ராகுலை முந்தி செல்லும் மோதி - எவ்வாறு?

மோதி படத்தின் காப்புரிமை Bjp

ஆட்சி மாற்றத்திற்கு என ஒரு பிரத்யேக மணம் இருக்கிறது. இந்த அரசியல் ரீதியிலான மணமானது முதலில் காற்று வீசுவதால் எழும் மண்ணின் மணத்தைப் போன்று சுகந்தமாக, இயல்பாகத் தொடங்கும். பிறகு, தெருமுனைகள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள், சாலையோர பேருந்து நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் இந்த மணம் உணரப்படும்.

பிறகு சில நாட்களில் சற்றே உத்வேகம் பெற்று, கடுமையான மணமாக மூக்கைத் துளைத்து, போதும் போதும் என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு அலுப்பு தட்டச் செய்யும். களத்தில் இருப்பவர்களோ சீட்டு விளையாடுவது போல, யார் வெற்றி பெறுவார்கள் என்பது கடைசி நிமிடம் வரை மர்மமாக இருக்கும்.

வெல்வார்கள் என்று நினைப்பவர்கள் மண்ணைக் கவ்வுவதும், வீழ்வார்கள் என்று நினைப்பவர்கள் நூலிழையில் ஜெயிப்பதோ, அல்லது எதிர்பாராத மாபெரும் வெற்றி பெறுவதும் கணிக்க முடியாதது.

1976ஆம் ஆண்டு அரசியல் நிலவரத்தையும், தேர்தலையும் நினைவில் வைத்திருப்பவர்கள் நான் சொல்லும் இந்த திரில்லான மணத்தை உணர்ந்திருக்கலாம்.

19 மாத காலம் தொடர்ந்த எமர்ஜென்சியில் நாட்டையே சர்வாதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்திரா காந்தி, வெற்றி தனதே என்று உறுதியாக காத்திருந்தபோது, அவரை வீழ்த்திக் காட்டியது மக்களின் வாக்குரிமை என்ற அஸ்திரம்.

படத்தின் காப்புரிமை PHOTO DIVISON

ஆனால் 1976ஆம் ஆண்டு நிகழ்வுகள் பற்றி தெரியாதவர்கள், 1987-88 கால கட்டத்தை நினைவுபடுத்தி பார்க்க முடிந்தால் நான் கூறும் தேர்தல் மணத்தை இப்போதும் மனதார உணரலாம். ராஜீவ் காந்தி 42 வயதில் 499க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று பிரதமரானார். ஆனால், 1989க்கு பிறகு இதுவரை அரசியல் களத்தில் காங்கிரஸ் வலுப்படவே இல்லை.

1989ஆம் ஆண்டு விவரம் அறியாத சிறுவர்களாக இருந்திருந்தாலும் அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருந்தாலும், நான் கூறும் தேர்தல் அரசியலின் மணத்தை 2013ஆம் ஆண்டில் உணர்ந்திருக்கலாம். மோதிக்கு அருகில் கூட வேறெந்த அரசியல் கட்சிகளும் நெருங்க முடியாத சூழலை அந்த அரசியல் மணம் ஏற்படுத்தியது.

குடத்தில் ஏற்படும் ஒரு துளையை அடைப்பதற்குள் மற்றொரு இடத்தில் துளை ஏற்பட்டு நீர் வெளியேறுவதை நிறுத்த முடியாமல் தவிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இருகிறது. ஒரு பிரச்சனையை முடிக்க நினைப்பதற்குள்ளாகவே, மற்றொரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் ஓட்டைகளின் இடம் மாறிக் கொண்டே இருக்கும் நிலை எதிர்கட்சியான காங்கிரசுக்கு ஏன் ஏற்பட்டது?

நரேந்திர மோதி மற்றும் அவருடைய அரசியலால் நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியவில்லை என்ற நிலையில், ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி ஏன் தனியாக போராட வேண்டியிருக்கிறது? ரஃபேல் விவகாரத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என மம்தா ஒருமுறை கூறுகிறார் என்றால், கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று எப்போதாவது சீதாராம் யெச்சூரி சொல்கிறார். மறுபுறமோ, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு விசாரணைக்கு அவசியம் இல்லை என்று உரைக்கிறார் அகிலேஷ் யாதவ்.

படத்தின் காப்புரிமை PTI

"பாதுகாவலனே கொள்ளைக்காரன்" என்று ராகுல் காந்தி ஏன் தனியாக கூக்குரலிடுவது போல் தோன்றுகிறது? அவருடன் யாரும் இணைந்து குரல் கொடுப்பதில்லை.

உத்தரப் பிரதேசத்தில் மாயவதியும், அகிலேஷும் தங்கள் விரோதங்களை மறந்து ஒன்றாகியிருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ஷரத் யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகன் ஆகியோர் எதிர்கட்சியின் மற்றொரு தலைமையின் கீழ் ஒன்று திரள்வதாக பத்திரிகையில் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.

ஆனால், மாணவர்கள், இளைஞர்களின் குழுக்கள், வன பாதுகாப்பு அமைப்புகள், சிறுசிறு வர்த்தக சங்கங்கள் ஆகியவை 1987-88இல் ராஜீவ் காந்திக்கு எதிராக ஒன்றாக அணி திரண்டனவே அந்த ஒற்றுமை ஏன் தற்போது ஏற்படவில்லை?

படத்தின் காப்புரிமை Getty Images

தொலைகாட்சியைப் பாருங்கள் மீண்டும் ஒருமுறை 2013ஆம் ஆண்டு நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். தொலைகாட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பில் நரேந்திர மோதி இருப்பார், அல்லது அவருக்கு ஆதரவு திரட்டும் அமித் ஷா இருப்பார்.

எப்போதாவது தொலைகாட்சியில் ராகுல் காந்தி காண்பிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சியே சுரத்தில்லாமல் காணப்படும். பிரியங்கா காந்தி தேர்தல் களத்தில் இறங்குகிறார் என்று வெளியானதுமே, காங்கிரசுக்கு கைகொடுக்குப்பதற்காக அவர் இறங்கியிருக்கிறார் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

அரசியல் சூழலை மாற்றுவதற்கான துருப்புச் சீட்டை பயன்படுத்தும் நேரம் மீண்டும் வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல்களில் நரேந்திர மோதி, அமித் ஷாவின் கடும் முயற்சிகளுக்கு பிறகும் பாஜகவின் நிலைமை கேள்விக்குள்ளானது. மோதியின் இறங்குமுகம் தொடங்கிவிட்டதாக அப்போது தோன்றியது. வாக்காளர்களை கவர்வதற்காக அவரிடம் எந்த அஸ்திரமும் இல்லை என்றே தோன்றியது.

என்ன செய்வது என்று தெரியாமல் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை கையில் எடுத்து இந்துக்களின் வாக்குகளை பிரிக்க விரும்பினார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மக்களின் குரல் அவர்களுக்கு தெளிவாக மறுப்பை தெரிவித்துவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் இருந்தும் சாதகமான தீர்ப்பு வரவில்லை. அமித் ஷா என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்தார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் தன்னுடைய சாதுக்களையும் துறவிகளையும் களத்தில் இறக்கத் தயாரானது. ஆனால், வீதிகளிலும் தெருக்களிலும் கூட தேர்தல் சமயத்தில் மட்டும் ராமர் கோவில் கட்டும் விவகாரம் கையில் எடுக்கப்படுவது ஏன் என்ற விவாதங்கள் எழுந்த நிலையில், வி.எச்.பி தனது முயற்சியை கைவிட நேர்ந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

மக்களிடம் நாடகம் நடத்தாமல் தேர்தல் அரசியலில் தங்களுக்கு சாதகமான மணத்தை உருவாக்க முடியாது என்பது நரேந்திர மோதி, அமித் ஷா மற்றும் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு தெளிவாக தெரிந்து போனது.

அதற்கு பிறகு நடந்த அனைத்து சம்பவங்களிலும் எல்லா காரணிகளும் ஒன்றாகின. மூன்று மணி நேரம், ரசிகர்களை திரைப்படத்தை பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் தேர்ந்த திரைப்பட கலைஞர்களின் பாத்திரத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

புல்வாமாவில் இந்திய பாதுகாப்புப் படையின் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றது. மோதியோ, பாகிஸ்தானின் மொழியிலேயே அந்நாட்டிற்கு பதில் கொடுப்பதாக வீர வசனங்களுடன் களத்தில் இறங்கினார். இதுபோன்ற சமயத்தில் வசனம் பேசாமல், காட்சிக்கு வராமல் இருக்க முடியுமா? திரையில் கதாநாயகனின் வருகையையும், வில்லனை அவர் அடித்து விரட்டும் காட்சியையும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து நாடே காத்திருந்தது.

கதாநாயகன் திரையில் தோன்றினார். வில்லனுக்கு பலமாக குத்துவிட்டார். கைத்தட்டல்கள் பறந்தன. ரசிகர்களோ ஆச்சரியத்தில் வாய் பிளந்து காட்சிகளை ரசிக்கத் தொடங்கிவிட்டனர்.

கைதட்டல்களின் ஓசை அதிகரித்துவிட்டது. அரங்கின் ஒரு புறத்தில் இருந்து அவனை இன்னும் அடி என்று குரல் வந்தால், மற்றொரு புறம் இருந்து, உன்னை சந்திக்க சரியான ஆள் வந்துவிட்டான் வில்லனே என்று குரல் எழும்புகிறது. திரைப்படத்தில் முக்கியமான திருப்பம் வந்துவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

தொலைகாட்சி தொகுப்பாளர்களில் பலர் மோதிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கும் 'சியர் லீடர்ஸ்" ஆக மாறிவிட்டார்கள். இந்தியாவின் விமான தாக்குதலில் பாலாகோட்டில் 300 முதல் 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக முதலில் தொலைகாட்சிகள் தெரிவித்தன.

பிறகு, பாலாகோட்டில் 250 பேர் கொல்லப்பட்டார்கள் என்று அமித் ஷா கூறினார். அத்தோடு விட்டாரா? இதற்கு ஆதாரம் கேட்கும் ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும் என்றும் சீறினார்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, விவசாயிகளை புறக்கணிப்பது, அமைப்புகளிடம் பாகுபாடு, ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் குற்றச்சாட்டு என அவர்கள் மீதான அனைத்து விமர்சனங்களையும் சரி கட்டுவதற்காக தேசியவாதம், என்ற ஒற்றை உணர்வு, மணம், குணம், சுவையோடு சமூக ஊடகங்களில் பரிமாறப்படுகிறது.

இந்தத் தேர்தலில் முதன்முறையாக வாக்கு செலுத்தவிருக்கும் 18 வயது இளைஞர்களுக்கு மட்டுமல்ல, ராஜீவ் காந்தியை ஆட்சியில் இருந்து அகற்றியவர்களின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக சமூக ஊடகங்களில் பல கதைகள் உலா வருகின்றன. மிஸ்டர் க்ளீன் என்று கூறப்பட்ட ராஜீவ் காந்தி, போஃபர்ஸ் ஊழல் என்ற களங்கத்தை சுமந்தார். அது ஆட்சியில் இருந்து அவரை இறக்கியது.

படத்தின் காப்புரிமை Getty Images

பீரங்கி ஒப்பந்தத்தில் பணம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்ததுமே, அவருக்கு எதிராக தேசிய அளவில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தப்பட்டது. இடதுசாரிகளும், வலதுசாரிகளும் என எதிரெதிர் அணியினரும் ஒன்று திரண்டு டெல்லியில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய வித்யார்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரிகள், என அனைத்து தலைவர்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது. பச்சைக்கொடி பிடித்த சமாஜ்வாதி, லோஹியாவாதி, காந்தியவாதி என அனைவரும் காங்கிரசுக்கு எதிராக ஒன்றினைந்தனர்.

அதன்பிறகு சில நாட்களில் பட்னாவில் இருந்து படியாலா வரை எழுந்த முழக்கங்களில், 'வீதியெங்கிலும் முழக்கம், ராஜீவ் காந்தி திருடன்' என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றன. ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இருந்த வி.பி.சிங், போராட்டத்திற்கு தலைமை வகித்தார். அவர் அனைவரையும் திறமையாக ஒன்று சேர்த்தார்.

இன்று, ராகுல் காந்திக்கு முன் இருக்கும் நரேந்திர மோதி, ஐந்து ஆண்டுகளாக நல்ல நாள் வரும் என்ற கனவை மக்களுக்கு காட்டினாலும், வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் இருக்கிறார். அதற்கு மாறாக, அவர் மேற்கொண்ட பண மதிப்பிழப்பு போன்ற துக்ளக் நடவடிக்கைகளால், பல தொழில்கள் மூடப்பட்டன, வேலை வாய்ப்புகள் குறைந்தன. விவசாயிகளின் துயரங்கள் அதிகரித்தன. எல்லாவற்றிகும் மேலாக, ரஃபேல் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை எதிர்க் கொண்டிருக்கிறார்.

2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மோதியின் மீது இருந்த மாயை குறைந்துவிட்டது. மோதியின் சாயம் இந்த ஐந்து ஆண்டுகளில் வெளுத்துப்போய் உண்மை தெரிந்துவிட்டது. இப்படி இருந்தாலும், அவர் தனது தவறுகளின் பயன்களை எதிர்கட்சிகளின் கைகளுக்கு போகவிடவில்லை. நரேந்திர மோதி தனது அம்பறாத்துணியில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக பிரம்மாஸ்திரங்களை வெளியில் எடுத்து குறிபார்த்து விடுவதை பார்த்து, எதிர்கட்சிகள் திகைத்துப் போய் நிற்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :