சர்வதேச மகளிர் தினம்: இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறைந்து விட்டனவா? #RealityCheck

டெல்லியில் நடந்த பேரணி படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி ஆறு ஆண்டுகளாகிவிட்டது. அவரது மறைவுக்கு பின்னர் இந்தியாவின் பெண்கள் நிலை எப்படியிருக்கிறது?

2012-ல் டெல்லியில் நடந்த அந்நிகழ்வால் மக்கள் மத்தியில் கோப உணர்வு அதிகரித்து போராட்டங்கள் வெடித்தன. இதனால் பாலியல் வன்முறை என்பது இந்தியாவில் அரசியல் ரீதியாக முக்கிய பேசுபொருளானது.

இரு ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு பாலியல் வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்களை முன்வைத்தது. ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்தியாவின் முன்பைவிட பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறியது.

தற்போது பாலியல் தாக்குதல் குறித்து பெண்கள் முன்வந்து புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர். சில பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு மிகக்கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பெண்கள் இன்னமும் பாலியல் தாக்குதல் குறித்த விவகாரங்களில் புகார் அளிப்பதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்கிறார்கள்.

புகார் அளிப்பது அதிகரித்துள்ளதா?

இந்தியாவின் தேசிய குற்ற ஆவண பதிவகத்தின் அறிக்கையின்படி 2016 வரை கிடைத்துள்ள தரவுகளை பார்க்கும்போது டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு பிறகு பாலியல் வல்லுறவு குறித்த புகார்கள் காவல்துறைக்கு அதிகளவு வந்திருப்பது தெரியவருகிறது.

விழிப்புணர்வு அதிகரித்திருப்பது இதற்கு முக்கிய காரணம். மேலும் பெண் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையங்களில் நியமிக்கப்படுவது அதிகரித்துள்ளதும் மற்றொரு முக்கிய காரணம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மேலும் 2012-க்கு பிறகு பொதுமக்கள் போராட்டங்களால் தரப்பட்ட அழுத்தங்களும் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வழிவகுத்தன.

பாலியல் வல்லுறவு என்பதற்கான விளக்கம் தற்போது மாறியுள்ளது. உடலின் எந்த பகுதியிலும் பாலியல் அத்துமீறல் செயல்களில் ஈடுபவதும் 'பாலியல் வல்லுறவு' எனும் பதத்துக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விளக்கங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

பெண்களை பின்தொடர்ந்து தொந்தரவு தருதல், மற்றவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது / பாலியல் இன்பம் அடைவது / நிர்வாணமாக இருப்பது உள்ளிட்டவற்றை பார்த்து பாலியல் இன்பம் கொள்ளுதல் மற்றும் அமில வீச்சு தாக்குதலில் ஈடுபடுவது உள்ளிட்டவை 2013-ல் பிரத்யேக கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

கடந்த வருடம், இந்தியாவில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க சட்ட ரீதியான வழிவகை செய்யப்பட்டது. மேலும் 16 வயதுக்குட்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினால் விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனையும் உயர்த்தப்பட்டது.

இருப்பினும், இந்தியாவில் பாலியல் தாக்குதல் விவகாரங்களில் குறைவாக பதிவு செய்யப்படுகிறது என்பதற்கும் சில ஆதாரங்கள் உண்டு. ஒரு நாளிதழ் 2015-2016 காலகட்டத்தில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட பெண்கள் மீதான குற்ற வழக்குகளையும், தேசிய அளவிலான குடும்ப நலன் குறித்த ஆய்வு முடிவுகளையும் ஆராய்ந்தது.

தேசிய குடும்ப நல ஆய்வில் பெண்களிடம் பாலியல் வல்லுறவு அனுபவங்கள் பற்றியும் கேட்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பாலியல் வல்லுறவு குறித்து பதிவு செய்யப்படாதவற்றில் 99% நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட பெண்களின் கணவர்களே காரணம் என்பதும் தெரியவந்தது.

சட்ட அமைப்புகளில் உள்ள பிரச்சனைகள்

பாலியல் குற்றங்களில் பெண்கள் பாதிப்புள்ளாகும்போது அப்பெண்ணுக்கு சமுகம் களங்கம் கற்பிக்கிறது.

மனித உரிமை கண்காணிப்பக அறிக்கையொன்று மருத்துவமனைகள், காவல் நிலையங்களில் பெண்கள் இன்னமும் அவமானங்களை சந்திப்பதாகவும் மேலும் நல்ல சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை என்கிறது.

கடந்த 2017-ல் இந்திய நீதிமன்றம் ஒரு வழக்கு தொடர்பாக அவப்பெயரை சம்பாதித்தது. பாலியல் வல்லுறவிலிருந்து மீண்ட பெண்ணை ''பாலியல் ஒழுக்கமற்றவர்'' என நீதிமன்றம் கூறியது. அவர் மது அருந்தியது மற்றும் அவரது அறையில் ஆணுறை இருந்தது ஆகியவற்றை வைத்து விமர்சித்தது.

சரி, பாலியல் வல்லுறவு குறித்து புகார் கொடுத்தபின்னர் பெண்களுக்கு நீதி கிடைத்துவிடுகிறதா?

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2009 - 2014 காலகட்டத்தில் 24 - 28% பாலியல் வல்லுறவு புகார்களில் சம்பந்தப்பட்ட ஆண் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். பாஜக ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் இந்த சதவீதத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை.

2018-ல் வெளியான ஓர் ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் காவல்துறையிடம் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவு குற்ற வழக்குகளில் 12-20% வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர் அனிதா ராஜ் பிபிசியிடம் பேசியபோது, ''பாலியல் வல்லுறவு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும் வீதம் குறைவது கவலைக்குரியது,'' எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, கிடப்பிலிருக்கும் பாலியல் வல்லுறவு குற்ற வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க இந்திய அரசு 1000 விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதாக கூறியிருந்தது.

ஒப்பிடுவது உதவுமா?

கடந்த ஆண்டு தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் ஓர் ஆய்வு நடத்தியது. அதன்படி ஆஃப்கானிஸ்தான், சிரியா, சௌதி அரேபியாவைவிட உலகிலேயே இந்தியாதான் பெண்களுக்கு மோசமான நாடு எனக்கூறியிருந்தது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்வினைகள் எழுந்தன. அரசும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இந்த ஆய்வை நிராகரித்தார்கள்.

உலகம் முழுவதும் பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்து 500 நிபுணர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் அந்த ஆய்வின் முடிவு அமைந்திருந்தது. இந்த ஆய்வின் ஆராய்ச்சி முறையை இந்தியாவிலுள்ள சில நிபுணர்கள் கேள்விக்குட்படுத்தினார்கள்.

எதாவது தரவு அறிக்கையின் அடிப்படையிலோ அல்லது நேரடியாக கள அனுபவ ஆய்வுகளின் அடிப்படையிலோ அந்த ஆய்வு இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது இந்தியாவில் பெண்கள் புகார் அளிப்பதற்கான சூழல்கள் எளிதாக்கப்பட்டுள்ளன எனவேதான் அதிகளவில் பாலியல் குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆயிரத்திற்கு 0.03 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறார்கள். இந்த விகிதம் அமெரிக்காவில் ஆயிரத்திற்கு 1.2 பெண்களாக உள்ளது என இந்திய அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் 2016 வரையில் பதிவான பாலியல் வல்லுறவு வழக்குகள் அடிப்படையிலான விகிதத்தை இந்தியா மேற்கோள் காட்டுகிறது.

ஆனால் அமெரிக்காவில் 12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மீதான பாலியல் தாக்குதல் அல்லது பாலியல் வல்லுறவு குறித்த தேசிய குற்ற ஆய்வு அறிக்கையின்படியே ஆயிரத்திற்கு 1.2 பெண்கள் எனும் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் சட்டப்படி பாலியல் வல்லுறவு என்பதற்கான விளக்கத்தில் இந்தியாவைவிட அமெரிக்காவில் பல்வேறு வகை குற்றங்களும் அடங்கும்.

அங்கே பாலியல் வல்லுறவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே 'பாதிக்கப்பட்டவர்' எனும் வகைக்குள் வரும். திருமண உறவில் நடக்கும் பாலியல் வல்லுறவு என்பதும் இதில் அடங்கும்.

ஆனால் இந்தியாவில் பாலியல் வல்லுறவில் பெண்கள் மட்டுமே சட்டப்படி 'பாதிக்கப்பட்டவர்' வகையில் வருவர். 16 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவரை அவரது கணவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினால் அது குற்றமாகக் கருதப்படுவதில்லை. இந்தியாவில் திருமண உறவில் நடக்கும் பாலியல் வல்லுறவு என்பது வரும் மக்களவைத் தேர்தலில் சூடான விவாத பொருளில் ஒன்றாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :