மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய வழக்கு: நிர்மலா தேவிக்கு ஓராண்டிற்குபின் ஜாமீன்

நிர்மலா படத்தின் காப்புரிமை Facebook

தன்னிடம் பயின்ற கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்குத் தூண்டிய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த நிர்மலா என்பவர் அந்தக் கல்லூரியின் கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் துவக்கத்தில் ஒலிநாடா ஒன்று வெளியானது.

அந்த ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.

அதற்கு சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.

இவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது. இந்த ஒலிநாடா வெளியானதும் நிர்மலாதேவி கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் பிறகு ஏப்ரல் 16ஆம் தேதியன்று அவரைக் காவல்துறை கைது செய்தது.

படத்தின் காப்புரிமை DEVANGA ARTS COLLEGE

இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், இந்த வழக்கு மாநில குற்றப்பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்தார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தன் தரப்பை விளக்கினார்.

இந்த விவகாரத்தில் மதுரைப் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் செல்லத்துரையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நிர்மலா தேவி மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 370 (1), (3) 120 (B) 354 (A) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடபுடைய முருகன், கருப்பசாமி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கு அசாதாரணமான வழக்கு என்பதால், இதனை மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறையிடமிருந்து மாற்றி, மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 4ஆம் தேதியன்று நடந்தபோது, நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டது இத்தனை நாட்கள் கடந்த பிறகும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நிர்மலா தேவி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஊடகங்களிடம் பேசக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்