மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார்? - ராகுல் காந்தி கேள்வி

மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார்? படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார்?

புல்வாமா தாக்குதலுக்காக பிரதமர் நரேந்திர மோதி, ஜெய்ஷ்-இ-முகமது மசூத் அசாரை குற்றம்சாட்டினார். 1999-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் தான் மசூத் அசார் இந்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ராணுவ விமானத்தில் ஆப்கானிஸ்தானின் கந்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதைப்பற்றி பிரதமர் மோதி ஏன் பேசுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளதாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

"40 மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான நபரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது பாரதிய ஜனதாதான் என்பதை ஏன் நீங்கள் பேசுவதில்லை? நாங்கள் உங்களைப்போல இல்லை. நாங்கள் பயங்கரவாதத்துக்கு தலைவணங்கவில்லை. மசூத் அசாரை யார் விடுவித்தது என்பதை இந்திய மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள்." இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

1999-ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பேயி ஆட்சியின்போது கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை மீட்க மசூத் அசார் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Image caption அபிநந்தன் வர்த்தமான்

அரசியல் கட்சிகளின் விளம்பரங்களில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் தாக்குதல் நடந்தபோது, இந்திய விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அதன் விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுடன் அவரது படம் அடங்கிய விளம்பரப் பதாகைகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரடப்பது.

இதைக் கவனத்தில் கொண்டே தேர்தல் ஆணையம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக தினமணி செய்தி தெரிவிக்கிறது.

இந்து தமிழ் - "இந்திய அணி மீது பாகிஸ்தான் பாய்ச்சல்"

படத்தின் காப்புரிமை Twitter

இந்திய வீரர்கள் என்ன கிரிக்கெட்டா விளையாடுகிறார்கள், ராணுவ தொப்பி அணிந்து விளையாடுவதை ஐசிசி பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அமைச்சர்கள் காட்டமாகத் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியினர் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பி அணிந்து விளையாடினர். மேலும், இந்த ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கவும் கோலி தலைமையிலான அணியினர் முடிவு செய்திருந்தனர்.

பாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரோஷி ட்விட்டரில் கூறுகையில், " இந்திய கிரிக்கெட் தங்களின் அணிக்குரிய தொப்பியை அணிந்து விளையாடுவதற்கு பதிலாக இந்திய ராணுவத்தின் தொப்பி அணிந்து விளையாடியதை இந்த உலகமே பார்த்தது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) பார்க்கவில்லையா. இந்த விஷயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்கும் முன், ஐசிசி கவனித்து, இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐசிசியின் பொறுப்பாகும் " எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களை இந்திய அணி நிறுத்திக்கொள்ளாவிட்டால், உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும் என்று பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி ட்வி்ட்டரில் தெரிவித்துள்ளார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "நீலகிரி வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு"

நீலகிரி யானைகள் வனப்பாதுகாப்பு பகுதியில் 821 கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீலகிரி யானைகள் வனப்பாதுகாப்பு பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஏ.டி.என். ராவ் என்பவரை அமைத்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது அறிக்கையை தாக்கல் செய்த ராவ், சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ள 821 கட்டடங்களை சீல் வைப்பதற்கும், இடிப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்றும், மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 186 வீடுகளை மறுகட்டமைப்பு செய்ய உத்தரவிட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :