புரிமை DMK

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுவோம்; அர்ப்பணிப்பு உணர்வுடன் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

அதற்கு சற்று முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும் பிற கட்சிகளுக்குப் பத்து தொகுதிகளுமாக கூட்டணிக் கட்சிகளுக்கு இருபது இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுமென்றும் அறிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்று கேட்டபோது, தங்களுடைய விருப்பத்தை அக்கட்சிகளிடம் தெரிவித்திருப்பதாகவும் அது குறித்து அக்கட்சிகள்தான் முடிவெடுக்க வேண்டுமென்றும் கூறினார்.

மார்ச் 7ஆம் தேதிக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து இதற்கென அமைக்கப்பட்ட பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினருடன் சம்பந்தப்பட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை முடிவுசெய்வார்கள் எனவும் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் ராகுல்காந்தி கலந்துகொள்ளும் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

ஜவாஹிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட மாட்டாது என்பதை அவர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

படத்தின் காப்புரிமை Twitter

தமிழ்நாட்டில் நாளை பிரதமர் மோதி பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை இறுதிசெய்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுடன் கூட்டணியை இறுதிசெய்திருக்கிறது.

விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

செவ்வாய்க் கிழமையன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் உயர்மட்டக் குழுவினர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குறைந்தது ஏழு இடங்களையாவது அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி எதிர்பார்க்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை 4-5 இடங்களை மட்டுமே தரத் தயாராக உள்ளது.

தே.மு.தி.க. தவிர ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :