சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளான ஏர் இந்தியாவின் 'ஜெய்ஹிந்த்' உத்தரவு

ஏர் இந்தியா படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஏர் இந்தியா

இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா தனது ஊழியர்கள் ஒவ்வொருமுறையும் பயணிகளுக்கு அறிவிப்பு செய்யும்போதும் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக 'ஜெய்ஹிந்த்' சொல்லவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.

இதற்கு சமூக வலைத்தள பயனர்கள் கேலியாகவும், கோபமாகவும் எதிர்வினையாற்றியுள்ளனர். சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் பணியாற்றும் தமது ஊழியர்கள் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்டபின்னும் ஒரு மிகச்சிறிய இடைவெளி விட்டு தீவிர உணர்வுடன் ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என ஏர் இந்தியாவின் அறிவிப்பு கூறுகிறது.

ஏர் இந்தியாவின் இயக்குநர் (செயல்பாடு) இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. விமான ஊழியர்கள் அனைவரும் ஜெய்ஹிந்த் எனச் சொல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுளள்து.

இதையடுத்து ஜெய் ஹிந்த் என விமான ஊழியர்கள் சொல்லும் நிகழ்வு எப்படியிருக்கும் என இணைய பயனர்கள் தங்களது கற்பனை சிறகை விரித்து எழுதினர்.

ஆனால் ஏற்கனவே தடுமாறும் ஏர் இந்தியா நிறுவனம், சரியான திசையை நோக்கி பயணிக்க இந்த அறிவிப்பு உதவுமா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து பெரும் கடனில் சிக்கித்தவித்து வருகிறது. 2007-க்கு பிறகு ஏர் இந்தியா லாபம் பார்க்கவிலை. இந்த நிறுவனத்தை தமது நிர்வாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குத் தேவைப்படும் அளவுள்ள பங்குகளை விற்றுவிடுவது என்று அரசு முடிவெடுத்தது. ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை.

இந்தியாவில் தேசபக்தி குறித்து அதிகம் பேசப்படும் நேரத்தில் ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரில் 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதன், பின்னர் தனக்கு ஒவ்வாத, அணு ஆயுத வல்லமை கொண்ட அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதிக்கொண்டுள்ளது இந்தியா. சி ஆர் பி எஃப் வீரர்கள் கொலை செய்யப்பட்டபின்பு இந்தியா விமானதாக்குதலில் ஈடுபட்டது. இதன் பின்னர் பாகிஸ்தான் இந்திய விமானியை சிறை பிடித்து பின்பு விடுவித்தது. இந்த சூழ்நிலையில் தேசிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடங்கங்களில் தேசியவாத உணர்ச்சி இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது.

இச்சூழலில் வெளிவந்திருக்கும் ஏர் இந்தியாவின் அறிவிப்பை சிலர் வரவேற்றாலும் சிலர் கிண்டல் செய்தனர். விமான அறிவிப்புகள் இறுதியில் ஜெயஹிந்த் என கூறும்போது வழக்கத்துக்குமாறாக என்னமாதிரியான உணர்வு இருக்கும் என கிண்டலுடன் சிலர் பதிவிட்டனர்.

''லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் தயவு செய்து சீட் பெல்ட் அணியுங்கள்.... ஜெய்ஹிந்த்"

லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் தற்போது 40,000 அடி உயரத்துக்கு மேல் நாமிருக்கிறோம். தற்போது வெளியில் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ்... ஜெய்ஹிந்த்'' எனக் குறிப்பிட்டுள்ளார் ஒரு நேயர்.

''அன்பார்ந்த பயணிகளே நமது விமானம் 10 மணிநேரம் தாமதத்தைச் சந்தித்துள்ளது.. ஜெய்ஹிந்த்"

'' சார், தயவு செய்து எங்களிடம் மரியாதையின்றி நடந்துகொள்ள வேண்டாம்... ஜெய்ஹிந்த்'' என ஒரு நேயர் பதிவிட்டுள்ளார்.

ஏர் இந்தியா இந்தியாவின் பழமையான வணிக நோக்கில் செயல்படும் விமான நிறுவனம். பழைய விமான பயன்பாடு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவை குறித்து ஏற்கனவே பலர் கேலி செய்யும் விதமாக நகைச்சுவை துணுக்குகளை வெளியிட்டதுண்டு. சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சிகள் இருந்ததாக செய்திகள் வெளியாயின.

ஆகவே ட்விட்டர் பயனர்கள் இந்த வாய்ப்பை நழுவவிடாமல் ஏர் இந்தியா நிறுவனத்தின் தாமத அறிவிப்புகள் மற்றும் ரத்து அறிவிப்புகள் குறித்தெல்லாம் கிண்டல் செய்து பதிவிட்டனர்.

''அதுக்கு பேசாம ஏர் இந்தியாவ மாத்தி ஜெய் இந்தியானு பெயரை மாத்திவிடுங்க.....அப்புறம் எல்லா அறிவிப்புக்கு பின்னாடி தேசிய கீதமும் போட்டுடுங்க எல்லாருக்கும் இன்னும் தேசப் பற்று பெருக்கெடுத்து ஓடும்....'' என்கிறார் பால் சி அருண் டேனியல்.

''ஜெயஹிந்த் என்று சொல்வதால் ஒன்றும் தவறுஇல்லை. சொன்னா சொல்லிட்டு போகட்டும். இந்தியா வாழ்க என்று சொல்வதில் பெருமைதானே'' என பதிவிட்டுள்ளார் அப்பாமாலிக் அப்பா

''இந்தியாவில் பிறந்து ஜெய் ஹிந்த் சொல்வதற்கு என்ன தயக்கம் ? சொல்வதனால் தவறு ஒன்றும் இல்லையே. நமது ராணுவத்துக்காக சொல்லலாமே ஜெய் ஹிந்த்'' என எழுதியுள்ளார் ரமேஷ் யோஜித் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்