தேமுதிகவுடன் அமையவுள்ள கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை: முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி படத்தின் காப்புரிமை ARUN KARTHICK

தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி, மீண்டும் பிரதமராக வந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் அதிமுக பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அமைத்துள்ளது என தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக கூட்டணியில் இதுவரை பாமக, பாஜக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன, மேலும் புதிதாக கட்சிகள் கூட்டணியில் இணையவுள்ளன என்று குறிப்பிட்டார்.

''அதிமுக சிறப்பான முறையில் கூட்டணியை அமைத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதிமுக பாஜகவுடன் கூட்டணியை அமைத்துள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டின் பிரதமராக இருப்பவர் தகுதியான, அனுபவம் மிக்கவராக இருக்கவேண்டும் என்பது முக்கியம். மோதி மீண்டும் பிரதமராக வந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்,'' என்றார் பழனிசாமி.

தேமுதிக உறுப்பினர்கள் திமுக தலைவர்களை சந்தித்தது மற்றும் தேமுதிகவுடன் ஏற்படும் கூட்டணி குறித்து தெளிவான முடிவுகள் இதுவரை வெளியாகாதது ஏன் என செய்தியாளர்கள் கேட்டபோது, தேமுதிகவுடன் அமையவுள்ள கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என்று தெரிவித்தார்.

"ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. தேமுதிக ஆலோசித்து முடிவு எடுக்கும். ஒரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்போது விமர்சனங்கள் வரும். ஆனால் கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படும். திமுகவை வைகோ கடுமையாக விமர்சித்தார். ஆனால் தற்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ளார்,'' என்றார் பழனிசாமி.

அதிமுகவின் உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.சி.பழனிசாமி கட்சியில் சேர்ந்துவிட்டதாக அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில்தான் கே.சி.பழனிசாமி தன்னை சந்தித்தாகவும், அவர் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று அதிமுக சார்பில் யாரும் கூறவில்லை என்றார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு நபர்களின் விடுதலை கோரி சென்னையில் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக ஆட்சியிலிருந்தபோது, ஏழு பேரின் விடுதலைக்காக எதையும் செய்யவில்லை என்றார். ''அதிமுக ஆட்சியில்தான் பேரறிவாளனின் தாயார் அளித்த மனுவை பரிசீலித்து பரோல் அளிக்கப்பட்டது. பரோல் காலம் நீடிப்பு செய்யப்பட்டது. மறைந்த முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி என்ன செய்தார் என தற்போது பேச விரும்பவில்லை. அவர் மறைந்துவிட்டார் என்பதால், அவரை பற்றி பேச நான் விரும்பவில்லை. சட்டமன்ற ஆவணத்தில் குறிப்புக்கள் உள்ளன,'' என்றார் முதல்வர் பழனிசாமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :