மக்களவைத் தேர்தல் 2019: புல்வாமா, பாலகோட் சம்பவங்களுக்கு பிறகு எதிர்கட்சிகளின் வியூகம் எப்படி மாறியுள்ளது?

  • தில்னவாஸ் பாஷா
  • பிபிசி

2019 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தற்கொலைத் தாக்குதல் மற்றும் அதன் பிறகு பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பிறகு இந்திய அரசியல் நிலைமைகள் மாறிவிட்டன. மாறிய இந்த சூழ்நிலையில் எதிர்கட்சிகளின் வியூகங்களும், கூட்டணிக் கட்சிகளின் இணைப்பும் மாறுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, லோக்தள் அடங்கிய கூட்டணி காங்கிரஸ் கட்சிக்காக, ரே பரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளன.

இந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுத்திருப்பதன் அர்த்தம் காங்கிரசும் தங்கள் கூட்டணியின் அங்கம் என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். ஆனால், மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதாக காங்கிரஸ் கூறியிருக்கிறது.

இதனிடையே மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலையில், கூட்டணியின் கணக்கீடுகளில் ஏதாவது மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

"நாங்கள் பலமாக இருக்கும் இடத்தில் காங்கிரஸ் எங்களுக்கு தொகுதியைக் கொடுத்தால், அதற்கு பதிலாக நாங்களும் காங்கிரசுக்கு விட்டுக் கொடுப்போம்" என்று பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பதெளரியா கூறுகிறார் .

அவரின் கருத்துப்படி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனது வேட்பாளர்களை களம் இறக்கினாலும், அங்கு பெரிய அளவில் வெற்றி கிடைப்பதில்லை.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஏழு சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது. ராஜஸ்தானில் ஆறு தொகுதிகளில் வென்றிருக்கிறோம். எங்களது இந்த வெற்றிக்கான மரியாதை கொடுக்கப்பட்டால், கூட்டணி பேச்சுவார்த்தையை கண்டிப்பாக முன்னெடுப்போம். மதிப்புடன் ஒப்பந்தம் ஏற்பட்டால், கூட்டணி ஏன் ஏற்படாது? என்று அவர் கேள்வி கேட்கிறார்.

புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு நாட்டில் அரசியல் சூழல் மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் பதெளரியா, ஆனால் இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது என்கிறார். எங்கள் கூட்டணிக்கு வர யாருக்காவது விருப்பம் இருந்தால், வரவேற்கிறோம். அவர்கள் அகிலேஷிடமும், மாயாவதியிடமும் பேசட்டும். பேசினால் தான் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

காங்கிரஸின் நிலைப்பாடு

இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இவ்வாறு பதிலுரைக்கிறார், "சமாஜ்வாதியோ, பகுஜன் சமாஜோ, அரசியல் ரீதியாக நாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் நாட்டின் நலனுக்காக அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும், தங்கள் விருப்பப்படி தொகுதி பங்கீடு செய்துவிட்டார்கள். காங்கிரசுக்காக அவர்கள் காத்திருக்கவில்லையே? "

"தற்போது இந்த இரு கட்சிகளும் திறந்த மனதோடு எங்களிடம் பேசத் தயாராக இருந்தால், நாங்கள் அவர்களைப் பற்றி பரிசீலிக்கத் தயாராகவே இருக்கிறோம். ஏனெனில், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே தளத்தில் ஒன்றிணைத்து நாட்டை வலுவாக்க விரும்புகிறோம்" என்று கூறுகிறார் சுர்ஜேவாலா.

"எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருக்கும் எதிரானது அல்ல; நரேந்திர மோதிக்கோ அல்லது வேறு யாருக்கும் எதிரானது அல்ல. நரேந்திர மோதி பரப்பும் வெறுப்பு நிறைந்த பிரிவினைவாதத்தை தூண்டும் நாசகார சித்தாந்தத்திற்கு எதிரானது" என்று கூறுகிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்.

கடந்த சில நாட்களில் இந்திய அரசியல் நிலைமை மாறிவிட்டதை ஒப்புக்கொள்ளும் சுர்ஜேவாலா, "ராணுவத்தின் பின்னணியில் இருந்துக்கொண்டு நாட்டின் அரசியல் சூழலை தவறான வழியில் பயன்படுத்தும் பிரதமரால் அரசியல் சூழல் பாதிக்கப்படுகிறது" என்று கூறுகிறார்.

நாட்டில் நிலவும் வேலையின்மை, வாழ்வாதார பிரச்சனை, விவசாயிகள், தொழிலாளர் பிரச்சனைகள், சிறு தொழில் மற்றும் சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சனைகளுக்காக தனது கட்சி குரல் எழுப்பி அரசியல் ரீதியில் தீர்வு காணும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

"இந்த நாட்டில் ஜனநாயகம், அரசியல் சாசனம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, ஆகங்காரம் பிடித்த ஆட்சியாளரையும், அரசையும் எதிர்கொள்ள வேண்டியது அவசியம்" என்று சொல்கிறார் சுர்ஜேவாலா.

காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக் காட்டினாலும், சமாஜ்வாதி கட்சி, காங்கிரசுடன் கூட்டணி இல்லை, ஏற்கனவே அறிவித்த கூட்டணி இறுதியானது என்று உறுதியாக இருக்கிறது.

விவேகமான மக்கள் மீது நம்பிக்கை

சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் அகிலேஷ் யாதவின் ஆலோசகர் ராஜேந்திர செளத்ரியிடம் பேசினோம். "காங்கிரசுக்கு 2 தொகுதிகளை விட்டுக் கொடுக்கிறோம் என்று தலைவர் அகிலேஷ் யாதவ் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். அதன் அடிப்படையில் காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், லோக்தள் கூட்டணி தான் உத்தரப்பிரதேசத்தில் பிரதான எதிரணியாக உருவெடுத்துள்ளது. எங்களுடன் அரசின் அதிகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாக்காளர்களும் கூட்டணியில் இருக்கின்றனர்" என்று அவர் சொல்கிறார்.

"கூட்டணியில் எந்தவிதமான பேரங்களுக்கும் இடமில்லை. அதேபோல், கூட்டணி தொடர்பாக எந்த புதிய பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று கூறி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கிறார்.

புல்வாமா தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை புகுந்து தாக்கியது போன்றவை, தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ராஜேந்திர செளத்ரி கருதுகிறார்.

"மக்கள் உண்மையை அறிவார்கள். எதிர்கட்சிகள், வீரர்களின் தியாகத்தை பாராட்டியிருக்கின்றன. ராணுவத்தின் நடவடிக்கையை தங்கள் கட்சியின் வெற்றியாக யாரும் உரிமை கோர முடியாது. பொதுமக்கள் புத்திசாலிகள். தேர்தல்களில் ராணுவத்தின் பெயரை பயன்படுத்துவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.

காங்கிரஸ் குழம்பியிருக்கிறதா?

உத்தரப் பிரதேசத்தில் மகாகூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கியபோது, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் ஒன்றிணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கினாலும், கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.

இதற்கான காரணத்தைச் சொல்கிறார் சுதீந்திர பதெளரியா. "காங்கிரஸ் தற்போது வேறு யோசனையில் இருக்கிறது. தங்கள் கட்சியை விரிவாக்கி, வலுப்படுத்தும் எண்ணத்தில் இருக்கும் காங்கிரஸ், தற்போது மோதியை எதிர்க்க விரும்பவில்லை. ஆனால் இது கட்சியை விரிவாக்கும் சமயம் இல்லை, மோதியை தோற்கடிக்கும் நேரம்" என்கிறார் அவர்.

இந்தக் கேள்வியை சுர்ஜேவாலாவிடம் முன் வைத்தோம். "பணிவின் மறுபக்கம் காங்கிரஸ் என்றே சொல்லலாம். ராகுல்காந்தி அனைவருடனும் பணிவுடன் நடந்துக்கொள்ள விரும்புகிறார். பிற கட்சிக்கு எங்களைப் பற்றி தவறான அபிப்ராயம் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு எந்தவிதமான பிடிவாதமும் இல்லை."

"எங்களால்தான் கூட்டணி உருவாகவில்லை என்று சொல்வது தவறு. மகாராஷ்டிராவில் கூட்டணி ஏற்படுத்திவிட்டோம். அதேபோல், கர்நாடகா, பிஹார், தமிழ்நாடு, கேரளாவிலும் கூட்டணி முடிவாகிவிட்டது. உத்தரப் பிரதேசத்தில் சிறு கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைந்துவிட்டன. நாங்கள், தாராள மனப்பான்மையுடன் கூட்டணியை அணுகுகிறோம். பிற இடங்களிலும், வேறு கட்சிகளிடமும் கூட்டணி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம்" என்று சொல்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்.

உத்தரப்பிரதேசத்தில் தங்களை பெரிய கட்சியாக கருதிக்கொள்ளும் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும் தான், தங்களுடைய கூட்டணியை இறுதி செய்து அறிவித்தன. எனவே, எங்களுடன் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவை அவைதான் முன்னெடுக்கவேண்டும். அவர்கள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்தால் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். காங்கிரஸை அடிப்படையில் இருந்து வலுப்படுத்தும் முயற்சிகளில் பிரியங்கா காந்தி இறங்கிவிட்டார். கெளரவமான எந்த உடன்பாட்டுக்கும் காங்கிரஸின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன என்கிறார் சுர்ஜேவாலா.

பிஹாரில் காங்கிரசும், ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்றபோதிலும், கூட்டணி ஏற்பட்டுவிட்டது. தொகுதி பங்கீடு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

பிகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவின் அரசியல் ஆலோசகர் சஞ்சய் யாதவ் இவ்வாறு கூறுகிறார்: "பிகாரில் எதிர்கட்சி கூட்டணி வலுவாக இருக்கிறது. ஏறக்குறைய அனைத்து விஷயங்களிலும் முடிவு எட்டப்பட்டுவிட்டது. சில தினங்களில் யார் எங்கிருந்து போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகும்".

"2014ஆம் ஆண்டு பாஜகவும் கூட்டணி வைத்துத்தான் போட்டியிட்டது. தற்போதும் சிறுசிறு கட்சிகளை தங்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள். நாட்டின் எந்த பகுதியிலும் எதிர்கட்சிகள் கூட்டணி வைத்தால் அது வரவேற்கத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் மகாகூட்டணி உருவானால் அது இன்னும் சிறபபாக இருக்கும் என்கிறார் சஞ்சய் யாதவ்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நாட்டின் பாதுகாப்புக்காக எதிர்கட்சிகளும் அரசுக்கு ஆதரவு கொடுத்தன. இதற்கு முன்பும் இதே போன்ற தருணங்களில் நாடு ஒற்றுமையை காட்டியிருக்கிறது. ஆனால், இதுபோன்ற நாட்டு பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்கக்கூடாது என்கிறார் சஞ்சய் யாதவ்.

எதிர்கட்சிகளும் இந்த விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது. பொதுமக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பிகார் மக்கள், அரசியல் மற்றும் சமூக ரீதியாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். இந்திய ராணுவம் பாதுகாப்பு விஷயத்தில் திறமையானது என்பதும் விடுதலைக்கு பிறகு இந்தியாவை பாதுகாக்கும் அர்ப்பணிப்பு மிக்க பணியில் ஈடுபட்டுள்ளது இந்திய ராணுவம் என்பதையும் பிகார் மக்கள் அறிவார்கள் என்று சொல்கிறார் சஞ்சய் யாதவ்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று தற்போது காங்கிரஸ் தெளிவுபடுத்திவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில பிரிவு, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று எடுத்த முடிவை மத்திய தலைமை மதித்து ஏற்றுக் கொண்டது என்று சொல்கிறார் சுர்ஜேவாலா.

கூட்டணி அமையாவிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாகும்

டெல்லியில் கூட்டணி குறித்து நாங்கள் பேசினோம், ஆனால், அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறவேயில்லை என்று சொல்கிறார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்.

கூட்டணி வைக்க வேண்டியதன் அவசியத்தை முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். நாட்டின் அரசியல் சாசனம், ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவத்திற்கு, தற்போதைய அரசு, அச்சுறுத்தலாக இருக்கிறது. கோவா, அருணாச்சல் பிரதேசம், கர்நாடகா, டெல்லி, மேற்கு வங்கம் என பல இடங்களில் மாநில ஆளுநரை பயன்படுத்தி, ஆளும் கட்சிகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்று விளக்குகிறார் சஞ்சய் சிங்.

பசுவின் பெயரில் மனிதர்களை கொல்லும் அரசை, பாலியல் வன்முறை செய்பவர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தும் அமைச்சரைக் கொண்ட அரசு மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக கட்சிகள் கூட்டு சேர வேண்டும் என்கிறார் ஆம் ஆத்மிக் கட்சியின் சஞ்சய் சிங்.

இந்த புரிதல் காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இல்லை என்று வியப்பாக இருக்கிறது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் காங்கிரஸ் தனியாக போட்டியிடுவது பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகுமே தவிர வேறு எதுவும் நடைபெறப்போவதில்லை என்று சஞ்சய் சிங் கூறுகிறார்.

டெல்லி மாநில காங்கிரஸ் பிரிவுதான் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி ஏற்படாததற்கு காரணம் என்பதை சஞ்சய் சிங் ஒப்புக் கொள்கிறார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது பற்றி அர்விந்த் கேஜ்ரிவால் பல முறை கூறிவிட்டார். ஆனால், கூட்டணியை மறுக்கும் காங்கிரஸ், பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.

புல்வாமா தாக்குதல் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படுவதை சஞ்சய் சிங்கும் ஒப்புக் கொள்கிறார். நாட்டில் போர்ச்சூழலை உருவாக்கி, அரசியல் லாபம் காணும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க இந்த விவகாரம் பின் தள்ளப்படும். மீண்டும், வேலையின்மை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகள் முன்னெடுக்கப்படும். புல்வாமா தாக்குதல், பாலாகோட் தாக்குதல் போன்ற தாக்குதல்களுக்கு பிறகு மாறியிருக்கும் சூழலை சமாளிக்க, எதிர்கட்சிகள் புதிய கோணத்தில் சிந்தித்து கூட்டணி வைக்கவேண்டும் என்று கூறும் அரசியல் நிபுணர்கள், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

மூத்த பத்திரிகையாளரும், அரசியல் நிபுணருமான ஜெய்ஷங்கர் குப்த் இவ்வாறு கூறுகிறார்: "பாஜகவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரசும், பிற எதிர்கட்சிகளும் புதிய செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எதுபோன்ற கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்".

"பாலாகோட் தாக்குதல் பற்றிய கருத்துகளின் உண்மைத்தன்மை அடுத்த சில நாட்களில் வெளியாகிவிடும். அப்படி நடந்தால், மக்களின் கருத்துகள் மாறலாம்" என்கிறார் ஜெய்ஷங்கர்.

மகாகூட்டணியை ஏற்படுத்தும் பொறுப்பை காங்கிரஸ் உரிய முறையில் கையாளவில்லை என்கிறார் அவர். காங்கிரஸ், பல இடங்களில், நரேந்திர மோடியை எதிர்ப்பதா அல்லது பிராந்திய கட்சிகளை எதிர்ப்பதா என்றே முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறது என்று ஜெய்ஷங்கர் சொல்கிறார்.

உதாரணமாக, டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ். இதுபோன்ற குழப்பத்தில் இருப்பதால், தற்போது காங்கிரஸ் கூட்டணியை முடிவு செய்யும் இடத்தில் இல்லை என்று அரசியல் நிபுணர் ஜெய்ஷங்கர் கூறுகிறார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற கடமையும் சவாலும் காங்கிரசின் முன் இருந்தது. ஆனால் குறைந்தபட்சம் உத்தரப்பிரதேசத்திலும், டெல்லியிலும் பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் ஒரு வலுவான சவாலாக இருக்காது என்ற நிலை உருவாகிவிட்டது" என்று அவர் கூறினார்.

காணொளிக் குறிப்பு,

பெருநகர மக்கள் வாக்களிப்பதில்லையா?

ஆனால் பாஜகவுக்கு சவால் விடுவதற்காகவே, காங்கிரஸ், உத்தி ரீதியிலான கூட்டணி வைக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் அமேதியும், ராய்பரேலியும் காங்கிரசுக்காக காலியாக வைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல், காங்கிரசும், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் வலுவாக உள்ள தொகுதிகளை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து எதிர்கட்சிகளை வலுப்படுத்தலாம். ஆனால் மும்முனைப் போட்டி ஏற்படும் இடங்களில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்துபோய், அவர்களுக்கு சாதகமாகிவிடும்.

குறிப்பாக 2014 மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆறு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தில் இருந்தனர். அதில் இரண்டு தொகுதிகளில், 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றுப்போனது. அதுவே, பிற நான்கு தொகுதிகளிலும் இரண்டரை லட்சம் முதல் ஆறு லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் ஜெய்ஷங்கர் குப்த்.

''மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் தொகுதியை பகிர்ந்தளிக்கவில்லை என்ற நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வலுவாக இருக்கும் கட்சிகள், எதற்காக காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்? எதாவது ஒரு இடத்தில் அனுசரித்துத்தான் போக வேண்டியிருக்கும்" என்று முத்தாய்ப்பாய் முடிக்கிறார் அரசியல் நிபுணர் ஜெய்ஷங்கர் குப்த்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :