கஜா புயலில் இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் மீட்பு

கஜா புயலில் இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் மீட்பு படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி:கஜா புயலில் இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் மீட்பு

கஜா புயலினால் தென்னை மரம் விழுந்து இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக ரூ.6 ஆயிரத்துக்கு அடமானம் வைக்கப்பட்ட சிறுவனை அதிகாரிகள் மீட்டனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தான். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின்போது தென்னை மரம் விழுந்ததில் அந்த சிறுவனின் தந்தை இறந்தார். இதையடுத்து அவருடைய இறுதி சடங்கிற்காக ரூ.6 ஆயிரத்துக்கு அந்த சிறுவன் அடமானம் வைக்கப்பட்டான். ஒரத்தநாடு அருகே உள்ள பொட்டலங்குடிக்காட்டை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் அந்த சிறுவனை அடமானமாக வாங்கி ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இந்த தகவல் தஞ்சையில் உள்ள சைல்டு லைன் அமைப்புக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒரத்தநாடு சென்றனர்.

அப்போது மேலவன்னியப்பட்டு பகுதியில் ஆடுமேய்த்துக்கொண்டு இருந்த அந்த சிறுவனை அதிகாரிகள் குழுவினர் மீட்டு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிறுவனுக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், விடுதலை சான்று வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் அடமானத்துக்கு வாங்கிய மகாலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்." இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.தினமணி: 'ஊதியம் கிடைக்காமல் 1 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தவிப்பு!'

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டில் காஷ்மீர், கேரளம் உள்ளிட்ட 3 மாநிலங்கள் தவிர பிற மாநிலங்களில் பணிபுரியும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களுக்கு புதன்கிழமை வரையில் பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்படவில்லை என அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் சுமார் 1.80 லட்சம் நிரந்தரப் பணியாளர்களும், சுமார் 75 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் நிரந்தரப் பணியாளர்களுக்கு கடந்த 2018 நவம்பர் மாதம் வரை, அந்தந்த மாதத்தின் கடைசி வேலை நாளின்போது ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை 2019 முதல் அடுத்த மாதத்தின் முதல் வேலை நாளில் வழங்கப்படும் என மாற்றப்பட்டது. அதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும், கடந்த ஜனவரி மாதத்துக்கான ஊதியம் பிப்.1ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான ஊதியம் மார்ச் 6ஆம் தேதி ஆகியும் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாக பிற மாநிலங்களில் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தில்லியிலுள்ள கார்ப்பரேட் அலுவலகப் பணியாளர்கள், ஜம்மு காஷ்மீர், கேரளம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் பணிபுரியும் நிரந்தப் பணியாளர்களுக்கு மட்டுமே இதுவரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்காலிக பணியாளர்கள் 75ஆயிரம் பேருக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 75ஆயிரம் தற்காலிகப் பணியாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூறியது: பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து வருவாய் ஈட்டும் 124 நிறுவனங்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில், ஆண்டுக்கு 15 சதவீதத்துக்கும் கூடுதலாக வருவாய் ஈட்டும் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே ஊதிய உயர்வு என்ற விதிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அரசு, அதன் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனிடையே பிஎஸ்என்எல் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே, தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். அதேபோல் தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியப் பட்டியலுக்கான பணம் விடுவிக்கப்படாமல் உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்த அரசு, தற்போது ஊதியத்தையும் நிறுத்தி வைத்து உளவியல் ரீதியாக போராட்டத்தை முடக்குவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது என்றனர்.

இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.இந்து தமிழ்: 'ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன'

படத்தின் காப்புரிமை Getty Images

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்தது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன.

மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறை கேடும் நடக்கவில்லை என கடந்த டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண், "ரஃபேல் ஒப்பந்தம் குறித்த பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான உண்மைகளை மத்திய அரசு மறைக்கிறது. குறிப்பாக, இது தொடர்பான சில தகவல் குறித்து, தி இந்து' குழும தலைவர் என்.ராம், 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதி உள்ளார்" என்றார்.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் குறுக்கிட்டு, "திருடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக என்.ராம் எழுதிய முதல் கட்டுரை பிப்ரவரி 8-ம் தேதி வெளியானது. மேலும் நீதிமன்ற விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்றும் (நேற்று) மற்றொரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமமானதாகும்" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறும் போது, "திருடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கட்டுரை வெளியானது என்றால், இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது" என்றனர்.

இதுகுறித்து வேணுகோபால் வாதிடும்போது, "ஆவணங்கள் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அந்த நாளிதழில் வெளியாகி உள்ள ஆவணத்தின் மேல் பகுதியில் இருந்த 'ரகசியம்' என்ற வார்த்தை விடுபட்டுள்ளது. அதாவது 'ரகசியம்' என்று அரசால் வகைபடுத்தப்பட்ட ஆவணங்களையோ அதில் உள்ள விவரங்களையோ பொது வெளியில் வெளியிடுவது, அலுவலக ரகசியங்கள் சட்டப்படி குற்றமாகும்.

இந்த தகவலை வெளியிட் டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் இத்தகைய ஆவணங்களை இணைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது.

மேலும் ரஃபேல் ஒப்பந்தமானது பாதுகாப்பு தளவாட கொள்முதல் தொடர்புடையது என்பதால் இதுகுறித்து நீதித்துறை ரீதியாக மறு ஆய்வு செய்ய முடியாது.

இதுதவிர, கடந்த வாரம் பாகிஸ் தானுடன் வான்வழி சண்டை நடந் தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் வசம் உள்ள எப்-16 ரக விமானங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நவீன வசதிகளுடன் கூடிய ரஃபேல் ரக போர் விமானம் மிகவும் அவசியமாகிறது" என்றார்.

இதையடுத்து விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

நேற்று 'தி இந்து' நாளிதழில் வெளியான கட்டுரையில், "ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான 7 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய பேச்சுவார்த்தைக் குழு (ஐஎன்டி) 2016-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பாதுகாப்பு அமைச்சகத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ரூ.4,550 கோடியை வங்கி உத்தரவாதமாக வழங்க பிரான்ஸ் நிறுவனம் மறுப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் ஆயுதங்களுடன் கூடிய பறக்கும் நிலையிலான 36 ரஃபேல் போர் விமானங்களின் மதிப்பு சுமார் ரூ.62,400 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, பிரான்ஸ் நிறுவனம் வங்கி உத்தரவாதம் வழங்க மறுத்ததால், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தர முன்வந்த தொகையைவிட புதிய ஒப்பந்தப்படி சுமார் ரூ.1,960 கோடி கூடுதலாக வழங்க வேண்டி உள்ளது" என கூறப்பட்டு இருந்தது.

தி இந்து குழும தலைவர் என்.ராம் நேற்று கூறியதாவது: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் நலன் கருதியே வெளியிட்டோம். ஆவணங்களை அளித்தது யார் என்ற விவரத்தை எங்களிடமிருந்து யாரும் பெற முடியாது. மிக நம்பகமான இடத்திலிருந்தே அந்த ஆவணங்களைப் பெற்றோம். அளித்தவர்கள் குறித்த ரகசியத்தை காக்க வேண்டியது எங்கள் கடமை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் 19 (1) (ஏ) பிரிவு உறுதி படுத்தி உள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையின் கீழ் எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது. அதோடு, தகவல் அறியும் உரிமை சட்டத் தின் 8(1)(i) மற்றும் 8(2) ஆகிய பிரிவுகள் மிகத் தெளிவான பாது காப்பை அளிக்கின்றன" என்று கூறியுள்ளார்."


படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - திருமணத்திற்கு வெளியே உறவு கொள்வது சமூகத்துக்கு ஆபத்தானது : உயர்நீதிமன்றம்

திருமணத்திற்கு வெளியே உறவு கொள்வது சமூகத்துக்கு ஆபத்தானது. இதனால் கொலை, ஆள்கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமணத்திற்கு வெளியே உறவு வைத்திருந்த விவகாரம் தொடர்பாக ஆட்கொணர்வு மனு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூசி ஆகியோர், இந்த பிரச்சனையை பற்றிப் பேசுவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இதனை தடுக்க அல்லது குறைக்க, 20 கேள்விகளை எழுப்பியுள்ள நீதிமன்றம், அதற்கு மாநில அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்திருந்ததால் நிகழ்ந்த கொலைகள், தற்கொலைகள், கடத்தல் சம்பவங்கள் எத்தனை? இதில் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் பங்கு என்ன? உள்ளிட்ட 20 கேள்விகளை நீதிமன்றம் கேட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :