'ஸ்வச் பாரத்' திட்டத்தால் கழிப்பறை பயன்பாடு அதிகரித்துள்ளதா?#BBCRealityCheck

தூய்மை இந்தியா

நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய அரசு 'ஸ்வச் பாரத்' (தூய்மை இந்தியா) திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என உறுதியளித்தது. தற்போது 90% இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி கிடைத்துள்ளது. ஆனால் தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வரை 40% இந்தியர்களுக்குத் தான் கழிப்பறை வசதி இருந்தது என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

உண்மை என்ன?

தற்போதைய அரசின் கீழ் கழிப்பறை வசதி பெற்ற வீடுகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது உண்மை. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த கழிப்பறைகள் அனைத்தும் சரியாக இயங்கவில்லை அல்லது முறையாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்களும் உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் (2018) நரேந்திர மோதி 90% இந்தியர்கள் கழிப்பறை வசதி பெற்றுள்ளார்கள் எனச் சொன்னபோது எதிர்கட்சியான காங்கிரஸ் இத்திட்டத்தை விமர்சித்தது.

துப்புரவு துறையின் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த அக்டோபர் மாதம் ஒரு அறிக்கையில் ''கழிப்பறை கட்டுவதில் அரசு அதிக வேகம் காட்ட விரும்புவதால், திட்டமிடப்பட்ட மற்றும் நிலையான வகையில் நல்ல முறையில் சுகாதார வசதிகளை அடையும் நோக்கம் திசை திருப்பப்பட்டுள்ளது'' என்றார்.

தூய்மை இந்தியா திட்டம் இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் தூய்மை இந்தியா

கிராமப்புறப் பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை நிறுத்த அப்பகுதிகளில் வசிப்பவர்கள் எளிதாக அணுகும் வகையில் கழிப்பறைகள் கட்டித்தருவது இதன் நோக்கம்

நகரப் பகுதிகளில் கிளீன் இந்தியா - அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டுவது, பொதுக் கழிப்பிடங்கள் முறையாக அமைந்திருப்பதை உறுதிசெய்வது, நகரப்பகுதிகளில் திடக்கழிவுகளை அகற்றும் திட்டத்தை முறையாக கையாளுவது உள்ளிட்டவை இதன் நோக்கம்.

தற்போதைய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. இதனால் நவம்பர் 2018 நிலவரப்படி இந்தியாவில் 96.25% வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளது என்கிறது அரசின் தரவுகள். அக்டோபர் 2014-ல் 38.7% வீடுகளில் கழிப்பறை வசதிகள் இருந்தது என்றும் இந்த தரவுகள் குறிப்பிடுகின்றன.

இந்த தரவுகளின்படி, பாஜக அரசு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை விட அதிக அளவில் கழிப்பறைகளை கட்டியுள்ளது. அதே சமயம் ஊரக பகுதிகளில் ஒரு சுயாதீன ஆய்வு நவம்பர் 2017 - மாட்ச் 2018 இடையே மேற்கொள்ளப்பட்டது. இதில் 77% ஊரக பகுதிகளில் கழிவறை வசதியும் அதில் 93.4% மக்கள் தொடர்ந்து கழிவறையை பயன்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 6,136 கிராமங்களில் 92,000 வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நாட்டில் 27 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்கள் தற்போது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறையில் இருந்து விடுபட்டுள்ளன என தூய்மை இந்தியா மிஷனின் ஓர் அறிக்கை கூறுகிறது. முன்னதாக 2015 - 2016ல் இந்தியாவில் சிக்கிம் மாநிலம் மட்டுமே திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லா மாநிலமாக அறிவிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்த கழிப்பறை பயன்பாடு

கழிப்பறை கட்டப்பட்டது குறித்து நிறைய தரவுகள் உள்ளன. ஆனால் உண்மையில் அதன் பயன்பாடு எப்படியிருக்கிறது என்பதில் கேள்விகள் உள்ளன.

வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்பதனால் அக்கழிப்பறைகள் அனைத்தும் பயன்படுத்தப்படும் அல்லது திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் நின்றுவிட்டது என அர்த்தமல்ல.

2016-ல் இந்திய அரசின் பிரதான தரவு சேகரிக்கும் அமைப்பான தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (NSSO) 2016-ம் ஆண்டில் கழிவறைகள் கிடைக்கப்பெற்ற வீடுகளில் 5% பயன்படுத்தப்படவில்லை மேலும் 3% வீடுகளில் கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஊரக தூய்மை இந்தியா திட்டத்தின் செயலாளர் பரமேஸ்வரன் அய்யர் பிபிசியிடம் பேசியபோது '' அந்த அறிக்கை வெளியானதால் பின்னர் இவ்விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என நம்புகிறேன்'' என்றார்.

ஆனால் அதிகாரபூர்வ அறிக்கைகள் மற்றும் என் ஜி ஓ ஆய்வில் சில விவரங்கள் தெரியவருகின்றன.

1. நிறைய கழிவறைகள் ஒற்றை குழி கொண்டதாகவே கட்டப்பட்டுள்ளன அல்லது கழிவு நீர் சேகரிப்பு தொட்டி 5 - 7 ஆண்டுகளுக்கு பின் பயன்படுத்தமுடியாத நிலை உள்ளது என்பது தெரிகிறது.

2. தரமற்ற கட்டுமானம் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக சில கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

3. மேலும் அரசின் இலக்குகள் மற்றும் அதிகாரபூர்வ தகவல்கள் தொடர்பாக சில பிரச்சனைகளும் உள்ளன.

உதாரணமாக, நரேந்திர மோதி 2015-ல் இந்தியாவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தற்போது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனி கழிப்பறைகள் இருக்கின்றன என்றார். ஆனால் 2018-ல் வெளியான கல்வி அறிக்கையொன்றில் கிட்டத்தட்ட அரசு பள்ளிகளில் உள்ள 23% கழிவறைகள் உபயோகப்படுத்த முடியாதவை என குறிப்பிடப்பட்டுள்ளது

சில விவகாரங்களில் இலக்குகளே காலாவதியாகிவிட்டது என்பதும் தெரியவருகிறது.

திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் ஒழிந்ததா?

பிபிசி மராத்தி சேவை 2018-ல் சுயாதீனமாக ஒரு விசாரணை மேற்கொண்டது.

திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறையில் இருந்து விடுபட்டுள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா அறிவிக்கப்பட்டிருந்ததை ஆராய்ந்தது.

ஒரு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கே 25% வீடுகளில் கழிவறைகள் இல்லை என்பதும் அவர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டியிருந்ததையும் கண்டறிந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

பிபிசியின் இது தொடர்பாக ஒரு கட்டுரை வெளியான பிறகு, உள்ளூர் அதிகாரிகள் அந்த கிராமத்தில் மேற்கொண்டு கழிவறைகளை அமைத்தார்கள்.

இதையடுத்து வேறு அறிக்கைகளும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லா மாநிலம் எனும் அரசின் அறிவிப்பை கேள்விக்குள்ளாக்கின.

உதாரணமாக, குஜராத் மாநிலம் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லா மாநிலமாக 2017 அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரு ஆண்டுக்குப்பிறகு அதிகாரபூர்வ தணிக்கையில் 29% வீடுகள் கழிவறைகள் இல்லை எனத் தெரிந்தது.

நடத்தை மாற்றம்

அரசின் திட்டத்தில் முக்கிய பகுதி மக்களின் பழக்கவழக்கத்தை மாற்றுவதும் அடங்கும்.

சில இடங்களில் நடத்தை பிரச்சனைகள் இருக்கிறது என்பதை ஆங்காங்கு நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. நடத்தை பிரச்னை குறித்து அளவிடுவது கடினமானது.

உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டத்தில் ஒரு உள்ளூர் அதிகாரியான சத்யேந்திர குமார் பிபிசியிடம் பேசியபோது '' மக்கள் கழிப்பறைகளை கட்டினார்கள். ஆனால் அதை இன்னமும் தங்களது வீட்டின் ஒரு பகுதியாக கருதாமல் இருக்கிறார்கள். மேலும் பல வீடுகளில் வயதானவர்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். அவற்றை சௌகரியமாக அவர்கள் உணரவில்லை'' என்றார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான ஒரு ஆய்வில், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட நான்கு வட இந்திய மாநிலங்களில் நான்கில் ஒருவர் வீட்டில் கழிவறைகள் இருந்தாலும் திறந்தவெளியில் அவர்கள் தொடர்ந்து மலம் கழித்து வருகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :