அதிமுகவுடனே கூட்டணி; துரைமுருகனை சந்தித்தது ஏன்? - புதிய விளக்கம் தரும் தே.மு.தி.க

விஜயகாந்த்

துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகதான் சந்தித்தோம் என்று தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவின் நிர்வாகிகளான அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் இருவரும் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு சென்று தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்தனர் என்றார் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ்.

ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

"தற்போது நாங்கள் தெளிவாக கூறுவது என்னவென்றால், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை முடிவாகிவிட்டது. தொகுதி பங்கீடுகள் குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும்," என்று சுதீஷ் கூறினார்.

திமுகவில் இருந்து அழைப்பு வந்தது. நாங்கள் இருவரும் பேசிக் கொண்டது உண்மைதான். ஆனால், அது நடந்து 10 நாட்கள் ஆகிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

"துரைமுருகன் தனது கட்சியை பற்றியும் தலைமையும் பற்றியும் என்னிடம் அதிகம் பகிர்ந்துள்ளார். ஆனால், அதை பற்றி நான் வெளியில் சொல்ல மாட்டேன்," என்றும் சுதீஷ் தெரிவித்தார்.

துரைமுருகன் என்ன சொல்கிறார்?

படத்தின் காப்புரிமை TWITTER

சுதீஷ் அளித்த விளக்கம் தொடர்பாக பதிலளித்துள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், "எனக்கு அனகை முருகேசனை முன்பின் கூட தெரியாது. எங்களுக்குள் தனிப்பட்ட விஷயங்கள் பேச ஒன்றுமில்லை. எப்படியாவது சீட் கொடுங்கள் என்று கேட்டார்கள்," என தெரிவித்தார்.

தேமுதிக குறித்து நான் பரிதாபம்தான் பட முடியும் என்று குறிப்பிட்ட துரைமுருகன், அவர்கள் ஏற்கனவே நொந்து போயிருப்பதாகவும், மேலும் அவர்களை புண்படுத்த விரும்பவில்லை என்றும் கூறினார்.

துரைமுருகன் அவர்கள் கட்சியின் தலைமை குறித்து என்னுடன் பேசியதெல்லாம் வெளியே சொல்ல மாட்டேன் என்று சுதீஷ் கூறியிருந்தார். இதுகுறித்து துரைமுருகனிடம் கேட்டதற்கு பதிலளித்த அவர், "சுதீஷ் இப்படி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை என்றும் அப்படி பேசியிருந்தால், அவர் மீது தாம் வைத்திருந்த மரியாதை குறையலாம்" என்றும் துரைமுருகன் கூறினார்.

அதிமுக கூட்டணி

படத்தின் காப்புரிமை Facebook

கடந்த பல வாரங்களாக தேமுதிகவுடன் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. யாருடன் கூட்டணிக்குச் செல்லப் போகிறது என்ற கேள்வி நிலவிவந்த நிலையில், திமுக தொகுதி பங்கீடு நிறைவடைந்ததாக செவ்வாய்க்கிழமை மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

நேற்றும், இன்றும் தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தது.

மாநாடு

நேற்று பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் மாலை 4 மணி அளவில் நடந்தது.

இது தொடர்பாக வெளியான நாளிதழ் விளம்பரங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் பெயரும் புகைப்படமும் இடம்பெற்றன.

இருந்த போதிலும் மதியத்திற்குள் தேமுதிக அதிமுக கூட்டணி உறுதியாகிவிடும், பொதுக் கூட்டத்தில் தேமுதிக சார்பாக தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அரசியல் பார்வையாளர்கள் கூறிவந்தனர். ஆனால் அது பொய்த்தது.

தொகுதி பங்கீடு எட்டப்படாததால் தே.மு.தி.க சார்பாக யாரும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

மோதியை வரவேற்று தே.மு.தி.க சார்பாக வைக்கப்பட்டிருந்த பதாகைகளும் அகற்றப்பட்டன.

துரைமுருகனுடன் சந்திப்பு

இந்தச் சூழலில் நேற்று மதியம் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்திக்க தே.மு.தி.க நிர்வாகிகள் அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் சென்றது மேலும் குழப்பத்தை விளைவித்தது.

அவர்கள் திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக துரைமுருகன் கூறினார்.

துரைமுருகன், "'தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் கூட்டணியில் வருவது குறித்துதான் பேசினர். எங்களுக்கும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. இனி கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டேன்," என்றார்.

இப்படியான சூழலில் துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகதான் சந்தித்தோம் என்று தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :