எம்.ஜி.ஆர் வாக்குகளை குறிவைக்கும் பாஜக - மோதியின் வித்தை பலிக்குமா?

மோதி படத்தின் காப்புரிமை Getty Images

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )

தமிழ் நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முறையாக தொடங்கி விட்டார் பிரதமர் நரேந்திர மோதி. சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் என்ற இடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக - அஇஅதிமுக - பாமக கூட்டணியின் மக்களவை தேர்தலுக்கான முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மோதி பேசினார்.

இதற்கு முன்பு மோதி பேசிய அரசியல் கூட்டங்களுக்கும் இந்த கூட்டத்துக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்று நாம் உறுதியாக சொல்லலாம். ஆம். புதன்கிழமை கூட்டத்தில் மோதியின் அறிவிப்புகள் வண்ண, வண்ணமான அரசியல் அறிவிப்புகளாகவே இருந்தன.

இதில் முக்கியமானது மறைந்த தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக வின் நிறுவனருமான எம்ஜிஆரின் வாக்குகளை குறிவைத்து மோதி வெளியிட்ட அறிவிப்புகள்.

இதில் சிலவற்றை பார்க்கலாம்.

1.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம்' என்று அழைக்கப்படும்.

2.இனிமேல் தமிழகத்திலிருந்து புறப்படும் மற்றும் தமிழகத்துக்கு வரும் அனைத்து பயணிகள் விமானங்களிலும் அறிவிப்புகள் தமிழிலும் இருக்கும்.

3.ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் எட்டு மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மீட்கப்பட்டார். அதுபோல உலகின் எந்த பகுதியில் தமிழர்களுக்கு பிரச்சனை என்றாலும், நானும் (மோதி) மத்திய அரசும் ஓடோடிச் சென்று அவர்களைக் காப்பாற்றுவோம்.

4.செளதி அரேபியாவில் சிக்கிக் கொண்டுள்ள தமிழர்கள் உள்ளிட்ட 850 இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

மோதியின் பேச்சில் தமிழகம் தொடர்பான முக்கியமான அறிவிப்புகளாக இவற்றைப் பார்க்கலாம். தமிழகத்தை குறிவைத்து மோதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சில அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை ஏற்கனவே பிபிசி இணையதளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் தெரிவித்திருக்கிறேன்.

அதற்கான முக்கியமான காரணம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை எம்.பி தொகுதிகள். 2004 மற்றும் 2009 ல் தமிழகத்திலிருந்து போன எம்.பிக்கள்தான் இந்தியாவை யார் ஆளுவது என்பதை தீர்மானித்தனர்.

2004 ல் 40 தொகுதிகளையும் திமுக - காங்கிரஸ் - இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் - பாமக - மதிமுக கூட்டணி அள்ளியது. எதிரில் நின்ற அஇஅதிமுக - பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது.

Image caption முதல்வரானாலும், சினிமாவில் நடிக்க ஆசை

2009 தேர்தலில் திமுக - காங்கிரஸ் - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி 28 தொகுதிகளையும், அஇஅதிமுக - இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் - மதிமுக - பாமக கூட்டணி 12 எம்.பிக்களையும் வென்றது. அந்த தேர்தலிலும் மன்மோகன் சிங் அரசின் இரண்டாவது ஆட்சிக் காலம் தொடர தமிழகத்தின் எம்பிக்களின் பங்கு, எண்ணிக்கை அளவிலும், அரசியல் அளவிலும் முக்கியமானது.

ஆனால் 2004 - 2014 பத்தாண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மக்களவையில் பாஜகவிற்கு ஒரு எம்.பி கூட தமிழகத்திலிருந்து போகவில்லை. ஆனால் 2014 தேர்தலில் பாஜக - தேமுதிக - பாமக - மதிமுக கூட்டணி இரண்டு இடங்களை வென்றது.

படத்தின் காப்புரிமை Twitter

பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனும், பாமகவின் அன்புமணி ராமதாஸூம் வென்றனர். மீதமிருந்த 37 தொகுதிகளை ஜெயலலிதா அள்ளிக் கொண்டு போனார். புதுச்சேரியின் ஒரு தொகுதியை காங்கிரஸ் வென்றது.

ஆகவே வரும் மக்களவை தேர்தலில் டில்லியில் தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து வரும் 40 எம்.பிக்களில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி எம்.பி. க்கள் வராமல் தடுத்து விட வேண்டும் என்பதை மோதி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் என்றே கருதுகிறேன். பாஜகவும் அதனது கூட்டணி கட்சிகளும் எவ்வளவு எம்.பி.க்களை தமிழகத்தில் வெல்ல வேண்டும் என்பதை விட, திமுக - காங்கிரஸ் கூட்டணி எந்தளவுக்கு வெற்றி பெற முடியாமல் தடுக்கப் படுகிறது என்பதே மோதியின் ஒற்றை இலக்காக இருந்து கொண்டிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை உரையில் மோதி எம்ஜிஆரையும், காமராஜரையும் வானாளவப் புகழ்ந்தார். அதுவும் எம்ஜிஆரை மிகவும் புகழ்ந்து தள்ளினார் என்றே சொல்லலாம். ''எம்ஜிஆர் பிறந்த இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு நான் போயிருந்தேன். அங்கு போன முதல் பிரதமர் நான்தான்'' என்றார். இந்திரா காந்தியின் ஆட்சி கலைப்பை பற்றி பேசினார் மோதி. ''இந்திரா காந்தி 50 முறைகளுக்கும் மேல் அரசியல் சாசன பிரிவு 356 ஐ பயன்படுத்தி பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்தார். அதில் எம்ஜிஆரி ன் ஆட்சியும் உண்டு'' என்றே பேசினார்.

அதே போல காமராஜரை பற்றி பேசும்போது மோதி சொன்னார், ''காமராஜர் ஏன் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்? அவர் ஊழலை தட்டிக் கேட்டார். அதனால் அவர் வெளியேற வேண்டி வந்தது'' என்றார்.

நாற்பது நாட்களில் நான்கு முறை

படத்தின் காப்புரிமை ARUN KARTHICK

மற்றோர் சுவாரஸ்யமான விஷயத்தையும் இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமானது என்றே கருதுகிறேன். கடந்த 40 நாட்களில் மோதி தமிழகத்துக்கு வருவது, இது நான்காவது முறையாகும். அதாவது புதன்கிழமை மோதி தமிழகம் வந்தது நான்காவது முறையாகும். இதற்கு முன்பாக கன்னியாகுமரி, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு வந்தார். இந்த நான்கு பயணங்களிலும் மோதி பேசியது ஆங்கிலத்தில். இந்த நான்கு பயணங்களுக்கு முன்பு தமிழகம் வரும் போதெல்லாம் மோதி ஹிந்தியில் தான் பேசியிருக்கிறார். ஆனால் கடந்த நான்கு பயணங்களில்தான் மோதி ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார்.

வழக்கமான மோதி எங்கே?

புதன்கிழமை மோதி உரையில் நான் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம், வழக்கமாகவே மோதியின் உரைகளில், அதுவும் தேர்தல் காலங்களில் மோதியின் உரைகளில் இருக்கும் ஆக்கிரோஷம் இந்த முறை இல்லை.

ஆம். சென்னைக்கு வருவதற்கு முன்பு கர்நாடகாவில் ஒரு தேர்தல் பரப்புரையில் பேசிய மோதி, தேச பாதுகாப்பு, புல்வாமா, பாலாகோட் தாக்குதல்கள் இவற்றில் எதிர்கட்சிகளின் விமர்சனங்களை கடுமையாக விளாசித் தள்ளினார். நாட்டின் பாதுகாப்புடன் எதிர்கட்சிகள் விளையாடுவதாக கூறினார். மொழி தெரியாதவர்களை கூட மோதியின் தன்னெழுச்சியான, ஆக்கிரோஷமான பேச்சு நின்று கேட்க வைக்கும்.புரிகிறதோ இல்லையோ, அரசியல் ஆர்வம் ஐந்து சதவிகிதம் உள்ளவர்களை கூட மோதியின் ஆக்கிரோஷமான அந்த உரைகள் நின்று கேட்க வைக்கும். அந்த ஆக்கிரோஷம் சென்னை கூட்டத்தில் பேசிய மோதியிடம் காணப்படவில்லை.

அவர், நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகளின் போக்கு பற்றி பேசினார், சாடினார். ஆனால் வழக்கமான காரம் இல்லை. மாறாக பாலாகோட் தாக்குதல்கள் பற்றிய விவகாரத்தில் எதிர்கட்சிகள் மீதான தன்னுடைய விமர்சனத்தை மோதி சுலபமாகவும், விரைவாகவும் கடந்து போனார் என்றே உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனை நான் இப்படிப் பார்க்கிறேன். அதாவது, தமிழகத்தில் மோதிக்கு எதிராக கடந்த பல மாதங்களாக மூண்டெழுந்திருக்கும் கடுமையான எதிர்ப்பு - நீட் விவகாரம், கஜா புயலின் பாதிப்புகளை பார்க்க தமிழகம் வராதது, மேகதாது விஷயம், ஏழு தமிழர் விடுதலையில் பாராமுகமாக இருப்பது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தொடர் துரோகங்கள் - என்று அடுக்கிக் கொண்டே போகலாம் - எந்த விதமான அரசியல் உரையாடலை (Political narrative) தமிழகத்துடன் நடத்துவது என்பதில் மோதிக்கு உண்மையிலேயே தெளிவற்ற ஒரு மனநிலையை உருவாக்கியிருக்கிறது என்றே கருதுகிறேன்.

ஒன்றை நாம் மறந்த விட வேண்டாம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மோதியின் வருகைக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. கடந்த 40 நாட்களில் மோதி மூன்று முறை வந்த போது அவருக்கு எதிராக ஏற்பட்ட எதிர்ப்பு என்பது ஏக இந்தியாவையும் ஆச்சரியப் பட வைத்த விஷயம்தான்.

''Go back Modi" என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங் ஆனது எவராலும் மறக்க முடியாதது. இதனோடு சேர்த்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், வேறு சில தமிழர் அமைப்புகளும் கறுப்பு பலூன்களை மோதியின் வருகைக்கு எதிராக பறக்க விட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

புதன் கிழமை கூட்டத்தில் மோதிக்கு எதிராக கறுப்பு பலூன்கள் பறக்க விடப்படவில்லை. மோதிக்கு எதிரான போராட்டங்களை வைகோ நடத்தவில்லை. ஆனால் ட்விட்டரில் மோதிக்கு எதிரான ஹேஷ்டேக் அதிகளவில் ட்ரெண்டிங் ஆனதை எவராலும் மறுக்க முடியாதது.

எம்ஜிஆரும் பாரத ரத்னாவும்

எம்ஜிஆரை ஒரு தேசிய கட்சி சொந்தம் கொண்டாடுவதும், அவருக்கு கெளரவும் செய்வதும், பட்டங்களை கொடுப்பதும், பட்டயங்களை அள்ளி வீசுவதும் ஏதோ மோதியின் பாஜகதான் துவங்கி வைத்தது என்று நாம் நினைக்க வேண்டாம். இது அரதப் பழசலான விஷயம்.

எம்ஜிஆர் 1987 டிசம்பரில் இறந்து போனார். 1988 ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசு எம்ஜிஆருக்கு பாரத ரத்னா வழங்கி கெளரவித்தது. எதற்காக? அடுத்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காகத்தான்.

ஆனால் 1989 ஜனவரியில் நடந்த தேர்தலில் அஇஅதிமுக இரண்டாக உடைந்து போட்டியிட்டது. திமுக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் வெறும் 26 இடங்களை பிடித்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பே இதுதான் நிலைமை என்றால் தற்போதய காலகட்டத்தைப் பற்றி நாம் சொல்ல வேண்டுமா என்ன?

இந்த தேர்தலில் மோதி தமிழகத்திற்கு தனி கவனம் செலுத்துவதாக பாஜக வினர் கூறுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்துக்காக வரும் நாட்களில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து முறைகளாவது மோதி தமிழகம் வரவிருப்பதாக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும் போது கூறினார்.

கேலிக்கூத்தான தேமுதிக விவகாரம்

புதன்கிழமை மோதியின் தமிழக வருகையை விட முக்கியத்துவம் பெற்ற மற்றோர் விவகாரம் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) சடுகுடு விளையாட்டும், அந்தர் பல்டிகளும்.

எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதில் தேமுதிக நடத்திய பேச்சுவார்த்தை 'நாராச அரசியலின்' புதிய பரிமாணங்களை தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே ஏற்படுத்தியது என்றே நாம் சொல்லலாம்.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக அத்தனை தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. இந்த முறை யாருடன் கூட்டணி சேர்ந்து தேமுதிக போட்டியிடப் போகிறது என்பதே கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஊடகங்களின் பேசு பொருளாக இருந்தது.

அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து விட்டு வெளியே வந்தார். ''தான் விஜயகாந்தின் உடல் நலம் பற்றி மட்டுமே விசாரித்ததாகவும், கூட்டணி பற்றி பேசவில்லை'' என்றும் கூறினார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, ஸ்டாலின் வருகையின் போது அரசியல் பேசப் பட்டதாகவும் கூறினார். இது அஇஅதிமுகவுடனும் கூட்டணிக்காக பேசிக் கொண்டிருக்கும் தேமுதிக தன்னுடைய பேரத்தை அதிகரித்துக் கொள்ளுவதற்கான யுக்தி என்றே விவரம் அறிந்தவர்கள் அனைவராலும் பார்க்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Twitter

பின்னர் தமிழக அமைச்சர் ஒருவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்துடன் ஐந்து முறை பேசியதாகவும், எந்தளவுக்கு ரகசியமாக தங்களால் (அஇஅதிமுக) அரசியல் கூட்டணிகள் பற்றி பேச முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் கூறினார். அதன் பிறகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், வேறு சில அமைச்சர்களும் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

அஇஅதிமுக - பாஜக - பாமக கூட்டணிக்கு விஜயகாந்தை அழைக்கும் காரியம் இது என்றே பார்க்கப் பட்டது. நிச்சயம் புதன்கிழமை மோதி கலந்து கொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளுவார் என்றே எதிர்பார்க்கப் பட்டது.

கூட்டம் நடக்கும் இடத்தில் மோதி, பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கட் அவுட்டுகள் வைக்கப் பட்டிருந்தன. இரண்டு கட் அவுட்டுகள் வைப்பதற்கான சாரங்கள் காலியாக இருந்தன. விஜயகாந்தின் கட் அவுட்டுகள் அங்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மதியம் 12 மணியளவில் அந்த சாரங்கள் அகற்றப்பட்டன. அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பாஜக தலைவர் பியூஷ் கோயலுடன் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தேமுதிக வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.

பின்னர் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த துரைமுருகன், திமுக கூட்டணியில் சேர அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் தங்களது கூட்டணியில் ஏற்கனவே இட பங்கீடு முடிவடைந்து விட்டது என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு மேலும் தங்களது கூட்டணியில் மாற்றம் வர வேண்டும் என்றால் அது தலைவர் (மு.க. ஸ்டாலின்) கைகளில்தான் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த தகவல் ஊடகங்களில் வந்த அடுத்த பத்தே நிமிடங்களில் மோதியின் பொது கூட்ட மேடையின் அருகே பறந்து கொண்டிருந்த தேமுதிக கொடிகள் கிழித்து எறியப்பட்டன. மேடையில் வைக்கப் பட்டிருந்த விஜயகாந்தின் படம் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக அங்கே பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திராஜனின் படம் வைக்கப் பட்டது.

ஆனால் மோதி பொதுக் கூட்டம் முடிந்து சென்னையிலிருந்து புறப்பட்டு போன அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பியூஷ் கோயலுடன், சுதீஷ் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கினார். அந்த பேச்சு வார்த்தையின் போது அஇஅதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இருவரும் இருந்தனர்.

பேச்சு வார்த்தைகள் தொடங்கிய சில நிமிடங்களில் அதில் தமிழிசை செளந்தராஜனும் கலந்து கொண்டார். பேச்சு வார்த்தைகளின் முடிவு என்னவென்று கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வரையில் தெரியவில்லை. ஒரே நேரத்தில் பல தரப்புடனும் பேசும் அஷ்டாவதினியாக தேமுதிக தலைவர்கள் உருவாகி விட்டனர் என்பது தமிழர்கள் பெருமைப்படக் கூடிய மற்றுமோர் விஷயம். அந்த கோணத்தில் இந்த விஷயத்தை பார்த்தால் அரசியல் நாகரிகத்தின் புதிய பரிமாணங்களை கேப்டனின் கட்சி 2019 தேர்தலில் நன்றாக கட்டமைத்து விட்டது என்றே சொல்லலாம்.

ஆசை வெட்கமறியாது. அப்படியென்றால் பேராசை..?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :