திமுக-வை கடுமையாக விமர்சித்த பிரேமலதா: "தனித்துப் போட்டியிடத் தயங்கவில்லை"

பிரேமலதா படத்தின் காப்புரிமை HTTP://DMDKPARTY.COM/

அதிமுக அணியில் தாங்கள் இடம் பெறுவது உறுதியாகிவிட்டதாக கூறிவந்த தேமுதிக, தாங்கள் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையைப் பற்றி வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா கூட்டணி பற்றிய முறையான அறிவிப்பை இன்னும் இரண்டு நாளில் விஜயகாந்த் வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.

மேலும், தம்மை சந்தித்துப் பேசுவதற்கு தேமுதிக நிர்வாகிகள் வந்ததை துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு என்று கூறி, துரைமுருகனையும், திமுக-வையும் கடுமையான சொற்களால் சாடினார் பிரேமலதா.

திமுக தங்களை அரசியலில் பழிவாங்க நினைப்பதாகவும் கூறினார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலமில்லாமல் இருந்தபோது அவரை சந்திக்க வருவதற்கு விஜயகாந்த் அனுமதி கேட்டபோது ஸ்டாலின் அனுமதிக்கவில்லை; ஆனால், உடல் நலமில்லாத விஜயகாந்தை சந்திப்பதற்கு ஸ்டாலின் அனுமதி கேட்டபோது தாங்கள் அனுமதித்ததாக கூறிய பிரேமலதா, அந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்தபோது பத்திரிகையாளர்களிடம் விஜயகாந்த் உடல் நலனை விசாரிக்க வந்ததாகவே ஸ்டாலின் கூறினார் என்றார்.

ஆனால், அதுபற்றி ஊடகங்களிடம் தாம் பேசியபோது அரசியலும் பேசப்பட்டது என்று மட்டுமே கூறியதாகவும், வேறெதுவும் பேசவில்லை என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

துரைமுருகன் வீட்டுக்குள் தேமுதிக நிர்வாகிகள் சென்றபோது இல்லாத ஊடகங்கள், வெளியே வருவதற்குள் வரவழைக்கப்பட்டது எப்படி என்று கேட்டார் பிரேமலதா.

பத்திரிகையாளர்களிடம் பேசும்போது தொடர்ந்து பிரேமலதா ஒருமையில் விளித்ததால், அந்தக் கூட்டத்திலேயே ஆட்சேபனைகள் எழுந்தன.

ஜெயலலிதாவை எதிர்த்து சட்டமன்றத்திலேயே பேசியவர் விஜயகாந்த் என்றும் ஒரு கட்டத்தில் கூறினார் பிரேமலதா.

சட்டமன்ற இடைத் தேர்தலும் வருவதாகவும், இந்த ஆட்சி தொடருமா என்பது அப்போதுதான் தெரியும் என்பதாகவும் கூறிய பிரேமலதா, பல விஷயங்கள் இருப்பதால் ஊடகத்தின் அவசரத்துக்கு பதில் சொல்ல முடியாது, முடிவெடுத்துதான் பேச முடியும் என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்