நீரவ் மோதியின் சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு

நீரவ் மோதி படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption நீரவ் மோதி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: நீரவ் மோதியின் சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு

மகாராஷ்டிராவிலுள்ள நீரவ் மோதியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தகர்க்கப்பட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"பிரபல வைர வியாபாரி நீரவ் மோதியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.

மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் கடற்கரையை ஒட்டி 33,000 சதுர அடியில் கட்டிய பங்களா, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் பங்களாவை இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து பங்களாவை நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் வெடிவைத்து தகர்த்துள்ளது.

வலிமையாக கட்டமைக்கப்பட்ட பங்களாவை அதிநவீன இயந்திரங்களை வைத்து இடித்தாலும் மாதங்கள் எடுக்கும், எனவே வேலையை துரிதமாக முடிக்கவே உள்வெடிப்புமுறையை பயன்படுத்தி கட்டிடத்தை தகர்த்தோம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், லண்டன் நகரில் நீரவ் மோதி இருப்பதாகவும், வீதியில் நடந்துக்கொண்டிருந்த அவரை நேர்காணல் செய்யபோது, அவர் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்றும் பிரிட்டனிலுள்ள டெலிகிராப் செய்தித்தாளின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ்: "நடந்துவரும் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டிய மோதி"

படத்தின் காப்புரிமை SUHAIMI ABDULLAH

தமிழகத்தில் ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடந்துவரும் நான்குவழி சாலை பணிகளுக்கு, பிரதமர் அடிக்கல் நாட்டியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 6-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, முன்னதாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதில் ஒரு பகுதியாக, '45-சி' தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு பிரிவு, சேத்தியாத்தோப்பு - சோழத்தரம் பிரிவு, சோழத்தரம்- தஞ்சை பிரிவு ஆகியவற்றை ரூ.3,517 கோடியில் நான்குவழிச் சாலையாக மாற்றும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், இந்த சாலைப் பணிகள் 2018 பிப்ரவரி மாதமே தொடங்கப்பட்டு, 10 சதவீதப் பணிகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரையிலான 165 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை நான்குவழி சாலையாக 2006-ல் தரம் உயர்த்தப்பட்டு, 2010-ல் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. 2015-ல் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் அமைக்க ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டது. 2020-க்குள் பணியை முடித்து 2021-ல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்'' என்று கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "வரும் கல்வியாண்டிலிருந்து 3, 4, 5, 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்"

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு வரும் 2020-2021-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் கல்வியாண்டிலேயே (2019-2020) அதை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"2018-19-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கும், 2019-2020- ஆம் கல்வியாண்டில் 2, 7, 10, 12 வகுப்புகளுக்கும், 2020-2021- ஆம் கல்வியாண்டில் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி 2018-2019 கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து 2, 7, 10, 12 வகுப்புகளுக்கான பாடநூல் தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ளது. இதையடுத்து 2020-2021- ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான முதல் பருவத்துக்கான பாடநூல்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க இயலும்.

இதன் மூலம் வரும் கல்வியாண்டிலேயே ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து - "முடிவுக்கு வருகிறதா தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை?"

படத்தின் காப்புரிமை DANIEL KALISZ

ஆஸ்திரேலியா அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மகேந்திர சிங் தோனிக்கு 'ஓய்வு' அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலியாவுடனான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் நேற்றைய ஆட்டத்திற்கு பின்னர் இந்திய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், நேற்று ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கிடையேயான போட்டியே இந்திய மண்ணில் மகேந்திர சிங் தோனி விளையாடிய கடைசி போட்டியாக இருக்குமென்று கருதப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்