நரேந்திர மோதியின் பாஜக ஆட்சியில் மூன்று மடங்கு அதிகமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதா? #BBCRealityCheck

மோதி

கூறப்படுவது - முந்தைய ஆட்சியை ஒப்பிடும்போது இந்தியாவில் மூன்று மடங்கு சாலைகள் போடப்பட்டுள்ளதாக தற்போதைய அரசு கூறுகிறது.

உண்மை என்ன?

நரேந்திர மோதி ஆட்சியில் குறிப்பிடத்தக்க அளவில் சாலைகள் போடப்பட்டுள்ளன. சாலை கட்டுமானம் முந்தைய ஆட்சியைவிட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போதைய இந்திய அரசு கூறுவது போல மூன்று மடங்கு அதிகரிக்கவில்லை.

கடந்த ஏப்ரல் 2018-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோதி முன்பு எப்போதையும்விட அவரது அரசு அதிக சாலைகளை அமைத்ததாக கூறினார்.

''இன்றைய தேதியில் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற சாலை கட்டுமான பணிகளின் அளவை ஒப்பிடும்போது தற்போது ஒவ்வொரு நாளும் மூன்று மடங்கு அதிகமாக கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன,'' என்றார் பிரதமர் மோதி.

உலகில் மிகப்பெரிய அளவில் சாலை அமைப்புகளை கொண்டிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கிட்டத்தட்ட 55 லட்சம் கி.மீ (34 லட்சம் மைல்கள்) அளவுக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலை கட்டுமானத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1. தேசிய நெடுஞ்சாலைகள்

2. மாநில நெடுஞ்சாலைகள்

3. கிராமப்புற சாலைகள்

1947-ல் சுதந்திரத்தின்போது இந்தியாவில், நாட்டின் முக்கிய பாதைகளில் கட்டமைக்கப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலைகளில் நீளம் 21,378 கி.மீ. 2018-ல் இது 1,29,709 கி.மீ ஆக அதிகரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசு வழங்கும் பணத்தில் கட்டப்படுகின்றன. இந்தியா முழுவதும் மாநில அரசுகளின் நிதி மூலமாக மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்டுகின்றன. கிராமப்புற சாலைகள் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், மற்றும் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக அமைக்கப்படுகின்றன.

சாலை கட்டுமானம் அதிகரிப்பு

அரசின் அதிகாரபூர்வ தகவல்ககளின்படி 2014-ல் மோதி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் ஒவ்வோர் ஆண்டும் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் நீளம் வெகுவாக அதிகரித்தது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த கடைசி நிதியாண்டில் (2013-14) 4,260 கி.மீக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டன.

2017-18-ல் பாஜக ஆட்சியின்போது 9,829 கி.மீ நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. 2013-14 நிதியாண்டில் போடப்பட்ட சாலையின் அளவை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், மோதி கூறியதுபோல மூன்று மடங்கு அதிகமாக சாலை போடப்படவில்லை.

2018 டிசம்பரில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மதிப்பாய்வில் முன்னூறுக்கும் அதிகமான அரசின் நெடுஞ்சாலை திட்டங்கள் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய இந்திய அரசும் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சிக்காக ஒதுக்கும் நிதி அளவை அதிகரித்து வருகிறது.

சாலைகளும் நெடுஞ்சாலைகளும் நாட்டின் சொத்துகள் என இந்திய அரசின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கூறியிருந்தார். கட்கரியின் முயற்சிகளை சோனியா காந்தியும் பாராட்டியிருந்தார்.

கிராமப்புற சாலைகள்

ஊரக பகுதிகளுக்கும் சாலைகளை விரிவுபடுத்தும் திட்டம் 2000-த்தில் முந்தைய பாஜக தலைமையிலான ஆட்சியில் துவங்கப்பட்டது.

கடந்த வருடம் மே மாதம், தற்போதைய பாஜக அரசு 2016-17 நிதியாண்டில் 47,000 கி.மீக்கும் அதிகமான அளவில் கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டன என்றது.

மோதி ஆட்சியின் கீழ் 2016-17-ம் ஆண்டில் கிராமப்புற சாலைகள் போடப்படுவது இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது என பாஜக தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த தசாப்தத்தில் போடப்பட்ட சாலைகள் குறித்த அதிகாரபூர்வ அறிக்கையின் படி 2009-10-ல் 60,017 கி.மீ அளவுக்கு சாலைகள் போடப்பட்டுள்ளது. இது 2016-17 நிதியாண்டில் போடப்பட்டதைவிட அதிகம். 2009-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஊரக சாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. 2004லிருந்து ஊரக சாலை கட்டுமானத்துக்கு உதவும் உலக வங்கி கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்தியாவில் ஊரகப் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மிகவும் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :