திருவண்ணாமலை மக்களவை தொகுதி: திமுக-வுக்கு முதல் எம்.பி.யை தந்த தேர்தல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption திருவண்ணாமலை

(வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை)

பெரும்பாலும் விவசாயத்தை தொழிலாக கொண்ட ஊரகப் பகுதிகள் அதிகம் உள்ள தொகுதி திருவண்ணாமலை.

ஆனால், திருவண்ணாமலை என்று சொன்னாலே, இந்த நகரின் மையத்தில் அமர்ந்திருக்கும் அழகிய மலையும், அதை ஒட்டி அடிவாரத்தில் உள்ள 9 உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட பழமையான அண்ணாமலையார் கோயிலும், ஆண்டுக்கொரு முறை இந்த மலையின் உச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை தீபமும் நினைவில் வந்துபோகும்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை ஒட்டி லட்சக் கணக்கில் மலைசுற்றுவதற்கு யாத்ரீகர்கள் வந்துபோவது இந்த ஊரில் நடக்கும் மிக முக்கியமான நடவடிக்கை.

தொகுதியில் மிகப்பெரும் மக்கள் தொகையையும், வாக்காளர் எண்ணிக்கையும் கொண்ட திருவண்ணாமலை நகரப்பகுதியின் முக்கியத் தொழில்கள் இயல்பிலேயே யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் சார்ந்தவை.

வேளாண் நெருக்கடி

இத் தொகுதியில் பாயும் ஆறுகளில் தென் பெண்ணையும் அதன் குறுக்கே கட்டப்பட்ட சாத்தனூர் அணையும், செய்யாறும் அதன் குறுக்கே கட்டப்பட்ட குப்பனத்தம் அணையும், ஏரிகளும் முக்கியமான இயற்கை பாசன ஆதாரங்கள். எனினும் கிணற்றுப் பாசனம் மூலமே பெருமளவில் வேளாண்மை நடக்கிறது.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் செய்யாறு நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்திருந்தாலும், 2011 முதல் பல ஆண்டுகள் தொடர்ந்து பருவமழை பொய்த்திருந்தது. கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்த மணல் கொள்ளையால் இரண்டு ஆறுகளும் ஏறத்தாழ மணல் அற்றுப்போயின. நிலத்தடி நீர் பெருமளவில் சுரண்டப்பட்டது.

இதனால் சாத்தனூர் அணை கால்வாய்ப்பாசனம் தொடர்ந்து பல ஆண்டுகள் பொய்த்துப் போனது.

பாசன சிக்கல்களாலும், நெல்லுக்கும், கரும்புக்கும் விவசாயிகள் எதிர்பார்த்த விலை உயராமல் போனதாலும், மாணாவாரி மணிலா (நிலக்கடலை) சாகுபடியின் தொடர் நசிவினாலும், கிராமங்களின் ஆதாரமான வேளாண் பொருளாதாரம் நிலை குலைந்துபோயுள்ளது.

தோட்டப்பயிர்கள் மூலம் ஓரளவு இந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டெழ விவசாயிகள் முயற்சி செய்கின்றனர். உழவர் சந்தை போன்ற அரசு முயற்சிகள் உதவுகின்றன.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption சாத்தனூர் அணை

வருவாயில் மணம் வீசும் பூக்கள்: இத் தொகுதியில் செய்யப்படும் வெற்றிகரமான தோட்டப்பயிர்களில் முக்கியமானது பூக்கள். தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சம்பங்கி, சாமந்தி, முல்லை, மல்லிகை போன்ற மலர்களை வணிக ரீதியில் அனுப்புவது திருவண்ணாமலை பகுதியில் உள்ள பூந்தோட்டங்களே.

தோட்டப்பயிர்கள் நம்பிக்கை கொடுத்தாலும், முக்கிய உணவு மற்றும் பணப் பயிர்களின் சாகுபடியில் ஏற்பட்ட நெருக்கடியை இவற்றால் ஈடுகட்ட முடியவில்லை. இதனால், விவசாயத் தொழிலாளர்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து பெங்களூரூ, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும் வேறு பல பகுதிகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.

இது பெரிதும் வேளாண்மை சார்ந்த பகுதியாக இருந்தபோதும், வறட்சி நிலவிய ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களுக்கு தரப்பட்டதைப் போன்ற இழப்பீட்டுத் திட்டங்கள் இந்தத் தொகுதியின் விவசாயிகளுக்குத் தரப்படவில்லை.

வறுமை

தலா நபர் வருவாயில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இத்தொகுதியில் வறுமை முக்கிய சிக்கல்.

2011-12-ம் ஆண்டு நிலவரப்படி தலா நபர் வருமானத்தில் 32 மாவட்டங்களில் திருவண்ணைாமலை மாவட்டம் 26-வது இடத்தில் இருப்பதை 2017-ம் ஆண்டின் தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை காட்டுகிறது. இதிலும், வளமான ஆரணி, செய்யாறு பகுதிகள் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் இடம் பெறவில்லை. வேலூர் மாவட்டத்திலும் தொழில் வளம் இல்லாத திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்றப் பிரிவுகளே திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இதே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, தமிழ்நாட்டிலேயே நகர்ப்புற வறுமைப் பட்டியலில் 20.5 சதவீத ஏழைகளுடன் விழுப்புரத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருப்பது திருவண்ணாமலை மாவட்டம். திருவண்ணாமலை இத் தொகுதியின் கணிசமான வாக்காளர்களைக் கொண்டுள்ள நகரப்பகுதி.

ஊரக ஏழைகள் திருவண்ணாமலை (16.3 சதவீதம்), வேலூர் (24.1 சதவீதம்) மாவட்டங்களில் கணிசமான அளவில் இருந்தாலும், மாநிலத்தின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது மிக மோசமான நிலையில் இல்லை.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி இரண்டாமிடம் பெற்றவர் கட்சி
1957 இரா.தர்மலிங்கம் திமுக ஜி.நீலகண்டன் காங்கிரஸ்
1962 இதர்மலிங்கம் திமுக ஜி.நீலகண்டன் காங்கிரஸ்
2009 த.வேணுகோபால் திமுக ஜெ.குரு பாமக
2014 ஆர்.வனரோஜா அதிமுக சி.என்.அண்ணாதுரை* திமுக

*முன்னாள் முதல்வர் அல்ல.

புலம் பெயரும் தொழிலாளர்களின் வருமானம் ஊரக ஏழ்மையில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். எனினும் பொதுவில் பெரும் தொழில் நிறுவனங்களோ, தொழில்களோ இல்லாத, தமிழகத்தின் வறிய தொகுதிகளில் ஒன்று திருவண்ணாமலை.

போக்குவரத்து

சென்னை, பெங்களூருக்கு மிக நெருக்கமாக இந்த தொகுதி அமைந்திருந்தாலும், இங்கு நிலவும் வறுமைக்கான காரணிகளில் முக்கியமானது போக்குவரத்து வசதியில் நிலவும் குறைபாடு. காட்பாடியையும், விழுப்புரத்தையும் இணைக்கும் ஒற்றை ரயில்பாதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அகலப்பாதையாக மாற்றும்பணி வேகமாக நடந்துமுடிந்து பாதை போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்மயமாக்கமும் செய்யப்பட்டது. ஆனால், சென்னைக்கு இங்கிருந்து நேரடி ரயில் வசதி செய்து தரப்படவில்லை. பல அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த சாத்தியமான கோரிக்கைக்கு ரயில்வே அசைந்தும் கொடுக்கவில்லை.

அது தவிர, ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தில் இரண்டு புதிய ரயில் பாதைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பணிகளும் தொடங்கின. ஒன்று திண்டிவனம்-நகரி பாதை, மற்றொன்று, திண்டிவனம்-திருவண்ணாமலை பாதை. சில இடங்களில் பாலங்களும் கட்டப்பட்டன. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக இந்த திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதி மிகக்குறைவாக இருப்பதால் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணிகளே முடியவில்லை.

அகலப்பாதை பணிகள் முடிந்து போக்கு வரத்து தொடங்கியிருந்தாலும், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சரக்கு சேவையைத் தொடங்கவேண்டும் என்ற சாத்தியமான, எளிய கோரிக்கைகூட பல ஆண்டுகளாக காத்திருக்கவேண்டியிருந்தது. சில மாதங்கள் முன்பு இந்த சரக்கு சேவைக்கு தென்னக ரயில்வே அனுமதி அளித்திருந்தாலும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாததால், வருகிற சரக்குகள் மட்டுமே இங்கு டெலிவரி செய்யப்படுகின்றன. சரக்குகளை வெளியூருக்கு அனுப்பும் சேவை இன்னும் தொடங்கவில்லை.

இதுதவிர, சென்னை மற்றும் பெங்களூர் இரண்டு நகரங்களுக்கும் செல்வதற்கான முக்கிய நெடுஞ்சாலையான தேசிய நெடுஞ்சாலை 66-ஐ (புதுவை-கிருஷ்ணகிரி இடையே) அகலப்படுத்தி மேம்படுத்தும் திட்டம் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், புதுவையில் இருந்து திண்டிவனம் வரையில் பணிகள் முடிந்த நிலையில், 2011 ஆண்டு முதல் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு தொடர் புகார்கள் காரணமாக, மீண்டும் தொடங்கி ஆமை வேகத்தில் நகர்கிறது. இதனால், வழக்கமான பராமரிப்புப் பணிகளும் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது.

எனவே, பெருநகரங்களைத் தொடர்புகொள்வதற்கான ரயில் - சாலை இரண்டு மார்க்கங்களிலும் நீடிக்கும் சிக்கல்களைத் தீர்ப்பது இந்தத் தொகுதி மக்களின் முக்கிய தேர்தல் அபிலாஷையாக இருக்கும்.

சுற்றுலா - வாய்ப்புகளும், சவால்களும்

ஒவ்வொரு பௌர்ணமிக்கும், கார்த்திகை தீபத்துக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து மலையைச் சுற்றி 14 கி.மீ. நடக்கிறார்கள். இந்த மலைசுற்றும் பாதையின் இயற்கையான ஏகாந்த எழில் இந்த நகரிலேயே வாழ்ந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை வெளிநாட்டை, வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல பக்தர்களுக்கும் ஏற்படுத்தின.

இந்த வெளிநாட்டு, வெளி மாநில பக்தர்கள் மற்றும் கிரிவல பக்தர்கள் குடியிருக்க வீடுகள், விடுதிகள், அவர்களுக்கான கடைகள், விடுதிகள் திருவண்ணாமலையில் தோன்றின. ஆயிரக் கணக்கில் ஆட்டோக்கள் பெருகின. ஆனால், இந்த சுற்றுலா வருமானத்தின் ஆதாரமாக இருக்கும் திருவண்ணாமலையின் ஏகாந்த இயற்கை எழில், கண்மூடித் தனமான கட்டுமானங்கள், சாலை வளர்ச்சித் திட்டங்களால் சீர்கெட்டு, சுற்றுலாவின் நீடித்த வளர்ச்சி சவாலுக்கு உள்ளாகிறது. மலையோரக் காடுகள், குளங்களைப் பாதிக்கும் வகையிலான கிரிவலப்பாதை அகலப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டமும், சட்டப் போராட்டமும் நடந்தன. இப்பிரச்சனையும் தேர்தலைப் பாதிக்கும்.

திமுக-வின் முதல் எம்.பி.யை தந்த தொகுதி

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், திருவண்ணாமலை செங்கம், திருப்பத்தூர், ஜோலார்ப்பேட்டை, கலசப்பாக்கம் மற்றும் கீழ்ப்பெண்ணாத்தூர் சட்டமன்றப் பிரிவுகள் அடங்கியுள்ளன.

தலித், வன்னியர்கள், முதலியார்கள், யாதவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இத்தொகுதியில் உள்ளனர். 1957, 1962 தேர்தல்களில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி இருந்தது. பிறகு, இத்தொகுதி ஒழிக்கப்பட்டது. அப்போது திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் முதலில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியிலும், பிறகு திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியிலும் இடம் பெற்றிருந்தன.

Image caption ஜெ.குரு - த.வேணுகோபால்

தொகுதி மறுவரையறையில் திருவண்ணாமலை தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக நடந்த 2009 மக்களவைத் தேர்தலில் வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமக-வின் முக்கியத் தலைவராகவும் விளங்கிய ஜெ.குரு-வும், திமுக-வில் திருப்பத்தூர் மக்களவை உறுப்பினராக நான்கு முறை இருந்தவரான த.வேணுகோபாலும் போட்டியிட்டனர். தமிழக அரசியலில் கூர்ந்து கவனிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 1.48 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெ.குரு படுதோல்வி அடைந்தார்.

இதற்கு முன்பே இத்தொகுதிக்கு ஓர் அரசியல் முக்கியத்துவம் உண்டு. 1949-ல் தொடங்கப்பட்ட திமுக முதல் முதலாக 1957 பொதுத் தேர்தலில் பங்கேற்றபோது, இரண்டு மக்களவைத் தொகுதிகளை வென்றது.

படத்தின் காப்புரிமை Loksabha
Image caption இரா.தர்மலிங்கம்

திருவண்ணாமலையில் இரா.தர்மலிங்கமும், நாமக்கல்லில் ஈ.வெ.கி.சம்பத்தும் வெற்றி பெற்றனர். அப்போது திமுக அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை என்பதால், சுயேச்சை சின்னத்தில் நின்றே இவர்கள் வெற்றி பெற்றனர். பிறகு சம்பத் திமுக-வை விட்டு வெளியேறிவிட்டார். எனவே, கட்சியின் முதல் எம்.பி. என்னும் பெருமையுடன் திமுக-வில் பார்க்கப்பட்ட தலைவர் தர்மலிங்கமே.

இதே தேர்தலில் திமுக வென்ற 15 சட்டமன்றத் தொகுதிகளிலும் திருவண்ணாமலை இடம் பெற்றது. பின்னாளில் அமைச்சராகவும், முக்கியத் தலைவராகவும் உருவெடுத்த திமுக-வின் ப.உ.சண்முகம் அப்போது திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதில் வென்றார்.

தற்போது தொகுதி எம்.பி.யாக இருப்பவர் அதிமுக-வின் ஆர்.வனரோஜா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :