பொள்ளாச்சி வன்கொடுமை: ''பாலியல் துன்புறுத்தல் காணொளியை பரப்பினால் கடும் நடவடிக்கை''

(கோப்புப் படம்) படத்தின் காப்புரிமை CHANDAN KHANNA
Image caption (கோப்புப் படம்)

மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கை தமிழக காவல்துறையின் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவவான சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களோடு ஃபேஸ்புக் வழியாக நட்பாக பழகி, அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, ''இவ்வழக்கை திசைதிருப்ப முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

இந்த வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர் மூலமாக புகார் மனுவொன்றை தனக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர், ''இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் தனக்கு திருப்தி அளிப்பதாக அப்பெண் தெரிவித்துள்ளார். ஆனால், அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாக தனக்கு தொந்தரவுகள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.

இவ்வாறான தொந்தரவுகளை கால்துறையினர் தடுத்து நிறுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறினார்.

''இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் ஆரம்பம் முதலே தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இது மேலும் தொடர வேண்டும்'' என்று அவர் கூறினார்.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அக்கட்சி நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களோடு ஃபேஸ்புக் வழியாக நட்பாக பழகி, அவர்களை தனியிடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரீஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு சென்ற மாதம் கல்லூரி மாணவி ஒருவரை நட்பாக பேசி, பொள்ளாச்சி அருகில் உள்ள கிராமத்தில் தனி இடத்தில் அழைத்து சென்று, மிரட்டி, அடித்து துன்புறுத்தி தனது நண்பர்களோடு சேர்ந்து ஆபாச வீடியோக்களை உள்ளதாகவும், பின்பு அதனை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என்று அச்சுறுத்தி பாலியல் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பிப்ரவரி 24ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு சபரீஷ், சதீஷ், வசந்தகுமார் 28ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை மார்ச் 5ம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை , புகார் கொடுத்ததற்காக ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. அந்த கும்பலை சேர்ந்த செந்தில்,வசந்தகுமார், நாகராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகார் கொடுத்தவரை தாக்கிய நாகராஜ்

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய நாகராஜ் எனும் நபர் என்றும், பொள்ளாச்சியில் அதிமுக கட்சி பொறுப்பில் இருப்பவர், அதனால் இந்த வழக்கில் ஆளுங் கட்சியின் தலையீடு இருக்கின்றது என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து நாகராஜை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை வெளியானது. அதன் பின்பு செய்தியாளர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சந்தித்தார்.

இந்த வழக்கில் எந்தவித அரசியல் தொடர்போ, அழுத்தங்களோ இல்லை என்று அவர் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை துன்புறுத்தியது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட சபரீஷ்,சதீஷ்,வசந்தகுமார்,திருநாவுக்கரசு ஆகியோரின் மீதுபொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய குற்ற எண்.59/19, u/s. 354(A), 354(B) IPC r/w 66(E) of IT Act 2000 & 4 of Tamil Nadu Women Harassment Act ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

குண்டர் சட்டம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மிரட்டப்பட்டது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில், நாகராஜ், வசந்தகுமார் ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

காவல்துறையினர் இந்த நால்வரிடம் இருந்து நான்கு அலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர். அதில் இதே போல் நான்கு பெண்களின் வீடியோக்கள் இருந்துள்ளது. இரண்டு பெண்களை அடையாளம் கண்டுள்ளனர், மீதி இரண்டு பெண்களையும் அடையாளம் கண்டு அவர்களிடம் முறையாக வாக்கு மூலம் பெற்று குண்டர் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாரேனும் இருந்தாலும் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை காவல் துறை வெளியிடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் சமயத்தில் இருந்தே பெண்களிடம் இந்த மாதிரியான அணுகுமுறையோடு நடந்து வந்துள்ளார். ஆனால் , பாதிக்கப்பட்ட பெண்களின் முழுமையான எண்ணிக்கை, விவரங்கள் கிடைக்கவில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

திருநாவுக்கரசுக்கு உதவிய பெண் தோழி

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ராதிகா என்பவர், 2012ம் ஆண்டில் இருந்து அந்தப்பகுதியில் நடைபெற்ற இளம்பெண்கள் தற்கொலை வழக்கினை மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பொள்ளாச்சி பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் வயதுடைய பெண்களின் வழக்குகளில் ஆராய்ந்து அந்த தற்கொலைக்கும், தற்போது கைதாகியுள்ள குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதா என புலன் விசாரணை மேற்கொண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் மிக முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த பொழுது அவரின் பெண் தோழி ஒருவர் உதவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை வெளியிட இயலாது என்று தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது .இதனால் பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதனால் இது தடுக்கப்பட வேண்டும். இந்த வீடியோக்களை பரப்புபவர் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் காவல் துறை முதலில் அளித்த பத்திரிக்கையாளர் குறிப்பில் இருந்தது, பின்பு அது நீக்கப்பட்டது. இது குறித்து கேட்ட போது, இது தவறுதான், தவறுக்கு வருந்துகிறோம் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பெண்களின் நம்பிக்கையை ஆண்கள் பெறுவது எப்படி?

இந்த சம்பவம் குறித்து மன நல ஆலோசகர் எழில் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இந்த சம்பவங்களுக்கு நமது வீடும் ஒரு காரணம். இந்த நவீன உலகத்தில் அனைவரும் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். குழந்தைகளுக்கும் , பெற்றோர்களுக்கும் நடுவே உரையாடல்கள் குறைந்துவிட்டன. இந்த பெண் குழந்தைகள் தமக்கு அன்பு கிடைக்கவில்லை என்றே நினைக்கின்றனர். மனரீதியாக அன்பினையும், பாராட்டுக்களையும் இவர்கள் எதிர்பார்க்கின்றனர்'' என்றார்.

''இந்த சூழலில், நீ அழகாக இருக்கிறாய் என்பது வார்த்தைகளால் மகிழ்ச்சி அடைந்து அவர்களோடு பேச ஆரம்பிக்கின்றனர். சின்ன சின்ன அன்பான விசாரிப்புகளில் பெண்கள் பலவீனம் அடைந்து விடுகின்றனர். அந்த ஆண் என்ன சொன்னாலும் செய்யலாம் என்று நம்பிக்கை அவர்களுக்கு வந்துவிடுகின்றது.'' என்று மேலும் கூறினார்.

பெண் குழந்தைகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்க வேண்டும்.அவர்களின் சுய மதிப்பீட்டினை வளர்க்கும் விதமாக பள்ளி கல்லூரிகளில் பல செயல்முறைகளை கொண்டுவர வேண்டும். அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் பாராட்டுக்களை அடையும் பொழுது இது போன்ற செயல்களில் ஈடுபட அவர்களுக்கு நேரமோ, ஆர்வமோ இருக்க வாய்ப்பில்லை. எனவே, இது போன்ற சிக்கல்களில் இருந்து பெண்கள் தங்களை விடுவித்துக் கொள்ள பெற்றோர்களும், அரசும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். என்கிறார் எழில்.

இதற்கான தீர்வு என்பது அவர்களுக்கு இன்னும் அதிகமாக கவனிப்பும், கற்பித்தலும் தேவைப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. பெண்களை மதிக்கக் கற்றுத் தரும் கடமை ஆண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிகமாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஷாஜகான் மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :